day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உங்களை நீங்கள் காதலியுங்கள்…!

உங்களை நீங்கள் காதலியுங்கள்…!

 

திருநங்கைகளின் வாழ்வை முன்னேற்றப் பாடுபடும் ஓர் சமூக ஆர்வலர். முழு திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த முதல் திருநங்கை என்ற பெருமைக்குரிய நடிகை. அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனியில் தன் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்திய பெரும் கலைஞர் என பன்முகங்கள் கொண்ட திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பெண்களின் குரலுக்கு அளித்த பேட்டி.

கேள்வி : திருநங்கையாக மாறியது எப்படி?
பதில் : திருநங்கையாக மாற வேண்டும் என்று எப்போதும் நினைத்தது இல்லை. உடல்ரீதியாக ஒருசில மாற்றங்களை உணர்ந்தேன். நான் எப்பொழுதும் திருநங்கைதான். உடல்ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன்.

கேள்வி : திருநங்கையாக மாறியபோது யாரிடம் முதன்முதலாகத் தகவல் சொன்னீர்கள். அவர்களது நடவடிக்கை எப்படி இருந்தது?
பதில் : முதன்முதலாக என் அம்மாவிடம்தான் தகவல் சொன்னேன். எல்லா பெற்றோர் போன்றும் அவர்கள் அழுதார்கள், அதிர்ச்சி அடைந்தார்கள். பின்பு மெல்ல மெல்ல என்னைப்பற்றி அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

கேள்வி : திருநங்கையாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன?
பதில் : முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகால எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒருசில வரிகளில் சொல்ல முடியாது. குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். பள்ளிப் பருவத்தில் அதிகமான கேலி, கிண்டல்கள். வேலை செய்யும் இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். காதல் மற்றும் பல விசயங்களுக்காக என்னுடைய பாலின அடையாளத்தைக் காரணம் காட்டி மறுதலித்திருக்கிறார்கள். எத்தனையோ வலிகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் நடந்தாலும் மிகுந்த நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி : திருநங்கைகளுக்கான உாிமைகள் எல்லா நாடுகளிலும் கிடைத்துள்ளதா அல்லது இந்தியாவில் மட்டும்தான் கிடைத்துள்ளதா?
பதில் : ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு மாதிரியான உாிமைகள் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் ஆப்ரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் ரொம்ப மோசமான நிலையில் உள்ளது. அதேசமயம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா நாடுகளில் பேசும்படியாகவும், திருப்திப்பட்டுக்கொள்ளும்படியாகவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் எங்களின் முன்னோர்ளும், திருநங்கைகளின் முன்னோர்களும் பல இளைய தலைமுறையினரும் சேர்ந்து நிறைய பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம். அதன் மூலம் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். இருந்தாலும் பெற்றோரின் புறக்கணிப்பு என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது. இது பிற்காலத்தில் மாறும் என்று நம்புகிறேன்.

கேள்வி : பலருக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் தூண்டுகோலாக இருந்தது?
பதில் : எனக்கு நிறைய பேர் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். முழுமையாகச் சொல்லப்போனால் என்னுடைய அம்மா. எல்லாமே கரெக்டா இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். கருணை என்று பார்த்தால் அன்னை தெரசா அவர்கள். திறமை மற்றும் அழகுக்கு நடிகை தேவி தெளிவு மற்றும் நேர்மைக்கு இளவரசி டயானாவைத்தான் சொல்வேன். தன்னுடைய வாழ்க்கை குறித்த இயல்பான நோ்மையைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் இளவரசி. போர்க்குணம் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக ஜெயலலிதா அவர்கள். அதேபோல் கனிவு என்று எடுத்துக்கொண்டால் நிறையபேர் இருக்கிறார்கள்.

கேள்வி : திரைத்துறையில் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்க?
பதில் : சினிமாவைப் பொறுத்தவரையில் முழுநீளத் திரைப்படம் நடித்த முதல் திருநங்கை கதாநாயகி என்ற பெருமை என்னையே சாரும். அதன்பிறகு ஒரு ஹிந்திப் படத்தில் நடித்தேன். பெஸ்டிவல் திரைப்படத்தில் நடித்தேன். அது தமிழ்நாட்டுல வரவில்லை. OTG பிளாட்பார்மில் மட்டும் வந்தது. என்னைச் சிறப்பிக்க வைக்க வேண்டும் என்று முருகதாஸ் அவர்கள் சர்கார் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் பணியாற்றலாம் என்று எனக்கு விருப்பம் இருந்தாலும், கேமராவுக்குப்பின்னால் ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தமிழ்நாடு அளவில் வரவேண்டும் என்றில்லை. சர்வதேச அளவில் வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காக மெல்ல மெல்ல உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.

கேள்வி : சமீபகாலமாக திருநங்கைகள் கொலை செய்யப்படுவது அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. இதில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்துகிறார்களா? கொலையைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில் : சமீபத்தில் சங்கீதா என்னும் திருநங்கை கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகள் குடும்பத்துடன் இல்லாமல் தனித்திருப்பதால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் இருந்தால் குடும்ப கட்டமைப்புக்குள் ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ்வார்கள். இப்போது சமூகம், சட்டம் மற்றும் எல்லா விதத்திலும் அவர்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்றால் திருநங்கைகளைக் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும். ஒரு கொலைக் குற்றம் நடந்துவிட்டால் அதில் விசாரணை நடத்துவதில் போலீசார் எந்தவிதமான பாரபட்சமும் காட்டுவதில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்கிறது. காவல்துறையில் ஒருசிலரைத் தவிர பல நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

கேள்வி : ‘மீடூ’ பற்றி பெண்கள் பேச ஆரம்பித்தவுடன் அது மக்களிடம் பரவலாகப் பேசப்பட்டது. அதேபோல், திருநங்கைகளுக்கு ‘ரெட்வால்’ பிரச்சினை குறித்து நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
பதில் : திருநங்கைகளை எடுத்துக்கொண்டால் தன் வாழ்நாளில் ஏதாவது ஒருவகையில் பாலியல் தொல்லைக்கும், பாலியல் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். பொதுவழியில் இதை யாரும் கேட்பதில்லை. ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. அதனால், சமூக செயற்பாட்டாளர் என்கிற முறையில் நான் அதைக் கையில் எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். திருநங்கைகளின் குரல் சமூகத்தில் ஒலிக்க வேண்டும். நான் ஒரு ஓவியர் என்பதால் கலைத்துறை மூலமாகவும் இதை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். 11க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி : அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள், உாிமைகள் எல்லாம் திருநங்கைகளுக்குக் கிடைக்கிறதா?
பதில் : சலுகைகள் என்பதைவிட எங்களது உாிமைகள் என்பதுதான் உண்மை. திருமணம் செய்து கொள்ளும் உாிமை மற்றும் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளும் உாிமை, எங்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான சட்டம் இவையெல்லாம் கண்டிப்பாகத் தேவை.

கேள்வி : சினிமாவில் நடிப்பு, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் இப்படி பன்முகத்தன்மை கொண்ட உங்களது ‘அல்டிமேட் கோல்’ என்ன?
பதில் : கலைத்துறையில் சர்வதேச அளவில் பணி செய்ய வேண்டும். பலமொழிகளில் என்னுடைய பங்களிப்பு, திரைத்துறையிலும் சர்வதேச அளவில் என்னுடைய பங்களிப்பு இவையே என்னுடைய ‘அல்டிமேட் கோல்’ என நான் நினைக்கிறேன்.

கேள்வி : அரசியலில் திருநங்கைகளின் பங்களிப்பு, இடஒதுக்கீடு தேவை என்று சொல்லமுடியுமா?
பதில் : திருநங்கைகளோடு பழகி அவர்களோடு வாழ்ந்த திருநங்கை சமூகத்தினர் அரசியலில் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும். பலதரப்பட்ட திருநங்கைகள், அடிமட்ட அளவில் இருக்கின்ற திருநங்கைகளுக்கு மிகப்பொிய ஊக்கமாகவும், ஆக்கமாகவும் இருக்கும்.

கேள்வி : நீங்கள் அரசியலுக்கு வருவதை எதிர்பார்க்கலாமா?
பதில் : அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் முதலில் இருந்தது. இப்போது இருக்கிற அரசியலைப் பார்த்தால் வரவேண்டும் என்ற எண்ணமே இல்லை.

கேள்வி : திருநங்கையாக இருப்பவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?
பதில் : திருநங்கைகளுக்கு நான் சொல்லவிரும்புவது வாழ்க்கையின்மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. உங்களை நீங்கள் முதலில் காதலியுங்கள். பெற்றோருக்கு மற்ற குழந்தைகளைப்போல திருநங்கை குழந்தையையும் நீங்கள் நடத்துங்கள். புறக்கணிக்காதீர்கள், பாரபட்சம் காட்டாதீர்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!