சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். பூண்டியிலிருந்து புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் வழியாக நீர் அனுப்பப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் தமிழக-ஆந்திர அரசுகள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தவணை முறையில் தண்ணீர் வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால் 2 மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் திறந்துவிட கோரிக்கைவிடப்பட்டது. இதனையடுத்து 5ஆம்தேதி காலை 10 மணியளவில் ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் 500 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து 1500 கனஅடியாக உயர்த்தி நீர் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கண்டலேறு அணையிலிருந்து 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 8ஆம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு காலை 9.30 மணியளவில் 100 கனஅடி வீதம் வந்தடைந்தது. இதனை அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏ.க்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பொதுமக்களும் மலர்களை தூவி வரவேற்றனர். ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை நேற்று இரவு சேர்ந்தது.