day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வாட்ஸ் அப்  மூலம்கொட்டும்  வருமானம்! – ஷண்முகப்பிரியா

வாட்ஸ் அப்  மூலம்கொட்டும்  வருமானம்! – ஷண்முகப்பிரியா

எப்போதும் வாட்ஸ் அப்பும் கையுமாக இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்று பலர் நினைக்கலாம். ஆனால், வாட்ஸ் அப்தான் தன்னை வாழ வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஷண்முகப்பிரியா. சிறு நெருப்புக் குச்சியை வைத்து விளக்கையும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம். ஷண்முகப்பிரியா முதல் வழியைத் தேர்ந்தெடுத்து, பலரது குடும்பங்களில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்.  வீட்டில் சிறியதாகப் புடவை கடையைத் தொடங்கி விருது பெறும் அளவுக்கு முன்னேறுவதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என்கிற நினைப்பைத் தன் வெற்றிமூலம்  மாற்றிக்காட்டியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த இவர் ‘unique threads sarees’  என்ற நிறுவனத்தை 2013-ல் சிறிய அளவில்  தொடங்கினார். இப்பொழுது இவரிடம் விற்பனையில் 7000 பேர் இணைந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சிக்காகப் பல விருதுகள் வாங்கியுள்ளார். வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது, இவர் அடைந்திருக்கும் உயரத்துக்குச் சாட்சி.

இந்தத் தொழிலை எப்போது, ஏன் தொடங்கினீர்கள்?

இந்தத் தொழிலை விருப்பத்துடன் தொடங்கவில்லை.  இந்தத் தொழிலை ஆரம்பிக்கும்பொழுது எனக்குப் புடவைகள் பற்றியோ துணிகள் பற்றியோ எந்த விதமான தெளிவும் இல்லை . ஆனால், நாம் கையில் எடுத்ததைச் சரியாகச் செய்ய வேண்டும்,  அதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  எந்தவொரு உற்பத்தியாளரிடம் சென்றாலும் புடவைகள் குறித்து அவற்றின் ரகம் குறித்துத் தீர விசாரித்து ஆராய்ந்தேன் . அப்படிச் செய்யும்பொழுதுதான் இந்தத் தொழிலின் மீது ஆர்வம் அதிகமானது. துணிமணிகள் ஒரு தனி உலகம்.  ஜெய்ப்பூர் சென்றால் காட்டன் கிடைக்கும், ஆந்திராவுக்குச்  சென்றால் போச்சம்பள்ளி கிடைக்கும், காஞ்சிபுரம் சென்றால் பட்டு கிடைக்கும், ஈரோடு, சேலம் சென்றால் சில்க் காட்டன் கிடைக்கும்.  துணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் அதிகமாகப் பயணிக்க ஆரம்பித்தேன். அதிலிருக்கும் தனித்தன்மையை மக்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள புதுப்புது உத்திகளைக் கையாண்யேன். புடைவைகளுடன் பர்ஸ், மாஸ்க், வளையல் போன்றவற்றைக் கொடுத்தேன். அது எனக்குத்  தனி அடையாளத்தைக் கொடுத்தது. வாடிக்கையாளர்களும் மகிழ்ந்தனர்.

ஆன்லைனில் ஆடைகளை விற்கும் எண்ணம் ஏன் தோன்றியது?

ஆடை விற்பனை பற்றி அதிகம் தெரியாமல், துணிகளை வாங்கிவந்து வீட்டிலேயே விற்றபோது வாடிக்கையாளர்கள் அவற்றைப் பிரித்துப்பார்த்து கசக்கி, அடுத்த வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியாத நிலையை உண்டாக்கினார். வாங்கிய ஆடைகளை விற்றுவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்தேன். இது குறித்து என் தோழியிடம் பேசிய போது அவள்தான் ஆன்லைனில் விற்பனை செய்யும் யோசனையைக் கூறினாள். அதன் பிறகு வாட்ஸ் அப் குரூப் மூலமாகவும், முகநூல் மூலமாகவும் என் தொழிலை வளர்த்தேன்.

முதலில் என் உறவினர்களும் தோழி களும் மட்டுமே வாடிக் கையாளர்களாக இருந்தார்கள். பின்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இல்லத்தரசிகள் இதுபோல ஆன்லைன் விற்பனையில் ஈடுபடலாமா? முதலீடு அதிகமாகத் தேவைப்படுமா ?

கண்டிப்பாக முதலீடு இருந்தால்தான் ஒரு தொழிலைத் தொடங்க முடியும். உங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடாகப் போடுங்கள். ஆனால், இதற்குக் குறைந்தபட்ச முதலீடே போதும். 5000 ரூபாயை வைத்து எத்தனை ஆடைகள் வாங்கலாம்,  அதில் இருந்து எவ்வளவு வருமானம் எடுக்கலாம் என்று பார்க்க வேண்டும். பின்பு கிடைத்த வருமானத்தை வைத்து அந்தத் தொழிலை மேலும் வளர்க்க வேண்டும். முதலில் 20,000 ரூபாய்க்குப்  புடவைகள் வாங்கிய நான் இப்பொழுது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஒரு லட்சம்வரை முதலீடு செய்கிறேன்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? வீடு, வியாபாரம் இரண்டையும் சமாளிக்க முடிகிறதா?

என் கணவர் எனக்குப் பெரிய பக்கபலமாய் இருக்கிறார் . 75,000 ரூபாய் ஊதியத்தில்  நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தபோது அவர்தான் என்னை ஊக்குவித்தார். என்னை நம்பி என் தொழிலில் முதலில் முதலீடு செய்தவர் என் அம்மா. இந்தத் தொழிலைத் தொடங்கும்பொழுது என்னை நம்பி ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார்கள். ஒரு வருடத்திலேயே நான் லாபம் ஈட்டி அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். என் குடும்பத்தினர் பக்கபலம் என்பதைவிட உணர்வுபூர்வமான பங்களிப்பைக் கொடுத்தனர்.

இதில் சந்தித்த சவால்கள் என்னென்ன, அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?

இந்தத் தொழிலில் உற்பத்தியாளர்களிடம் நான் செல்லும்பொழுது , 100 புடவைகள் ஒரே நேரத்தில் வேண்டும் என்று கேட்டால்  அதை நம்பத் தயங்குவார்கள் . என்னால் எப்படி அவற்றை வாங்க முடியும் என்று நம்ப மறுப்பார்கள் . ஆனால்,  இப்பொழுது என்னைத் தேடி வந்து புடவைகளை விற்றுத்தரக் கேட்கிறார்கள். உலகம் முழுவதும் விற்பனை செய்வதால் இரவு நேரங்களிலும் அழைப்பு வரும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதது வருத்தத்தைத் தந்தது. வாடிக்கையாளர்களின் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதும் பெரிய சவாலாகவே இருந்தது. இவை அனைத்தையும் என்னுள் இருந்த மன உறுதியாலும், என் குடும்பத்தினர் ஒத்துழைப்பினாலும் கடந்து வந்தேன்.

தொழில்நுட்ப அறிவும் கல்வியறிவும் இருந்தால்தான் ஆன்லைன் பிசினஸில் சாதிக்க முடியுமா?

இதில் அறிவு என்பதை விட நீங்கள் பல சோதனைகள் செய்து அனுபவம் பெற வேண்டும். ஆரம்ப காலத்தில் ஆன்லைனில் வெறும் உடைகளை மட்டுமே விற்றனர். ஆனால், இப்பொழுது உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், நகைகள் என எவ்வளவோ முன்னேறிவிட்டனர். அதனால், நீங்கள் முதலில் சோதனை செய்து பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அனுபவம் அடைய முடியும். உங்கள் தனித்துவத்தை எடுத்துரைத்தால், வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை, வளர்த்தால் கண்டிப்பாக முன்னேறலாம்.

இந்த எட்டு ஆண்டுகளில் நான் சம்பாதித்தது என் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத்தான். நாங்கள் உடைகளில் ஏதேனும் சேதம் இருந்தால் அதை நாங்களே சென்று எடுத்துவந்து மாற்றிக் கொடுப்போம் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம். தரம் மற்றும் நம்பிக்கையை வளர்த்தால் கண்டிப்பாக முன்னேறலாம்.

இப்போது எந்த அளவுக்கு உங்கள் தொழிலை விரிவாக்கியுள்ளீர்கள்? வருமானம் எந்த அளவுக்கு இருக்கிறது?

எட்டு வருடங்களுக்கு முன் இரண்டு பேர் பணியாற்றிய இடத்தில் இன்று 20 பேர் பணியாற்றுகின்றனர். தொழிலைப் பொறுத்தவரை இவ்வளவு வருவாய் வந்தால் போதும் என்று நிறுத்திவிட முடியாது. இன்று என்று நிறுத்திவிடாமல் நாளை புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்து வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கிய விருது குறித்துச் சொல்லுங்கள்?

முதலில் கலிஃபோர்னியாவில் இருந்து வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு குறுந்செய்தி அனுப்பியபோது என் நண்பர்கள்தான் ஏதோ விளையாடுகின்றனர் என்று எண்ணி தவிர்த்துவிட்டேன். பின்பு சில நாட்கள் கழித்து மீதும் குறுஞ்செய்தி வந்தபோது எனது மின்னஞ்சல் வழியே என்னை தொடர்புகொள்ளச் சொல்லியிருந்தேன். அதைத் தொடர்ந்து காணொலியில் பதிவு செய்ய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வந்து இங்கேயே தங்கி எங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு அவற்றைப் பரிசீலனை செய்தனர். பின்பு எங்களைப் பற்றிய குறும்படத்தை வாட்ஸ் அப். காம் என்கிற இணையத்தளத்தில் வெற்றிக் கதைகள் என்கிற தலைப்பில் வெளியிட்டனர். அது என்னால் மறக்க முடியாத நிகழ்வு. டெல்லியில்  நான் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

அதேபோல் யுனெஸ்கோ முகநூல்  மூலம் டாப் 20 பெண்களில் ‘வீ தி வுமன்’ என்கிற விருதைப் பெற்றதும் மறக்க முடியாத நிகழ்வு. பல நாளிதழ்களில் முதல் பக்கத்தில் என் பேட்டி இடம்பெற்றது. அதனால், எதையும் எதிர்பார்க்காமல் நமது இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி நிச்சயம்.

புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள் எவற்றில் கவனமாக இருக்க வேண்டும்?

நீங்கள் காணும் கனவைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்திவிட்டுச் செயலில் இறங்குங்கள். அதில் வெற்றி கிடைத்தால் அதைத் தலைகனமாக மாற்றிக்கொள்ளாமல் , தோல்வியினால் மனம் உடைந்து போகாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் அது நல்ல அனுபவங்களைப் பெற்றுத்தரும்.

ஆரம்பத்தில் என்னை ஏளனமாகப் பேசியவர்களை எதிர்த்து நான் நடந்ததால்தான் இன்று அவர்கள் என் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு உங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு என் கணவரும், என் அலுவலகப் பணியாளர்களும் தான் காரணம். உங்களை ஊக்குவிக்கும் நபர்களை உடன்வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை வளமாகும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!