day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஆவேன் சொல்கிறார் ராஜேஸ்வரி பிரியா

முதலமைச்சர் ஆவேன் சொல்கிறார் ராஜேஸ்வரி பிரியா

ஒவ்வொரு கால கட்டத்தில் மக்களின் விருப்பமாகவோ அல்லது ஒரு வரலாற்றுத் தேவையாகவோ அரசியல் கட்சிகள் உருவாகின்றன. சில கட்சிகள் நிலைத்து நின்று விடுகின்றன. பல கட்சிகள் மத்தாப்பூ போல ஜொலித்துவிட்டு மறைந்து விடுகின்றன.
மக்கள் செல்வாக்கை நம்பி கட்சி ஆரம்பித்த தலைவர்களை மக்கள் அங்கீகரித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். பணத்தையோ, சாதியையோ, மதத்தையோ நம்பி கட்சி ஆரம்பித்த பலரை மக்கள் புறக்கணித்துத்தள்ளிய வரலாறும் உண்டு. அரசியல் ஆண்களுக்கானது என்பது நம் கலாச்சாரத்தில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதை மாற்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்களுக்கு இணையாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார் ராஜேஸ்வரி பிரியா. அவர் தனது அரசியல் பயணம் குறித்து நம்மிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி : அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
பதில் : நான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி முதன்முதலாகப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இந்தக்கேள்வியை முன்வைத்தார்கள். அப்போதுதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. அரசியல்மீது சிறுவயதில் இருந்தே மிகப்பொிய ஆர்வம் இருந்தது. அதனால் அரசியலை விடவும் முடியவில்லை. அதேபோல வேறு எந்தக் கட்சிக்காவது போனால் ஏதோ ஒன்று தடுக்கிறமாதிரியான ஒரு எண்ணம். இன்னொன்று, பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் நான் உறுதியாக இருந்ததால் தனி அரசியல் கட்சி தொடங்கினேன்.
கேள்வி : கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் பற்றி சொல்லுங்க?
பதில் : தேர்தல் அனுபவம் என்பது ரொம்ப அவசியமானது. வேட்புமனு தாக்கல் செய்வதில் இருந்து தொகுதி மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பது வரைக்கும் உள்ளடக்கியது தேர்தல் அனுபவம். நான் ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்து வெளியில் வந்ததால், கட்சியை உடைத்து அதில் இருந்தவர்களை தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டார் என்று நினைப்பார்கள். ஆனால், அது உண்மையில்லை. நான் கட்சி தொடங்கியது பூஜ்ஜியத்தில் இருந்துதான் என்பதை எல்லோருக்கும் தொியப்படுத்துவதற்காகவே நான் அந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டேன். மற்றவர்களைப்போல் அல்லாமல் நான் அறிவார்ந்து சிந்திப்பதனால் தோல்வியை அவமானம் என்று நினைப்பவர்கள் மத்தியில் நான் மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டேன். தேர்வில் தோற்றால், தேர்வுக்கு என்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என வருத்தப்படுவேன். ஆனால், தேர்தல் என்பது மக்கள் தேர்ந்தெடுப்பது. நான் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 40 பேர் போட்டியிட்டோம். அது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு மக்கள் மத்தியில் சென்று வாக்கு சேகரித்தபோது மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தொிந்துகொண்டேன். பணம் கொடுத்தால் கிடைக்கக்கூடிய பொருளாக ஓட்டு உள்ளது. மக்களுக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் மக்களைப் போய் சென்றடையவில்லை. அதுவே திட்டங்கள் ஒழுங்காக மக்களைப் போய் சேர்ந்தால் தேர்தல் நேரத்தில் பணத்துக்கான அவசியமில்லை. மக்கள் மத்தியில் அரசியல் புரிதல் என்பது மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
கேள்வி : கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுவிலக்கு வேண்டும் என்று போராட்டத்தை முன்வைத்த நீங்க இப்ப அதில் இருந்து விலகி இருக்கீங்களா?
பதில் : மதுவிலக்கில் இருந்து எப்பவுமே நான் பின்வாங்கியதில்லை. தமிழ்நாட்டில் மதுவால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றன. தமிழ்நாடு இயங்குவதற்கான அதிகபட்சமான வருமானம் மதுவில் இருந்துதான் கிடைக்கிறதாக கூறப்படுகிறது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அரசு நடத்தக்கூடிய நிர்வாகமாக இருந்தாலும், அது மக்களுக்கு சாதகமானதா? பாதகமானதா? என்று ஆராய்ந்துதான் அதை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த வகையில் மதுவை ஆராய்ந்து பார்த்தால் அதில் கண்டிப்பாகத் தீமைகள்தான் அதிகமாக இருக்கிறது. இங்கு மனைவி, குழந்தை, குடும்பத்தை விட்டு விட்டு குடிக்கு அடிமையானவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மதுவிலக்கு வேண்டாம் என்று சொல்பவர்கள் அதற்கான தீர்வு என்ன என்பதைச் சொல்ல வேண்டும். குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்துவருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கில் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடியிருந்தது. அப்படிப்பார்த்தால் மது இல்லாமல் இருக்க முடியும் என்ற சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கிறது. பலர் மதுவில் இருந்து வெளியில் வந்துவிட்டார்கள். எனவே, மதுவிலக்கு என்பது சாத்தியமே. மதுவிலக்கு கொள்கையில் இருந்து நான் பின்வாங்கவில்லை.
கேள்வி : வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? அப்படி போட்டியிட்டால் தனித்தா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியா?
பதில் : கண்டிப்பாக போட்டியிடுவோம். அதற்கான களப்பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி கொள்கைகளுக்கும், என்னுடைய நோக்கத்திற்கும் பொருந்துகிற மாதிரியான ஒரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடுவோம்.
கேள்வி : கூட்டணி என்றால் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்வீர்கள்?
பதில் : திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. எல்லோரும் செய்கிற தவறை நான் செய்யமாட்டேன். தோல்வி அடைந்துவிடுவோமோ என்று நினைத்து நமது குறிக்கோளை விட்டுத் தள்ளிப்போகக்கூடாது. வெற்றியோ தோல்வியோ நம்முடைய குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். ‘பாதை சரியானதாக இருந்தால்தான் பயணம் நேர்மையானதாக இருக்கும்.’ குறுக்குப்பாதையில் போய் என்னுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. எனவே, அதற்குத் தகுந்தாற்போல ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டு போட்டியிடுவோம்.
கேள்வி : எல்லா கட்சித்தலைவர்களும் தன்னுடைய கட்சி ஆட்சி அமைக்க வேண்டும், முதல்வராக வேண்டும் என்று எண்ணுகிறார்கள். உங்களது எண்ணம் எப்படி?
பதில் : முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கிறது. இன்றைக்கு நேற்றைக்கு வந்ததல்ல இந்த ஆசை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவர்களுக்கான ஒரு தேடல் என்பது ஒளிந்துகொண்டு இருக்கும். சந்தர்ப்பங்களால் வருவது என்பது வேறு. இயற்கையாகவே வருவது என்பது வேறு. நான் என்னைப் பரிசோதனை செய்தபோது, அதில் எனக்கு ஆர்வமோ, எண்ணமோ நிச்சயமாக இருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. திருவள்ளுவர் “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்றார். அதாவது, எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். எனவே, முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணுவதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தொியவில்லை. அதனால் கண்டிப்பாக முதலமைச்சராவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

– ராஜேஸ்வரி பிரியா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!