தூத்துக்குடி கடற்கரையோரம் நண்டுப் பண்ணைகளை வைத்து நண்டு வியாபாரம் செய்து வெற்றி கண்டவர் சூசம்மாள் நசரீன்.
நண்டு வளர்ப்பில் லாபம் காண முடியுமா என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், 250 ஏக்கர் பண்ணையில் நண்டு வளர்த்து, இன்று தமிழ்நாட்டின் முதல் நண்டு வளர்ப்பு விவசாயியாக வலம் வருகிறார் இந்த நண்டு வளர்ப்பு நாயகி.
தூத்துக்குடி புன்னக்காயல் கிராமத்தில் தன் கணவர், மகன், மகள்களோடு, மரத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர் சூசம்மாள். பிறகு அவர், பொடி நண்டை விலைக்கு எடுத்து அதை விற்று வந்தார். 1992இல் தனது ஊரில் நண்டு வளர்ப்பு பண்ணை குத்தகைக்கு விடப்பட்டதை அறிந்து, அதை ஏன் தான் நடத்திப் பார்க்கக்கூடாது என்ற கேள்வியோடு அத்தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தார் அவர். அந்த முயற்சியே இன்று சூசம்மாளை நண்டு வளர்ப்பு விவசாயியாக வலம் வரச் செய்துள்ளது .
‘எனது கணவரும் மகனும் தான் என் இத்தொழிலில் நான் முன்னேறுவதற்கு உதவிகரமாகவும், உறுதுணையாகவும் நின்றனர்’ என்று பெருமிதம் கொள்கிறார் சூசம்மாள்.
தன் தோட்டத்தில் வளர்க்க ஏதுவான நண்டை வாங்கி, தன் தலையில் சுமந்து கொண்டு கால்நடையாகவே சென்று விற்று தன் தொழிலை நடத்திச் செல்ல ஆரம்பித்தார் சூசம்மாள் நசரீன். பிறகு தான் வாங்கி வரும் நண்டுகளைப் பண்ணையில் வளர்த்து, 6 முதல் 10 மாதங்கள் வரை நன்றாகப் பராமரித்து வளர்த்தாராம் அவர். அந்த நண்டுகளும் ஏற்ற பருவத்தை எட்டியவுடன் அவற்றை உயிரோடு கட்டி விற்கத் தொடங்கினாராம். அதில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைத்ததில் சூசம்மாள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம். அதிலிருந்து நண்டு விற்கும் தொழிலை விடுத்து, நண்டு வளர்ப்பைத் தன் முழு நேர வேலையாக செய்யத் தொடங்கி னார் அவர்.
ஆற்றோரத்தில், ஆற்று நீர் மற்றும் கடல் நீர் கொண்டு களி நண்டு என்று சொல்லப்படும் சேற்று நண்டை வளர்த்தாராம் சூசம்மாள். அவற்றிற்கு இறால்களையும், கழிவு மீன்களையும் உணவாக அளித்து, சதைப் பற்றுள்ள நண்டுகளை வளர்க்கும் கலையைக் கற்றாராம் அவர்.
‘நண்டு வளர்க்கப்படும் தோட்டம் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாக அதைப் பதப்படுத்த வேண்டும். அது நல்ல ஒரு குளம் போல இருக்க வேண்டும். அதுதான் நண்டுகளை நன்முறையில் வளரச்செய்யும்’ என்று நண்டு வளர்க்கும் முறையை விளக்குகிறார் சூசம்மாள்.
இவர் வளர்க்கும் நண்டுகளை தூத்துக்குடியிலுள்ள நிறுவனங்கள் வாங்கி, அவற்றை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றன. அவை சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்கின்றன. தானே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று சூசம்மாள் ஆசைப்பட்டிருக்கிறார். ’அதற்கான வசதி இல்லாமல் போய்விட்டது. அதனால் நண்டு வளர்த்து வியாபாரம் செய்வதையே தொடர்ந்தோம்’ என்று சற்று வருத்தமுடன் கூறுகிறார் அவர்.
இடைத்தரகர்களின் வருகையால் 15 ஆண்டுகளுக்கு முன்பு நண்டின் விலை கடுமையாக ஏறியதாம். அது சூசம்மாளுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாம். அதனால் தங்களைப் போன்றோருக்கு ஆதரவளிக்குமாறு, 2007இல் டெல்லி வரை சென்று தன் குரலை எழுப்பினாராம் அவர். ’ஆனால் எனது குரல் அவர்களின் காதுகளில் விழாமலே போய்விட்டது’ என்று மனமுடைந்து கூறுகிறார் இந்த நண்டு விற்பனையாளர்.
‘தொழில் ஆரம்பித்த காலத்தில், ஒரு கிலோ நண்டு ரூ.10 ஆக இருந்தது. தோட்டத்தின் குத்தகையும் மாதம் ரூ.10,000 ஆக இருந்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ ரூ.500க்கும் மேலாகிவிட்டது. குத்தகையும் மாதம் ரூ.80,000 ஆகிவிட்டது. அது எங்கள் வாழ்வாதாரத்தையே அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்று இன்றைக்கு நண்டு வளர்ப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்களைக் கூறுகிறார் சூசம்மாள்.
இந்தத் தொழிலில் இப்போது அதிக அளவுக்கு மூலதனம் தேவைப்படுகிறது. இதனால் வட்டிக்குப் பணம் வாங்கும் நிலை இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொழிலில் வரும் லாபம் கைச் செலவுக்கே போய்விடுகிறது.
நண்டு வளர்ப்புத் தொழிலில் இப்போது போட்டியும் அதிகரித்துவிட்டது. ஒரு நண்டுப் பண்ணையை ஏலம் எடுப்பதிலிருந்தே போட்டி தொடங்கிவிடுகிறது. அதையும் தனியாகவே எதிர்கொண்டு தன் தொழிலை நடத்துகிறார் சூசம்மாள்.
கொரோனா காலம், இவரது தொழிலுக்கு மேலும் நஷ்டத்தை உருவாக்கி இருக்கிறது. அதனால் இந்த வருடம் குத்தகைக்கான தொகையைக்கூட தர முடியாத அளவிற்கு அவருடைய தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
‘கஷ்டமானாலும், நஷ்டமானாலும் கையில் ஒரு தொழில் இருக்கிறது என்ற தைரியத்தினால் மட்டும்தான், நண்டு வளர்க்கும் தொழிலில் இன்றும் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்’ என்று தனக்கு ஏற்படும் நஷ்டத்தையும் இஷ்டப்பட்டு கூறுகிறார் இவர்.
சூசம்மாளின் கணவர் இறந்த பிறகு, தொழிலில் இருந்து விலகி இருக்கிறார் சூசம்மாள். இப்போது இவரது மகன் நண்டு வளர்ப்புத் தொழிலை அவரின் பாணியிலேயே நடத்தி வருகிறார். ஆனால் மீண்டும் இத்தொழிலில், உத்வேகத்தோடு களம் இறங்கப் போவதாக உற்சாகக் குரலில் உரைக்கிறார் சூசம்மாள்.
‘என்னைப் பார்த்து பல பெண்கள் இத்துறைக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை’ என்று தன் விருப்பத்தைப் பகிர்கிறார் அவர்.
‘எங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்ள, எனது வருமானம் இருந்தது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று உணர்வு ததும்பக் கூறுகிறார் அவர்.
‘இத்தொழிலுக்குப் பணத்தேவைகள் அதிகமாக இருக்கிறது. அதனால் எங்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கவேண்டும்’ என்று எல்லோருக்கும் பொதுவாக தன் கோரிக்கையைப் பதிவிடுகிறார் சூசம்மாள் நசரின்.