செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருவதைவிட, அவர்களின் தகவல் பரிமாற்றங்களை நாங்கள் புரிந்துகொண்டு வழிகாட்டுகிறோம்” என்கிறார் சரஸ்வதி சுந்தர்.
கடந்த 27 ஆண்டுகளாக பாண்டிச்சேரியில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளியை நடத்திவரும் சரஸ்வதி சுந்தர் ஒரு ஆசிரியர். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான கல்விப் பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்.
மும்பையில் செவித்திறன் குறைபாடு கொண்டோருக்கான ஒரு தேசிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் இது போன்ற பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று சரஸ்வதி நினைத்தாராம்.
“பாண்டிச்சேரி, அதன் சுற்றுப்புறங்களில் உள்ள செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு பள்ளி இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் இங்கு பச்சையப்பன் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான பள்ளியைத் தொடங்கினேன்” என்கிறார் சரஸ்வதி.
தொடக்கத்தில் ஆறு மாணவர்களுடன் ஒரு சிறு வீட்டில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரு சிறு பள்ளியை அமைத்தார் சரஸ்வதி.
“ஆனால், அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது பத்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பள்ளி இயங்கிக்கொண்டு இருக்கிறது” என்கிறார் அவர்.
இடப் பற்றாக்குறை காரணமாகத் தொடக்கப் பள்ளி ஒரு இடத்திலும், உயர்நிலைப் பள்ளி ஒரு இடத்திலும் இயங்குகின்றன. ப்ரீகேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
“இப்போது எங்கள் பள்ளியில் 80 குழந்தைகள் படிக்கிறார்கள். இதுவரை சுமார் 700 குழந்தைகள் எங்கள் பள்ளியிலிருந்து பயின்று மேற்படிப்புக்குச் சென்றிருக்கிறார்கள்” என்று சற்றுப் பெருமையுடன் கூறுகிறார் சரஸ்வதி.
இது போன்ற பள்ளிகளின் சேவையைப் பாராட்டி நன்கொடை வழங்குபவர்களின் நிதியால்தான் இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது என்று சரஸ்வதி கூறுகிறார். மத்திய அரசின் நிதி ஆதரவும் வருவதால் கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கிறது என்கிறார் அவர்.
“மாதம் ஒரு மாணவரிடமிருந்து 500 ரூபாய் வரை வாங்குகிறோம். அதையும் தர இயலாத மாணவர்களுக்கு யாராவது ஸ்பான்சர் செய்கிறார்கள்” என்று கூறுகிறார் சரஸ்வதி.
செவித்திறன் குறைபாடு, குழந்தைக்குக் குழந்தை வேறுபடுகிறது. இந்தத் துறையில் பணியாற்ற தனியாகப் பயிற்சிகள் இருக்கின்றன. இந்தத் துறையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் கிடைப்பது அரிதுதான் என்று அவர் கூறுகிறார். சரஸ்வதி நடத்தும் பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
“செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கும் ஒரு தகவல் மொழி இருக்கிறது. மாணவர்களின் தகவல் பரிமாற்ற சைகை மொழி எங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துவிடுகிறது. அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டு அவர்களுக்கே கற்றுத் தரும்படி ஆகிவிடுகிறது” என்று புன்னகைக்கிறார் சரஸ்வதி.
பள்ளி தொடங்கியதிலிருந்து 13 பேட்ஜ் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேறிப் போயிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
“மற்ற குழந்தைகள் என்ன படிக்கிறார்களோ, அதே பாடத்திட்டத்தைத்தான் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்று சொல்கிறார் சரஸ்வதி.
செவித்திறன் குறைபாடு உள்ள பள்ளியில் படித்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்குப் பிறகு மற்ற மாணவர்களுடன் ப்ளஸ் டூ படித்துவிட்டு பட்டமும் படித்திருக்கிறார்களாம். சரஸ்வதியின் பள்ளியில் படித்து பி.டெக்., முடித்த மாணவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறுகிறார் சரஸ்வதி.
“நிதிப் பற்றாக்குறை வரும்போது மிகுந்த சோர்வு வந்திருக்கிறது. பள்ளியை நடத்த முடியுமா என்ற கேள்விகளும் வந்தது உண்டு. சொந்தப் பணம் நிறைய முதலீடு செய்து பள்ளியை மேலே கொண்டு போயிருக்கிறேன். ஆனால், இதைத் தொடர வேண் டும் என்ற உத்வேகம் தான் என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது” என்று உறுதி காட்டுகிறார் சரஸ்வதி.
“இதைத் தொழிலாகச் செய்ய முடியாது. இதை சேவையாக நினைத்துச் செய்தால்தான் தொடர முடியும்” என்று புன்னகைக்கிறார் அவர்.
பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும்போது குறைபாடு எதுவும் இல்லாத மாணவர்களுக்கு இணையாக புதிய காட்சிப் பொருள் செய்து செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் அசத்தும்போது அதிசயமாக இருக்கிறது என்று கூறுகிறார் சரஸ்வதி.
சரஸ்வதியின் கணவர் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். அவருடைய குழந்தைகள் பெரியவர்கள் ஆகி வேறு துறைகளில் பணி புரிகிறார்கள். சரஸ்வதிக்கு உறுதுணையாக அவருடைய சகோதரர் இருந்து வருகிறார்.
செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களைப் பல வீடுகளில் பெரிதாகக் கவனம் கொடுப்பதில்லை. மாணவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனைகள் தரப்பட வேண்டும் என்கிறார் சரஸ்வதி.
“செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களையும் சமூகத்தில் அடையாளம் கொண்டவர்களாக, அங்கீகாரம் அடைபவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் இலக்கு” என்று கூறுகிறார் சரஸ்வதி.