15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 66ஆவது லீக் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பட்டீஸ் மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 8 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா அணி விளையாடிய 13 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தத்தொடரின் அறிமுக அணியான லக்னோ அணி, தொடக்கப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பின்னர் கடைசி இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை லக்னோ அணி தவறவிட்டது. இந்தநிலையில் லக்னோ அணி அடுத்த சுற்றுக்கு செல்ல இந்தபோட்டியில் வெற்றிப்பெறுவது மிகமுக்கியம் என்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஐபிஎல் ரசிகர்கள் எண்ணி உள்ளனர். முந்தைய ஆட்ட தரவுகளும் கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பும் லக்னோ அணியே வெற்றிப்பெறும் என்று கூறப்படுவதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த போட்டியை இன்று இரவு காண ஆவலாக உள்ளனர்.