15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 68ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. நேற்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. இதனையடுத்து 2 பந்துகள் மட்டுமே மீதம் இருக்கையில் மற்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 9ஆவது வெற்றியை பெற்றது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் லக்னோவை பின்னுக்குத் தள்ளி ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேபோல், சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 9ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற்றதன் மூலம் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றி உள்ளது.