சென்னை சென்ரலில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சைக்காக பலர் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், இன்று காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியகளுடன் இணைந்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் வெளியேற்றினர். முன்னதாக தீயணைப்பு துறையின் ஒரு பிரிவினர் மளமளவென பரவிக்கொண்டு இருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தசம்பவத்தின் போது ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துள்ளது. மேலும், மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் வெளியாகி உள்ளது.