திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் பாலாற்றில் மாதனூர் – உள்ளி வழியாக குடியாத்தம் இணைக்கும் பிரதான சாலையில் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் இரண்டாவது முறையாக கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உடைந்து சேதமானதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், மாதனூர் சுற்றியுள்ள உள்ளி தோட்டாளம், கோப்பம்பட்டி, குளிதிகை, பட்டுவாம்பட்டி, சாந்தி நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வணிகம் செய்வதிலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதிலும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு செல்வதிலும் சிரமத்துக்கு உள்ளாகியதால் அந்தபகுதி மக்கள் உடைந்த தரைபாலத்தை விரைந்து சரிசெய்ய அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தரைப்பாலம் அமைக்கும் பணியில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதை பொதுமக்கள் அறிந்து கொண்டனர். இதனையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கோதண்டன், கோபி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்தபகுதி இளைஞர்கள் சிலர் தாமாக முன்வந்து பாலாற்றில் தற்காலிக ஒருவழி சாலை அமைத்து பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்து செல்லவும் வழிவகை செய்தனர். இதற்கு, சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.