வேலூர்மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ராமநாயனி குப்பம் கிராமத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (39) கிராம ஊராட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலர் அரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரின் தம்பிக்கு நியாய விலைக்கடையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 லட்சம் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அரி பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதுடன் மட்டுமில்லாமல் ராஜசேகரையும் வேலையில் இருந்து நிறுத்தப்போவதாக கூறியுள்ளார். இத்துடன், மேற்கொண்டும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பணத்தையும் இழந்து வேலையும் பறிபோய்விடுமோ என்ற விரக்தியில் மனமுடைந்த ராஜசேகர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்ப இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜசேகர் இறப்பதற்கு முன் எழுதிய மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர். அந்தகடிதத்தில் தனது இறப்புக்கு கவுன்சிலர் தான் காரணம் என ராஜசேகர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், ராஜசேகரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.