அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கிய நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனினும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு வலுபெறும் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.