ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேரறிவாளன், தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வருகிறார். முன்னதாக, பேரறிவாளன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, பேரறிவாளனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். தமிழக முதலமைச்சரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. எனவே தான் முதலமைச்சர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை, சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிவித்தார்.