உதகை அருகே உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. அந்தபள்ளியில் கோக்கால் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் பிளஸ்2 படித்துவருகிறார். இந்தநிலையில், அதேபள்ளியின் தலைமையாசிரியராகஉள்ள சுப்பிரமணி, தனது கைகளால் மாணவி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்து கழற்றி உள்ளார். தலைமையாசிரியரே இதுபோன்ற தகாத செயலில் ஈடுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இந்தசம்பவம் குறித்து உதகை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் சுப்பிரமணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அந்தபகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவியிடம் தலைமையாசிரியர் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டு சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில், சுப்பிரமணி மீது புகார் அளித்து 20 நாட்களாகியும் காவல்துறை கைது செய்யவில்லை. எனவே, காவல்துறையினரின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சுப்பிரமணியை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமறைவாகி உள்ள தலைமையாசிரியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுடன் பொதுமக்களும் அந்தபகுதியில் இருந்து களைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது