திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆரிப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் அலி (24). இவர் தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றிருந்த போது, எதிரே சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பேருந்தை கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஓட்டுநர் பெரியசாமி இயக்கி வந்துள்ளார். அப்போது கசிநாயக்கன்பட்டி பகுதியில் சாதிக் அலி, அரசு பேருந்து ஓட்டுனர் எதிரே வரும்போது ஆபாச வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. அதன்காரணமாக, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றிப்போக, சாதிக் தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர்களிடம், அரசு பேருந்தின் எண்ணை குறிப்பிட்டு, திருப்பத்தூர் நோக்கி தற்போது இந்த பேருந்து வந்து கொண்டிருப்பதாகவும், அதனை நிறுத்துமாறும் கூறியுள்ளார். அதன்பின் சாதிக், ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே அரசு பேருந்தை விழிமறித்து ஓட்டுனர் பெரியசாமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்து ஓட்டுனர் பெரியசாமி பேருந்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக அந்தபகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் உதவி காவல் ஆய்வாளர் அகிலன் சாலையில் இடையூராக இருந்த பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தார். பின்னர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி கூடி இருந்தவர்களை கலைந்துபோக செய்தார்.