15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்று மாலை 7.30 மணிக்கு மோதியது. புனே மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி விதித்த 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, குஜராத் அணி வெற்றி பெற்று அடுத்த ப்ளே-ஆப் சுற்றுக்கு இந்ததொடரின் முதல் அணியாக குஜராத் அணி முன்னேறியது. இந்ததொடரின் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், இந்ததொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள லக்னோ அணி 8 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல, குஜராத் அணியும் 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 9 ஆட்டத்தில் வெற்றியும், 3 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.