day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வரலாற்றில் இருந்து வேலுநாச்சியாரை நிராகரிக்க முடியுமா?

வரலாற்றில் இருந்து வேலுநாச்சியாரை நிராகரிக்க முடியுமா?

 

குடியரசு தின அணிவகுப்பில் வேலுநாச்சியார் சிலையை நிராகரித்த மத்திய அரசு, “வேலுநாச்சியார் யார் என்றே தெரியவில்லை” என்று கூறியதற்கு, “பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கே தண்ணி காட்டிய முதல் வீரப் பெண்தான் வேலுநாச்சியார்” என்று வீர முழக்கமிட்டனர் தமிழர்கள். ஆம், உண்மைதான். வட இந்தியாவில் ஜான்சியின் ராணியாக விளங்கிய லஷ்மி பாய், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதுதான் இந்திய அளவில் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. இவருக்கு முன்பே பிரிட்டிஷ் படைக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய  தமிழகத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார் பெயர் இந்திய அளவில் கொண்டு சொல்லப்படவே இல்லை என்பதுதான் இப்படியான நிராகரிப்புக்கு ஆதாரமாக இருக்க முடியும். 

 

குடியரசு தின விழா அணி வகுப்பு ஊர்வலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்டோரை மத்திய அரசு நிராகரித்தது. குடியரசு தின விழாவுக்கு வரும்  சர்வதேசத் தலைவர்களுக்கு வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களைத்  தெரியாது என்பதால் நிராகரிக்கப்பட்டது என மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. 

 

வேலுநாச்சியாரைப் பாராட்டிய பிரதமர் 

 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எம்பி  சு.வெங்கடேசன்  உட்படப் பலரும் இதற்குக்  கண்டனம் தெரிவித்ததோடு இது குறித்துக் கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியிருந்தார். வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருடைய வீரத்தைப்  பறை சாற்றும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்படியான வீரச் செறிவு மிக்க வேலுநாச்சியாரை  மத்திய அரசு நிராகரித்தது தமிழர்களை அதிருப்தி அடையச் செய்தது.  இதையடுத்துப் பலரும் வேலு நாச்சிரியாரின் வீரத்தையும் போராட்டத்தையும் பதிவிட்டனர். 

 

ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் தாய் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்த ஒரே மகள் வேலுநாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறை இல்லாமல் இருக்கவே வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள்வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் வேலு நாச்சியார் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் பிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். கல்வி நிர்வாகத்திறன், போர்ப் பயிற்சி என அனைத்திலும் கெட்டிக்காரியகாகத் திகழ்ந்தார். இவ்வளவு திறமையைப் பெற்ற வேலுநாச்சியார், தன் இளமைப் பருவத்திலேயே சிவகங்கை மன்னரான முத்துவடுகநாத பெரியஉடையத் தேவரை மணந்து சிவகங்கை சீமைக்கு ராணியானார்.  முத்துவடுகநாத தேவருக்குப் பெரிதும் துணை நின்றவர்கள் பிரதானி தாண்டவராயப் பிள்ளை, ராணி வேலு நாச்சியார் தளபதிகளான மருதுசகோதரர்கள்  இருந்தனர்.  நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருந்த வேலு நாச்சியாருக்கு அழகான பெண் குழந்தை  பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘வெள்ளச்சி’ எனப் பெயர்சூட்டி சீமையே கொண்டாடியது. இப்படி வீர தீரமிக்க வேலு நாச்சியர்  எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

 

புலியைக் கொன்ற வீர மங்கை 

 

ஒரு முறை  கணவருடன் குற்றாலம் சென்ற போது கணவரைப் புலி தாக்கியது. அப்போது புலியின் வயிற்றை நோக்கி வேலுநாச்சியார் ஒரு உதை விட்டார். அந்தத் தாக்குதலில்  தூரமாகப் போய் விழுந்த அந்தப் புலி வேலுநாச்சியாரைத் தாக்க வேகமாகப் பாய்ந்தது. மிகச் சமார்த்தியமாக அவர் ஒதுங்கினார். இதில் மரத்தில் அடிபட்டு இறந்தது புலி. இதைக் கண்ட அவருடைய கணவர் வியந்து போனார். அதே போன்று மற்றொரு முறை கப்பம் கேட்டு ஆங்கிலேயர்கள் வந்து முத்து வடுகநாத தேவரைச் சந்தித்துப்   பேசினர். அப்போது அவர் ஆங்கிலம் தெரியாமல் முழித்த நிலையில் உடனடியாகத்  தலையிட்டு  ஆங்கிலத்தில் பேசிச் சமாளித்தார் வேலுநாச்சியார். இப்படிப்  பல திறமைகளுடன் விளங்கினார் வேலுநாச்சியார்.

 

இப்படிப் பலவிதத் திறமையோடும், பெருமையோடும் விளங்கிய  வேலுநாச்சியார், திருமணமான கொஞ்ச காலத்திலேயே சோகத்தையும் நாட்டையும் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். முத்துவடுகநாத தேவர், கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையும் நவாப் படையும் இணைந்து அவர் மீது படையெடுத்தன. காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதரும் அவரது இளைய ராணியான கௌரி நாச்சியாரும் வீரமரணமடைந்தனர். இந்தச் செய்தியைக் கேட்டதும் வேலுநாச்சியார் இடிந்துபோகிறார். என்னதான் வீரமங்கையாக இருந்தாலும் கணவனின் மரணம், மனைவிக்குக் கடும் அதிர்ச்சியைத்தானே தரும். அந்த அதிர்ச்சியில் தான் வேலுநாச்சியாரும் இருந்தார். அதிலிருந்து அவரை மீளச் செய்வதற்குத் தயாராயினர், பிரதானி தாண்டவராயரும், அவருடைய படைத் தளபதிகளான  மருது சகோதரர்களும். முதலில், அவர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டனர். பிறகு, வேலுநாச்சியாருக்கு நம்பிக்கை வாக்குறுதிகளைக் கொடுத்தனர். எப்படியாவது இழந்த சிவகங்கைச் சீமையை மீட்டே தீருவோம் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது.

 

கொரில்லா  தாக்குதல்  நடத்திய முதல் பெண் 

 

நாட்டையும், மக்களையும் காப்பதற்காகத் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார் வேலுநாச்சியார். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், தண்டவராயர் மற்றும் மருது சகோதரர்கள் துணையுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி பாளையத்துக்குச் தப்பிச் சென்றார். ஏழாண்டுக் காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தார் வேலுநாச்சியார். இதற்கிடையில்,  தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தாண்டவராயர் முயற்சியினால், சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்துபேசி விடுதலைப் படை ஒன்றை உருவாக்கினர். இந்த நிலையில், விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்த வேலுநாச்சியார், திண்டுக்கல்லில் இருந்த மைசூரு மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்து ஆங்கிலேயர்களின் எதிர்ப்புக் குறித்து உருதுமொழியில் விளக்கிப் பேசினார். இவரின் திறமையைக் கண்டு வியந்து நின்ற ஹைதர்அலி, போருக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தார். அவ்வாறே ஆற்காடு நவாப்பையும் ஆங்கிலேயர்களையும் ஒழித்துக்கட்ட ஹைதர் அலி முடிவுசெய்து, அதற்கான திட்டங்களை வகுத்தார். இதற்கிடையில், ”சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாப்பிடமிருந்து மீட்பதற்காக நீங்கள் கேட்ட படைகளை திண்டுக்கல் கோட்டை அருகே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என வேலுநாச்சியாருக்குக் கடிதம்  அனுப்பினார் ஹைதர் அலி. அதன்படி வேலுநாச்சியார், அந்தப் படைகளோடு சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார்.  படைகளோடு திரும்பி வரும் வழியில் ஆற்காடு நவாப் படைகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தின. அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு வரும் வழியில், மதுரை கோச்சடை என்னுமிடத்தில் ஆங்கிலேயர் – ஆற்காடு நவாப் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது வேலுநாச்சியார், கொரில்லா  போர்முறையைப் பயன்படுத்தி அந்தப் படைகளை ஓட ஓட விரட்டியத்தார். தனது படைகளைச் சிவகங்கை, திருப்பத்தூர், காளையார் கோவில் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து கொரில்ல தாக்குதல் நடத்தி இழந்த ராஜ்ஜியங்களை மீட்டார் வேலுநாச்சியார். 

 

வேலுநாச்சியார் இல்லாத வரலாறா?

 

வேலுநாச்சியாரின் வீரத்தில்  ஒரு சில பகுதிகளை மட்டுமே நாம் படித்திருக்கிறோம். அவருடைய  வீரசாகசங்களையும் அறிவாற்றலையும்  போற்றுவதற்கும் புகழ்வதற்கும் ஏராளமாக இருக்கின்றன. பெண்களின் வீரத்திற்கும் தைரியத்திற்கும் முன்னோடியான இந்த வீரத்தாயின்  பெருமையைப்  பேசாமல் வரலாறுகள் முடிவடைந்துவிடாது . அப்படி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள வேலுநாச்சியாரை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்றால்  மொத்த வரலாறுகளையும் திரித்து  எழுத வேண்டியிருக்கும் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள். அதனால், வரலாற்றில் இருந்து அவரை நீக்கி விட்டு வரலாற்றைப் பேச முடியாது. அப்படி நீங்காத இடத்தைப் பிடித்துள்ள வேலு நாச்சியாரைத் தெரியாது என்று   கூறுவது  தென்னகச் சுதந்திரப் போராட்ட வரலாற்றையே மறைப்பதற்குச் சமம் என்று கொதிக்கிறார்கள் வரலாற்று ஆரவலர்கள்.  

 

மத்திய அரசின் செயலைக் கண்டித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துவரும் நிலையில், தமிழ எம்.பி. கனிமொழி மத்திய அரசின் செயலைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய  அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார்  போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். வீரத்திருமகளின்  வரலாற்றை  மறைத்தவர்கள், இந்திய அளவில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.  வேலு நாச்சியரின் புகழ் அறிந்து அவரை நிராகரிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். 

 

இன்று திரையில் பாகுபலியின்  தேவசேனையைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் இளைய  தலைமுறைக்கு மத்தியில் அன்று  இந்திய நாடே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில்  தன் சொந்த நாட்டையும் இழந்து, முடிதுறந்த ஒரு பெண் நெஞ்சுரத்தோடு  போராடி  வெள்ளையர்களை வீழ்த்தி, மீண்டும் அரியணை ஏறிய நிகழ்வை எப்படிப் பார்க்க வேண்டும்?  எப்படிக் கொண்டாட வேண்டும்? தாய்த் திருநாட்டிற்காக இன்னுயிரைப் பணயம் வைத்துப் போர் புரிந்த அந்த வீர மங்கைகளைத்  தொடர்ந்து முன்மொழியத் தவறுவதும், மறப்பதும் கூட  ஒரு வகையில் வரலாற்றுப் பிழையும், தேசத் துரோகமுமே ஆகும். வீரத்தில் ஜான்சி ராணிக்கும் முன்னோடி வேலுநாச்சியார் தான். வேலு நாச்சியாருக்குப் பிறகு 85 ஆண்டுகள் கழித்துத்தான் ஜான்சி ராணிக்கு ஆங்கிலேயரை எதிர்க்கும் துணிச்சல் வந்தது. பன்மொழிப் புலமை, ராஜ தந்திரம் ஆகியவற்றில் சிறந்த வேலுநாச்சியார், இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுதாரணம். வரலாற்றில் கம்பீரமாக நிலைத்துள்ள வேலுநாச்சி  யாரை  நீங்கள்  குடியரசு தின விழாவில் நிராகரிக்கலாம். ஆனால், வரலாற்றில் இருந்து நிராகரிக்க முடியாது என்பதே நிதர்சனம்! 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!