சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘தி ஹீலர் அறக்கட்டளை நிறுவனம்’ மற்றும் ’பாரா ஒலிம்பிக் கபடி பெடரேஷன் இந்தியா’ இணைந்து மாற்றுதிறனாளிகளுக்கான 4ஆவது தேசிய கபடி போட்டியை நடத்தினர். இந்தப்போட்டி ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி தொடங்கி மே மாதம் 1ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் இந்தப்போட்டியில் கலந்துக்கொண்டன. லீக் முறையில் நடைபெற்ற கபடி போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி 4ஆவது முறையாக இந்த இறுதி போட்டியிலும் வென்று வெற்றி கோப்பையையும், ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் பதக்கங்களையும் பெற்றனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் திருப்பதிருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த தமிழக கபடி அணியின் பட்டதாரி வீரர் மோகன் நேற்று தனது சொந்த ஊருக்குச் சென்றார். அப்போது, வெற்றி பெற்று சொந்த ஊர் திருப்பிய மோகனை அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, குத்தாட்டம் போட்டு, சால்வைகளை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விளையாட்டுப்போட்டியில் வெற்றிப்பெற்ற வீரரை ஊர்மக்கள் கொண்டாடும் இந்தகாட்சி காண்போரை ஆரவாரப்படுத்தி உள்ளது.