day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாயநிழல் ( அத்தியாயம்-1 ) – லதா சரவணன்

மாயநிழல் ( அத்தியாயம்-1 ) – லதா சரவணன்

சூலமங்களம் சகோதரிகளின் கந்தர் ஷஷ்டி கவசத்தில் நனைந்தபடியே கற்பூர ஆரத்தியைக் கண்களில் தொட்டுக் கொண்ட நீலகண்டன் தங்க பிரேமிட்ட கண்ணாடிக்கு மேல் இருந்த நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டார்.

பட்டுப்சேலை சரசரக்க குங்கும வகிட்டோடும், புன்னகை சிரிப்போடும் அந்தக் கால புன்னகை அரசியின் சாயலில் வந்த மனைவியின் கைகளில் இருந்த பார்சலை வாங்கியபடியே, “போனமா வந்தமான்னு சுருக்க வந்திடுங்க. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ அந்த ஊர்ல இருக்கிற கோவிலுக்குப் போயே தீரணுமா? அது நம்ம குலதெய்வமும் இல்லையே?!”

“குலதெய்வமா இருந்தாத்தான் கும்பிடணுமா வசந்தா. நான் பிறந்து வளர்ந்த ஊர், உன்னைப் பார்த்தது நம்ம கல்யாணம் நிச்சயமானது, ஏன் என் வாழ்நாளின் ஒட்டுமொத்த நல்லதும் கெட்டதும் அந்த கோவிலின் வாசலில்தான். நியாயப்படி இந்தக் கல்யாண நிச்சயம் ஆனதுமே நான் அங்கே போயிருக்கணும். ஆனா முடியலை. உறுத்திட்டே இருந்தது. அதான் கிளம்பிட்டேன்.”

“சரிங்க நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க. பத்திரமா போயிட்டு வாங்க.” காரைத் துடைத்துக் கொண்டிருந்தவன் அவசரமாய் நீலகண்டன் கையிலிருந்த பார்சலை வாங்கி பின்சீட்டில் திணித்தான். உள்ளே இரண்டு பிளாஸ்க்குகள் பிஸ்கெட் பாக்கெட்டுகள் இத்யாதிகள் முளைத்திருந்தன. காரின் இருக்கை அவரை உள்வாங்கியதும் கார் சீறிப் புறப்பட்டது.

காதலிக்க ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் … என கோரஸாகப் பாடலாம் போல அழகில் ரோஜாக்குவியலைப் போல் உறங்கிக்கொண்டு இருந்தாள் ஜெயா.

வைரவியாபாரி நீலகண்டனின் ஒரே மகள்.

“மணி எட்டாச்சு. போற இடத்திலே இத்தனை நேரம் தூங்கிட்டு இருந்தா என்ன பிள்ளையை வளர்த்திருக்காங்கன்னு என்னைத்தான் குறை சொல்லுவாங்க.” நான்காம் முறையாக அம்மாவின் குரல் காதைத் துளைக்க, அடித்தொண்டையில் போர்வைக்கடியில் லோகேஷிடம் பேசியபடி, “அம்மா வந்தாச்சு. நான் தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்காங்க. கட் பண்ணிடறேன்.” என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு பல் தேய்த்து வந்தவளிடம் நுரை ததும்ப காபி நீட்டப்பட்டது. “உன் செல்லம் எல்லாம் என்கிட்டேதான்டி. அங்கே உன் பருப்பு வேகாது.”

“அதெல்லாம் குக்கரில் எக்ஸ்ட்ரா விசில் வைத்து வேக வைச்சிடுவேன்.” என்று சிரித்து தலையில் ஒரு கொட்டு வாங்கினாள். “காலையிலே நமக்கு முன்னாடியே எழுந்து வாசல்பெருக்கி கோலமிட்டு தலையிலே ஈரடவல் சுற்றி மருமக காபி கொண்டு வரணுமின்னு எல்லாம் அவங்க வீட்டுலே நினைக்க மாட்டாங்களாம். இன்பேக்ட் அவங்க வீட்டுலே எல்லாத்துக்கும் வேலைக்காரி உண்டு. தமிழ்நாட்டுலேயே பெரிய வைர வியாபாரி ஆனா வீட்டுலே கட்டின பொண்டாட்டி கையிலே கரண்டியைக் கொடுத்து உன்னை அடுப்படிக்குத் துரத்திட்ட அப்பா மாதிரியில்லை.”

“என்னடி வாய் நீளுது ? கட்டின புருஷனுக்கு நம்ம கையால பச்சைத்தண்ணி பரிமாறினா கூட அது அமிர்தம்டி. நம்ம குடும்பத்து மனுஷங்க மேல நமக்கு இல்லாத அக்கறையா அடுத்தவங்களுக்கு வந்திடப்போகுது.”

“ஊர்லே பாதிப்பேர் கேன் தண்ணிதான். அதைக்கூட அவங்களே எடுத்துக் குடிக்கணும். அப்பாவும் நீயும் இன்னமும் அப்டேட் ஆகாமயே இருக்கீங்கம்மா. நீ பதிபக்தியை நிறுத்திட்டு தப்பட் படத்தைப் பாரு.” என்று கண்ணடித்தாள்

“ஏன் ?! தாலிகட்டின பொண்டாட்டியை ஒரே அறை. உடனே அந்த பொண்ணு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடறாங்க, ஆணோ பொண்ணோ தாலி கட்டினதால மட்டும் அடிமையாகிட முடியாதே. வாழுறது ஒரு வாழ்க்கை அதை நம்ம விருப்பப்படி பார்க்கணும். மக்கு அவர் உன் பத்திரிக்கையை எடுத்துட்டு கோவில் கோவிலா சுத்தறார். நீ இப்பவே அபசகுணமா டைவர்ஸ் பத்தியா பேசறே?” மறுபடியும் ஒரு கொட்டு வாங்கியவள்.

“நீ இப்படி கொட்டி கொட்டியே, என் மண்டை பழைய ஒனிடா டிவி பூதம் மாதிரி ஆகப்போகுது பாரு…” என்றாள் தலையைத் தடவியபடியே…

“சம்பந்தி வீட்டுலேயிருந்து போன் பண்ணியிருக்காங்க இன்னும் அரைமணியில் வர்றாங்களாம். நான் உன்கூட அரட்டையில் அதை மறந்திட்டேன். போய் குளிச்சிட்டு நல்லதா ஒரு புடவையைக் கட்டிக்கிட்டு லட்சணமா வா.” என்று அம்மா அவசரமாய் அவளை கிளம்பச் சொல்லும் போதே வாசலில் கார் ஹாரன் சப்தம்.

‘இத்தனை நேரம் போனில் பேசிக்கொண்டிருந் தாரே, வருகிறேன் என்று சொல்லவே இல்லையே’ என்ற மில்லியன் டாலர் கேள்விகளைச் சுமந்தபடி ஷவரைத் திருகினாள் ஜெயா.

அவள் கீழே இறங்கி வருவதற்குள் வசந்தா அவர்கள் வயிற்றை குளிர்வித்ததற்கு அடையாளமாய் கண்ணாடித் தம்ளர்கள் பாதி காலியாகி இருந்தது. ‘ஏன் போனில் வருவதைத் தெரிவிக்கவில்லை’ என்று செல்லமாக கோபமும், ‘எல்லாம் ஒரு சஸ்பென்ஸ்தான்’ என்று மாப்பிள்ளையின் கண்களில் ஒரு குறும்பும் எட்டிப்பார்க்க, அம்மா ஏதோ மறுப்பது காதில் விழுந்தது.

“அட என்னங்க அண்ணி, கல்யாணம் நிச்சயமாகி இரண்டு மாசத்திலே அந்தப் பிள்ளைங்க இதுவரையில் வெளியே போகணும்னு கேட்டதே இல்லை. இப்போ அவனோட பிரண்டுங்க கொடுக்கிற பார்ட்டிக்குப் போய் அப்படியே பத்திரிகை கொடுத்துட்டு வரணும்னு ஆசைப்படறான்.” லோகேஷின் தாய் கறுப்புகவுன் மாட்டாத குறையாய் மகனுக்காய் வாதிட்டாள்.

“உங்களுக்கே தெரியும் அண்ணி, அவருக்கு இதிலெல்லாம் அத்தனை பிடித்தம் இல்லை. தெரிந்தா கோவிச்சிப்பார்.” சொல்லும்போதே இளசுகளின் கண்களில் தெரிந்த நிராசையில் மனம் கசந்தது. ‘அவர்தான் ஊரில் இல்லையே, போயிட்டு வரச்சொல்லலாமா?’ என்று மனதின் ஓரம் ஒரு மூலையில் இருந்து சாத்தானின் குரல். ‘ஆனால் நீலகண்டன் கோபம் வந்தால் ருத்ரமூர்த்தி ஆகிவிடுவாரே… எதுவும் சம்பிரதாயப்படி நடக்கவேண்டும் என்பது அவரின் எழுதப்படாத விதியும் ஆயிற்றே’ எனவே இருமனதோடு, “அது வந்து…..” என்று தயங்க…

“இப்ப என்ன அண்ணன்கிட்டே லோகேஷின் அப்பாவைப் பேசச் சொல்றேன் சரியா?” என்று தன் கணவருக்கு தந்தியைப் போல சுருக்கமான வார்த்தைகளை கொட்டி விட்டு, “பிரச்சனை முடிஞ்சாச்சு. நீ கிளம்பு ஜெயா. இந்த உடையே பிரமாதம் தான்.” என்று எதிர்கால மருமகளைக் கிளப்ப அவளும் அம்மாவை பயப்பார்வை பார்த்தாள். அப்பாவின் கோபம் அவளறியாததா? உடைமாற்றி வருவதற்குள் எங்கே அவங்க மனசு மாறிவிடுமோ என்று நினைத்து அம்மா இந்த உடையே பிரமாதம் என்று சொன்னதை நினைத்து தாயின் சூட்சுமத்தை உணர்ந்து சிரித்தான் மகன். எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் மகள் சீக்கிரம் வந்து விடவேண்டும் என்ற வேண்டலோடு சம்பந்தியிடம் மனம் ஒட்டாமல் பேசிக்கொண்டு இருந்தார் வசந்தா.

“இதென்ன கலாட்டா காலையிலே கூட நீங்க வர்றதா சொல்லலையே? சட்டுட்னு வந்துட்டீங்க.” கசாட்டாவைச் சுவைத்தபடியே இன்விடேஷன் கார்டைப் பிரித்த எதிர்கால கணவனைப் பார்த்துக் கேட்டாள் ஜெயா. கூந்தல் பட்டுபோல் விரிந்து அவள் கன்னங்களை தொட்டுத் தொட்டுச் சென்றது. உடைக்குத் தோதாக மாட்டியிருந்த வளையம் ஆடிய அழகில், கிறங்கி “பின்னே உங்கப்பா கோவிலுக்கு போறாங்கன்னு நீ நைட் பேசும் போதே இந்த பிளானை அய்யா போட்டாச்சு தெரியுமா?!”

“அப்போ நாம எங்கேயும் போகப்போற தில்லையா?!” அவள் விழிகள் விரிந்தன.

“ஏன் இல்லாம? ஒரு சினிமா, மால் முழுக்க உன் கையைப் பிடிச்சிட்டு நீ விரும்பறதையெல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு பீச் மணலில் சுண்டல் சாப்பிட்டு நமக்கான நாளாக இதை மாற்றிக் கொள்ளப்போகிறோம்.” என்றான் ஸ்டைலாக கூலர்ஸை நெஞ்சின் பகுதிக்கு ஆழமாகஇருந்த டீசர்ட்டில் சொருகியபடியே. “இருட்றதுக்குள்ளே வீடு வந்து சேரு.” என்ற அம்மாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்க.

“ரொம்ப நேரமாகுமா லோகேஷ்.” என்றாள். “எட்டுமணிக்கு உன்னை உன் வீட்டுலே விட்டுடுவேன். என்னை நம்பு டார்லிங்” அப்போதுதான் அந்த முகப்பு பத்திரிகையின் வடிவத்தைப் பார்த்தாள். அதில் நடுநாயகமாக ஆங்கிலத்தில் எல் என்ற எழுத்தின் முடிவு ஜெ என்ற எழுத்தை தாங்கியிருந்தது. “எப்படியிருக்கு டிசைன்? உங்கப்பாவும் போட்டாரே ஒரு பத்திரிகை. 196பக்க நோட்டுமாதிரி.” என்று பேசி ஒரு அடி வாங்கினான்.

“கொழுப்பா. சரி இப்போ சினிமா, நெக்ஸ்ட் பீச். ஒருவிநாடி கூட தாமதிக்கக்கூடாது.” என்று வண்டிச்சாவியை எடுக்க, நான் ஓட்டறேன் என்று அவனைப் பின்னால் உட்காரவைத்து அவள் வண்டியை எடுக்க, ஒரு ஆச்சரியத்தோடு, “நைஸ்” என்று அவளின் இடுப்பில் இறுகக்கட்டிக் கொண்டு தாடியை வைத்துப் பின்னங்கழுத்துப் பகுதியைத் தேய்த்தான். கூசினாள் அவள்.

“டேய் தடியா….?!”

“பயமா இருக்கு டியர், நீ பார்ஸ்ட்டா போ. நான் கண்களை இறுக்க மூடி உன்னைக் கட்டிக்கிறேன்.” என்று மேலும் அவளை இறுக்கினான் லோகேஷ், இந்த கொஞ்சலும் சம்பாஷணைகளும் இன்னும் கொஞ்ச நேரத்தில் காணாமல் போகப் போவதை உணராமல்.

பீச்சின் ஈரக்காற்றை அனுபவித்தபடியே, “எப்படியோ எங்கப்பாக்குத் தெரியாம என்னைக் கடத்திட்டு வந்திட்டீங்க. ஐஸ்க்ரீம் ஆரம்பிச்ச இந்த நாள் ஐஸ்க்ரீமிலே முடியட்டும். இனிப்பான உங்க நினைவுகளோடு நான் நடையைக் கட்டறேன்.” என்றாள் ஜெயா.

“ஐஸ்க்ரீம் வேணுன்னு சொல்லு, வாங்கித்தர்றேன். அதுக்கு எதுக்கு இத்தனை பிட்டு. எங்க மாமனார் சரியான சாப்பாட்டு ராமியை வளர்த்து இருக்கார். உனக்காக நான் ஒரு ஐஸ்க்ரீம் பேக்டரியே வைக்கணும் போலிருக்கே.” சிரித்தபடியே ஐஸ்க்ரீம் வாங்க நகர்ந்தான்.

பொன்னிறத்தில் மின்னிய மணலையும் அலைபாயும் அலைகளையும் ரசித்தபடியே அவள் அமர்ந்திருக்க, அவளை ரசித்தபடியே அவன் ஐஸ்க்ரீம் கடையை நோக்கிப் போனான்….! அவன் திரும்பி வந்து பார்க்கும் போது அவளிருந்த இடம் காலியாய் !எங்கே போய்விட்டாள் என்று சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

செல்போனின் ஒலி.

அது அவளுடையது .

பாதி புதைந்த மணலுக்குள் திரையில் அப்பா என்று ஒளிர்ந்தது. முதன் முறையாக அத்தனை நேரம் இருந்த சந்தோஷம் காணாமல் போய் லோகேஷை ஒரு பயம் அப்பிக் கொண்டது. திரையையே வெறித்துப் பார்த்தான்.

தொடரும்…

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!