திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சாலையை இணைக்கும் கொட்டாற்றின் மேம்பால பணிகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியின் போது பூமி பூஜை போடப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகளை சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகின்றார். இதற்கிடையில், நேற்று நள்ளிரவில் மேம்பால பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ இரும்புத் தகடுகளை மினி லாரி மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அறிந்த மேம்பால ஒப்பந்த பணிகளின் மேலாளர் ரமேஷ் உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், இரும்புத் தகடுகளை கொள்ளையடித்துச் சென்றதாக வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரவீன் மற்றும் பசுபதி ஆகிய இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரவீன் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பசுபதியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த மினி லாரி மற்றும் இரும்புத் தகடுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.