கோவை மருதமலை ரோடு வடவள்ளி பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாரதியார் பல்கலைக்கழகம் நிறுவுவதற்காக 40 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில், பல ஆண்டுகளை கடந்தும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்கலைக்கழகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இழப்பீடு தொகையை கொடுக்காவிட்டால் தங்களின் நிலத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்படும் என விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீரென விவசாயிகள் பல்கலைக்கழகத்துக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.