15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது. மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு இந்தபோட்டி நடைபெற்றது. இந்தபோட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலக்கை நிறைவு செய்ய முடியாமல் சென்னை அணி பெங்களூரு அணியிடம் போராடி தோல்வியுற்றது. இந்தநிலையில் சென்னை அணிக்காக கேப்டன் தோனியின் 200ஆவது ஆட்டம் இதுவாகும். மேலும், இந்ததொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதுவரை இந்ததொடரில் விளையாடிய 10 போட்டிகளில் சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தவிர இந்த ஆட்டத்துடன் சேர்த்து சென்னை இந்தத்தொடரில் இதுவரை 7 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6 ஆட்டத்தில் வெற்றியும், 5 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.