day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நிறத்தால் வேறுபாடு கூடாது… – கேபிரியல்லா

நிறத்தால் வேறுபாடு கூடாது… – கேபிரியல்லா

சினிமா என்றால் அழகும்,வசீகரமும் இருக்க வேண்டும் என்பதையே உடைத்துள்ளார் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேபிரியல்லா. திருச்சி அள்ளித்துரை என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பால் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்..

“உங்களுடைய இளமைப் பருவம் பற்றி சொல்லுங்க ?”

“கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு  தொலைதூரக் கல்வி மூலம் இளங்கலை படிப்பை படித்தேன். தற்போது பி.பி.ஏ. தியேட்டர் மற்றும் ஆர்ட்ஸ்  படிக்க விண்ணப்பித்துள்ளேன். குழந்தைப் பருவத்தில் பெரிய அளவில் எந்தப் போட்டிகளிலும் நான் கலந்து கொண்டது கிடையாது. பதினோராம் வகுப்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் மட்டும் பங்கேற்றுள்ளேன். நடனம் , இசை போன்ற  போட்டி நடைபெறும் போது அந்த இடத்தில் கூட நாம் நிற்கக் முடியாது.”

“அறிமுகம் ஆகும்போது நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ?”

“திரைத்துறையைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்த்த கேரக்டரை நம்மால் முழுமையாக நிரப்ப முடியாது. அதற்கு என்னுடைய நிறம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் ஆரம்பத்தில் என்னுடைய நிறத்தால் பிரச்னைகளை எதிர்கொண்டேன்.

ஒரு வாய்ப்பைத் தேடிப்போகும் போது நிறைய முறை ஒதுக்கப்படுவதும்,புறக்கணிக்கப்படுவதும் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இதற்காகத்தான் ஒதுக்கப்படுகிறோம் என்பது தெரியும். ஆனால் அதையெல்லாம் நான் கண்டு கொண்டது இல்லை.ஏன் சமூக வலைத்தளங்களில் கூட  நிறைய கமெண்ட்டுகள் வரும். நான் அதையெல்லாம் கண்டு கொண்டது கிடையாது.அதையெல்லாம் நாம் கண்டு கொண்டால்,அந்த இடத்திலேயே தேங்கி விடுவோம்.அதனால் அவற்றைக் கண்டு கொள்ளக் கூடாது. நம்முடைய இலக்கை அடைவதற்கு நமது முயற்சியில்  நாம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.”

“சின்ன வயசுலேயே இத்தன ரோல் எப்படி பண்ண முடியுது?”

“தற்போது எனக்கு 27  வயதாகிறது. கடந்த எட்டு வருட காலமாகத் திரையில் பிரவேசிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தேன். அந்தக் கனவு  தற்போது தான் நிஜமாகி உள்ளது.அதனால் எனக்கு த் தற்போது சின்ன வயசுபோன்று தோன்றவில்லை. நல்ல பக்குவப்பட்ட பெரிய மனுஷியாக உணர்கிறேன். சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களை அதிகம் பார்த்துக் கொண்டே இருப்பேன். குறிப்பாக பழைய திரைப்படங்களை பார்ப்பேன். அந்தக் கதாபாத்திரங்களைப் போன்று நடிக்க முயற்சி எடுப்பேன். அவ்வாறு தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாகத்தான் திரைத்துறைக்கு வர முடிந்தது.

“வெள்ளித்திரையும்  சின்னத்திரையும் எப்படி பார்க்கிறீங்க?”

“சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறேன். இரண்டையும் வேறுபடுத்திப் பார்த்தது இல்லை. இரண்டு துறைகளுக்கும் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்துகிறேன். இனியும் தொடர்ந்து அப்படியே செயல்படுவேன்”

“சினிமானா அழகா,வசீகரமா இருக்கணும் என்பதையே  நீங்க உடைத்து இருக்கீங்க. அந்த தன்னம்பிக்கை எப்படி வந்தது ?”

“கடவுளின் படைப்பில் அனைவருமே வசீகரமானவர்கள் தான். அதனால் கருப்பு,சிகப்பு என்று நிறத்தை வைத்து என்றும் நான் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது.அனைவருக்கும் ஒரு தனித்தன்மையும்,வசீகரமும் அழகும் உள்ளது. அதனால் யாரையும் நான் நிறத்தால் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது.என்றுமே சிவப்பாக இல்லையே என்று நான் நினைத்துப் பார்த்ததும் கிடையாது. என்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நம்மை நாம் முதலில் நேசிக்க வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கு நம்மைப் பிடிக்கும். அந்த தன்னம்பிக்கையும் விடமுயற்சியும் இருந்தால் போதும், எங்குமே நாம் ஜெயிக்க முடியும். நான் எனது நடிப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.அந்த நம்பிக்கையால் விளைகின்ற என்னுடைய நடிப்பு மற்றவர்களைக் கவர்ந்துள்ளது. ”

“சின்னத்திரை ,வெள்ளித்திரை, குறும்படங்கள், ஆன்லைனில் பயிற்சினு இத்தன வேலைகளை எப்படி சமாளிக்கறீங்க?”

“வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அந்த வகையில் இவை எல்லாம் எனது குறிக்கோள்கள். இந்த மூன்றையும் செய்வதற்குக் காரணம் ஏதாவது  ஒரு சூழலில் ஒன்று இல்லை என்றாலும்,மற்றொன்று கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேநேரத்தில் நான் நல்ல கலைஞராக வர வேண்டும் என்பது எனது கனவு, அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால்,அது தொடர்புடைய எல்லாவற்றிலும், எனது பரிமாணங்களை நான் விரிவுபடுத்தி, ஆக வேண்டும். அந்த அடிப்படையில்தான் இவற்றை எல்லாம் செய்கிறேன். ”

“அத்தனை கதாபாத்திரங்களையும் நீங்களே பேசி ஒரு வீடியோ வெளியிடறீங்க. அதில் வருகிற முக பாவனையும் டயலாக்கும் தங்கு தடையின்றி வரக் காரணம் என்ன ? ”

“அடிப்படையில் நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் . நிறைய நாடகங்களில் பங்கேற்றதால் அதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து செய்வதால், முக பாவனைகள் மற்றும் டயலாக்குகளை எளிதில் வெளிப்படுத்தமுடியும். அந்த வகையில் எனக்கு நடிப்பு இயல்பாகவே வருகிறது.”

“உங்களுடைய குடும்பத்தோட ஆதரவு எப்படி உள்ளது ?”

“என்னுடைய குடும்பத்தினர் உறுதுணையால் தான் என்னால் இவற்றை எல்லாம் செய்யமுடிகிறது. குறிப்பாக, எனது அம்மாவும் எனது கணவரும் அளித்து வரும் முழு ஊக்கத்தால் தான் என்னால் இந்த அளவு செய்ய முடிகிறது.”

“சூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  குறித்து அனுபவங்கள்?”

“இருவருடன் பணியாற்றிய தருணங்களை சிறப்பான ஒரு பாக்கியமாக, ஆசீர்வாதமாக பார்க்கிறேன்.”

“உங்களுடைய எதிர்கால திட்டம் பற்றி சொல்லுங்க?”

“கருப்பழகி தியேட்டர் பேக்டரி என்பதை நடத்தி வருகிறேன். அதை பொிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்காலத்திட்டமாகும்.”

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!