day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க மக்களும், கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும் – முனைவர் சுந்தரவள்ளி

என் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க மக்களும், கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும் – முனைவர் சுந்தரவள்ளி

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுபவர். அரசியல் பின்னணி கொண்டவர். எந்தக் கருத்தையும் துணிச்சலாக எடுத்துரைப்பவர். விவாதங்களில் தமது வாதங்களைத் தெளிவாகக் கையாள்பவர். சமூக வலைத்தளங்களில் பலமுனைத்தாக்குதலுக்குத் தொடர்ந்து ஆளாகும் பெண்தான் சுந்தரவள்ளி. பெண்ணியம் முதல் அரசியல் வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நச்சென தனக்கென உாிய பாணியில் பெண்களின் குரல் இதழுக்காகப் பேட்டியளித்தார்.

கேள்வி : சமூகப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் உங்களை சமூகப்போராளி என்று குறிப்பிடலாமா அல்லது அரசியல்வாதி என்று குறிப்பிடலாமா?

பதில் : நான் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஏன் என்றால், சமூகம் சார்ந்த பல்வேறு  தளங்களில் நான் இயங்கிக்கொண்டு இருக்கிறேன். நான் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் கல்வி சம்பந்தமான பல்வேறு வேலைகளில் ஈடுபாடாகவும் உள்ளேன். அதோடு சேர்ந்து சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக இதுநாள் வரைக்கும் தொடர்ந்து களத்தில் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எனவே, பெண்களுக்காகப் பேசுவது, குழந்தைகளுக்காகப் பேசுவது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காகக் குரல் கொடுப்பது போன்று பல்வேறு தளங்களில் செயல்பட்டுக்கொண்டே இருப்பதால் என்னை ஒரு செயற்பாட்டாளர் என்று சொன்னால் அது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கேள்வி : பெண்ணியம் தொடர்பான உங்களுடைய கருத்து என்ன? எதைப் பெண்ணியம் என்று கருதுகிறீர்கள்?

பதில் : சுய சிந்தனையோடு செயல்படுகிற அத்தனை விசயங்களும், அத்தனை தளங்களும் பெண்ணியத்தோடு சேர்ந்துவிடும். பெண்ணியத்தை நாம் ஒரு கட்டத்துக்குள்ளேயும், சட்டத்துக்குள்ளேயும் அடக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தோடு, சுய புத்தியோடு, சமூகத்தில் இறங்கி வேலை செய்கிற எல்லா தளங்களும் பெண்களுக்கான விடுதலை தளங்கள்தான் என்று புரிந்துகொள்கிறேன். இரண்டாவது, ஆணுக்கு நிகரான, ஆணுக்கு நிகரான என்று சொல்லிக்கொண்ேட இருக்கிறோம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆணுக்கு நிகராக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அடித்துத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம். அப்ப ஒரு பொிய கட்டமைப்புக்குள் சிக்கிக்கொண்டு, பண்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, இது சரியா? தவறா? என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இங்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நல்ல விசயங்களை, சமூக உடைப்பை செய்கிற விசயங்களை மரபார்ந்து நம்மை அடிமை செய்கிற விசயங்களை உடைத்தெரிந்துவிட்டு முன்னேறிப் போவதற்குப் பெயா்தான் பெண்ணியம் என்று நான் புரிந்துகொண்டிருக்கிறேன். 

கேள்வி : உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது?

பதில் : எனது 20 வயதில் அரசியலில் அறிமுகமானேன். கிட்டத்தட்ட 19 வருடங்களாக அரசியலில் பயணம் செய்து வருகிறேன். நான் UG படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இருந்தேன். மாணவர் சங்கத்தில் இருந்து என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பமானது. இடதுசாரி இயக்கங்களோடு தொடர்புடனும், கம்யூனிச சித்தாந்தம் குறித்த வாசகங்கள் வாசிப்பதும், எழுதுவதும், போராடுவதும் என்று ஏராளமான வேலைகளை அந்த 19, 20 வயதில் இருந்தே நான் ஆரம்பித்துவிட்டேன். 19, 20 வயதிலேயே வீதியில் போய் போராடுவது, அதாவது, UG முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டிலேயே ரோடு மறியல் செய்வது, போராடுவது அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குத் தடை கோரி போராட்டம் நடத்தியது. அப்பொழுது நான் மதுரையில் படித்துக்கொண்டு இருந்தேன். சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தபோது அதை செயல்படவிடக்கூடாது என்று மறியல் போராட்டம் செய்தோம். ரேஷன் கடையில் பொருட்கள் திருடப்பட்டபோது, ரேஷன் கடைக்குப்பூட்டு போடுவது, தலைவர்களுடைய வீட்டை முற்றுகையிட்டு எங்களுக்கான கோரிக்கைகள் வைப்பது, சாமானிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய இலவசப் பொருட்களைச் சுரண்டி திண்ணுகிற கூட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவது என்று ஏராளமான போராட்டங்கள் செய்துவிட்டோம். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் பிடித்துக்கொடுப்பது போன்ற பன்முகத்தன்மையோடும், மேலும் படிப்பது, எழுதுவது மற்றும் எழுத்தாளர் சங்கத்திலும் சேர்ந்து நான் இயங்கிக்கொண்டு இருந்தேன். கல் உடைக்கும் பெண் தொழிலாளர்கள் மத்தியிலேயும் நான் பழகியிருக்கிறேன். எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்றால், சுந்தரவள்ளி ஏதோ மேல்தட்டில் இருந்து வந்து மேடையில் இருந்து மைக்கைப் பிடித்து அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று. ஆனால் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் இருந்து ஒடுக்கப்பட்டிருக்கிற அடிமட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிற பாட்டாளிகளோடு சங்கமாக அமைத்து வேலை பார்த்தவள்தான் நான்.

கேள்வி : தேர்தல் அரசியலில் விருப்பம் இருக்கிறதா? இல்லையா?

பதில் : கண்டிப்பாக இருக்கிறது. ஏன் என்றால், ஒரு அதிகாரம் என்பது தேர்தலால் கட்டமைக்கப்படுகிறபோது, அந்த அதிகாரத்தினுடைய மையப்புள்ளியை நோக்கி நாம் நகர்வதுதான் தெளிவான அரசியல் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அரசியல் தேவையில்லை, தேர்தல் அரசியல் மோசம், தேர்தல் அரசியலுக்குள் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று நிறைய சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால், ஜனநாயக நாட்டில் தேர்தல் அரசியலைத் தவிர்க்க முடியாது. ஜனநாயக நாட்டில் தேர்தல் அரசியலைத் தவிர்த்துவிட்டு வெறும் அரசியல் பண்ணினோம் என்றால், சமூக மாற்றம் மட்டுமே பண்ணிக்கொண்டு இருந்தால் அதிகாரம் நம்மை சாப்பிட்டுவிடும். இன்றைக்கு அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் அரசியலுக்குள் வராத நிறைய அமைப்புகள் எல்லாம் அமைதியாக இருப்பதனாலேயே இப்போது இருக்கும் அதிகார வர்க்கம் ரொம்ப ஆட்டம் ஆடுகிறது. அப்படியானால் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான ஒரு பொிய துருப்புச் சீட்டாக இருப்பது தேர்தல். அதனால் அந்தத் தேர்தலை வைத்துதான் நாம் அந்த மையத்துக்குப் போக ேவண்டியுள்ளது.

கேள்வி : உங்களுடைய குரல் சட்டமன்றத்தில் எப்பொழுது ஒலிக்கும்? 

பதில் : என்னுடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கு மக்களும், கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். நான் இடதுசாரிக் கட்சியில் உறுப்பினராக இருந்தேன். இப்போது அந்தக் கட்சியில் இலக்கிய அமைப்பில் மட்டும்தான் இருக்கிறேன். அதனால் கட்சிகளும், அமைப்புகளும் பெண்களுக்கான குரல் வேண்டும் என்று நினைக்கும்போது, என்னுடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். நீங்கள் மட்டுமல்ல, நிறைய பெண்கள் என்னிடம் கேட்கும்போது, பாராளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ எதிரிகளிடம் பேசும்போது தயவுதாட்சண்யம் இல்லாமலும்,  சமரசம் இல்லாமலும் பேசக்கூடிய சுந்தரவள்ளி போன்று ஒரு  பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கும் நான் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். பொருளாதார சிக்கலோடுதான் வெளியில்போய் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். ஆனாலும் எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் மயங்கி யாரும் கொடுக்கிற காசுக்காகவும், பணத்துக்காகவும் இன்று வரைக்கும் எந்த ஒரு கட்சிக்கும் மாறியது இல்லை. எப்போதும் மாறவும் மாட்டேன். இன்னொன்று என்னவென்றால் எல்லா அமைப்புகளும், குரூப் பாலிடிக்சா யாரை உள்ேள வைக்கலாம், யாரை வெளியில் வைக்கலாம் என்றெல்லாம் குடுமி பிடிச்சு நிற்கும்போது, என்னைப்போன்ற மக்களுக்கானவர்கள் எல்லாம் எவ்வளவு தூரம் அடையாளப்படுத்தப்படுவோம் என்பது இன்றைக்குக் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. 

கேள்வி : ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள். ஆனால், அரசியலாகட்டும், சமூகப்பிரச்சினையாகட்டும் பெண்கள் வெளி உலகுக்கு வரத் தயங்குகிறார்கள் ஏன்?

பதில் : இன்றுமட்டுமல்ல, 200 ஆண்டுகாலமாக பாரம்பரியம், பண்பாடு என்று சொல்லிச், சொல்லியே வளர்க்கப்பட்டவர்கள் பெண்கள்.  பெண்களைப் பொருத்தவரையில் மிகப்பொிய பண்பாட்டு முடக்கத்தை நாம் வைத்துக்கொண்டுள்ளோம். பெண்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிச், சொல்லியே நம்மை வளர்த்தார்கள். எனவே, கல்வி கிடைத்தால் இது மாறிவிடும் என்று நாம் நினைத்தோம். கல்வி கிடைத்தால் மட்டும் இது மாறாது என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வெறும் கல்வியால் மட்டும் ஒரு பொிய மாற்றத்தை செய்துவிட முடியாது. அப்படி இல்லையென்றால் கல்வியோடு சேர்த்துப் பொருளாதார மாற்றம் வருமா? பொருளாதார மாற்றம் வந்தால் அது மாறிவிடுமா என்று நாம் ஒரு டெஸ்ட் பண்ணினோம். படித்தார்கள். படித்ததால் வேலை கிடைத்தது. வேலைக்குச் சென்றார்கள். பொருளாதாரம் கிடைத்தது. உடனே, பெண்கள் மாறிவிட்டார்களா என்றால் இல்லை. ஏன் என்று பார்த்தால், பெண்கள் தங்களுடைய ஏடிஎம் கார்டைக் கணவன்மார்களிடம் கொடுத்துவிட்டு, 10 ரூபாய்க்கு அவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். 

அப்படியானால், கல்வியும், பொருளாதார தன்னிறைவு மட்டுமே பெண்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உருவாக்காது என்பது தொிந்துவிட்டது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் நிறைய வாசிக்க வேண்டும். வரலாறு, புவியியல் மற்றும் வரலாற்றுப் பண்பாடு எல்லாவற்றையும் முதலில் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரையும் வாசிக்க வைத்துவிட்டோம் என்றால் அதுகுறித்து இரண்டாவது உரையாட வைக்க வேண்டும். நாம் ஏன் இவ்வளவு அடிமையானோம் என்றெல்லாம் பேச வைத்தால், இந்த வாசிப்பும், உரையாடலும் பெண்களைக் கூர்மைப்படுத்தும். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், என்ன செய்ய வேண்டும், நாம் பிறந்தோம், வளர்ந்தோம், சாப்பிட்டோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்தால் போதுமா? நாம் போகும்போது நம் பிள்ளைகளுக்கு என்ன வைத்துவிட்டுச் செல்கிறோம். இந்த சமூகம் சார்ந்த எதை வைத்துவிட்டுச் செல்கிறோம். நமக்குப் பின்னால் போராடியவர்கள், நமக்கு முன்னால் போராடப் போகிறவர்கள் இவர்களுக்கு எல்லாம் நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற புரிதல் அந்தப் பெண்களுக்கு வரும்போது, ஒரு மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!