திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பகுதிநேரமாக உணவு பரிமாறும் வேலையை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சித்தன் (19) என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களுடன் இணைந்து செய்துவந்தார். இந்தநிலையில், தனது நண்பர்களுடன் வேலை காரணமாக அங்கிருந்த லிப்ட் மூலம் மேல் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென லிப்ட் இணைப்பு சக்கரத்தின் கம்பி அறுந்துவிட்டதால் மேலே சென்று கொண்டிருந்த லிப்ட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கிய மாணவன் சித்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லிப்டில் சித்தனுடன் இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டாரின் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.