நடிகையும், சூப்பர் மாடலுமான மீரா மிதுன் யூடியூப் சமூக வலைதளத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த மீரா மிதுன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த முறை ஜாமீனில் வெளியில் வந்த மீரா மிதுன் சில யூடியூப் தளங்களில் பேட்டியளித்திருந்தார். ஆனால், இந்த முறை ஜாமீனில் வந்த மீரா மீதுன் நிலை என்ன என்பது குறித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தகவல் ஏதும் தெரியாமல் இருந்த நிலையில், பெண்களின் குரல் மாத இதழ் குழு மீரா மிதுனை பற்றி தெரிந்துக்கொள்ள தேடி சென்றது. அப்போது, தெரியாமல் தான் பேசிய வார்த்தைகள் குற்றமானது குறித்தும், அதனால் தனக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை குறித்தும் பெண்களின் குரல் மாத இதழ் யூடியூப் தளத்துக்கு அளித்து இருக்கும் சிறப்பு பேட்டியில் பேசியுள்ளார். அதில், “பலமுறை தற்கொலைக்கு முயன்று தன்னை காப்பாற்றி, மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய அனைத்து தவறுகளுக்கும் தார்மீக மன்னிப்பு கோருவதாகவும், இனியும் பிரச்சினைகளை எதிர்த்து போராடும் வலிமை தன்னிடம் இல்லை” எனவும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.