day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தெருவோர விலங்குகளின் தோழி!

தெருவோர விலங்குகளின் தோழி!

கொஞ்சி விளையாடும் செல்லப்பிராணிகளின்மீது கொள்ளைப் பிரியம் கொண்டுள்ளார் கீர்த்தனா. தெருவிலுள்ள நாய்களுக்கும் உணவு கொடுத்து உதவிக்கரம் நீட்டுகிறார் அவர். இளகிய மனம் கொண்ட அவர் தெருவில் உள்ள நாய்களுக்கு மறுவாழ்வு தருவதையே தன் வாழ்க்கை லட்சியமாகf; கொண்டுள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த கீர்த்தனா எம்.பி.ஏ முடித்துவிட்டு கடந்த பதினொரு ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். தன் மாத வருவாயிலிருந்து பாதி தொகையை வாயில்லா ஜீவன்களுக்கு உணவிட ஒதுக்குகிறாராம் கீர்த்தனா.
சிறு வயதில் இருந்தே நாய்களுக்கு உணவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தாராம் கீர்த்தனா. உணவு நேரத்தில் கீர்த்தனாவின் குரலைக் கேட்டாலே தெருவில் உள்ள நாய்கள் கொஞ்சிக் கொண்டு ஓடி வருகின்றனவாம். ’சிறுவயதில் நாய்களுக்கு ரொட்டி போடுவது போன்ற பழக்கம் இருந்தது. இப்பொழுது காலையில் என் தெருவில் உள்ள நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவு அளிக்கின்றேன். மதியமும் இரவும் சிக்கனுடன் கூடிய சாதத்தைக் கலந்து உணவு அளிக்கிறேன். நான் வீட்டில் இருக்கிறேனோ அல்லது இல்லையோ இந்த சேவை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நான் ஒரு சேவையாகச் செய்கிறேன்’ என மனம் திறக்கிறார் கீர்த்தனா.
சிறுவயதில் இருந்தே செல்லப்பிராணிகளின்மீது அதீத பாசம் கொண்டவராம் கீர்த்தனா. அவர் வீட்டில் இரண்டு நாய்கள் உள்ளனவாம். ’அவைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும். அதே போல் ஒரு முறை சாலையோரத்தில் ஒரு நாய் அடிபட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் இவர்களைப் பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வி என் மனதுள் எழுந்தது. அந்தக் கேள்வியே என்னை அடுத்த நிலைக்குத் தள்ளியது’ என கூறுகிறார் கீர்த்தனா.
தெருநாய்களை மீட்டு அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சரிசெய்து மறுவாழ்வு கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார் கீர்த்தனா. ‘தெருநாய்கள் அடிபட்டு இருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ அப்பகுதி மக்கள் எங்களைத் தொடர்பு கொள்வர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று அவைகளைப் பிடித்து முதலுதவி செய்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வோம். சில நாய்கள் ஒரு நாளில் குணமாகும்‌. சில நாய்கள் குணமாக ஒரு மாதம் கூட எடுக்கும். அவ்வாறு குணமான நாய்களுக்கு முடிந்த அளவு மறுவாழ்வு கொடுக்கவே முயற்சிப்போம்’ எனக் கூறுகிறார் கீர்த்தனா.
தன் வங்கிப் பணியை விட்டுவிட்டு முழு வேலையாக நாய்களை மீட்க களமிறங்கியுள்ளார் கீர்த்தனா. ’என்னைப் போன்று நிறைய பேர் இந்தச் சேவையை செய்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவர். என் குடும்பம் இச் சேவையை செய்ய எனக்குப் பேராதரவு தருகிறது. இதனால்தான் என் வேலையை விட்டுவிட்டு முழு வேலையாக நாய் பூனைகளை மீட்டு மறுவாழ்வு தருதல் என்ற சேவையை செய்யத் தொடங்கி உள்ளேன். பாதிக்கப்பட்ட நாய்களை மீட்டெடுக்கும் சமயங்களில் பல நிகழ்வுகள் நிகழும். சில சமயங்களில் நாய்களைப் பிடிக்க வலையைப் பயன்படுத்துவோம். அப்போது சிலர் நாய்களை ஏன் பிடிக்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு விவாதம் செய்வார்கள். விஷயம் தெரிந்த சிலர் உதவ வருவார்கள். ஒரு முறை ஒரு நாய் மிகவும் அடிபட்டு இருந்தது. அதனை மீட்கும்போது ஒரு ஆட்டோக்காரர் வண்டியில் ஏற்றிச் செல்லவா என தானே முன்வந்து எங்களைக் கால்நடை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றார். இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு’ என நெகிழ்கிறார் கீர்த்தனா.
மேலும் தன் சொந்த செலவில் நாய்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி உள்ளார் கீர்த்தனா. இது அவர்களின் மீட்புப் பணிக்கு மட்டுமன்றி செல்லப்பிராணிகள் வளர்க்கும் யாவருக்கும் பயன்படும் என்ற நோக்கத்தோடு வாங்கியுள்ளாராம்.
‘சென்னையில் உள்ள எல்லா குடும்பங்களும் ஒவ்வொரு நாயைத் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது தெருக்களில் உள்ள நாய்களினால் வரும் பிரச்சனைகள் குறையும். இதனால் நாய்களும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பங்களும் வீட்டில் பாதுகாப்பாக உணரலாம். குறிப்பாக, மறுவாழ்வு பெறும் நாய்கள் மிகவும் விசுவாசமாக இருக்கும்’ என அழகாகக் கூறுகிறார் கீர்த்தி.
மேலும் ‘அரசாங்கம் இன்னும் நிறைய கால்நடை மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தெருவுக்கும் சென்று பார்வையிடும் மருத்துவர்களைப் பரிந்துரைக்க வேண்டும். காரணம், அதிக அளவு தெருநாய்கள் அடிபட்டு தான் இருக்கும். கொரோனா காலங்களில் நாய்கள் சாலைகளில் படுத்து உறங்கத் தொடங்கின. ஆகையால் லாக் டவுன் முடிந்ததும் அதிக நாய்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. பொதுமக்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் வேகமாக செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ எனத் தன் கோரிக்கையை முன்வைக்கிறார் கீர்த்தி.
தன்னைப் போல பிற உயிர்களையும் நேசி என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறார் கீர்த்தனா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!