“போறது தான் போற ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ரங்கம்மாள் பாட்டி நகைச்சுவை நடிகர் வடிவேலுவை பார்த்து சொல்லும் பிரபல வசனம் உள்ளது. இந்த வசனம் தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் நக்கலாக பேசப்பட்டும் வருகிறது. இந்தநிலையில், வயதுமூப்புக் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை சேர்ந்த சினிமா நகைச்சுவை நடிகை ரங்கம்மாள் பாட்டி உயிரிழந்தார். 1967ஆம் ஆண்டு நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார் ரங்கம்மாள் பாட்டி. அதனைதொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் என பல நடிகர்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த ரங்கம்மாள் பாட்டி தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பல முன்னனி நடிகர்களுடன் நடித்தும் சொந்த வீடு கூட இல்லாத ரங்கம்மாள் பாட்டி வாடகை குடிசை வீட்டிலேயே தனது இறுதி காலத்தில் தங்கி இருந்துள்ளார். ரங்கம்மாள் பாட்டியின் வறுமை நிலை குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளிவந்தும் கூட திரைத்துறையினர் எவரும் கண்டு கொள்ளாதது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.