இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக அந்தநாட்டு மக்கள் தொடர்ச்சியாக மற்ற நாடுகளுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் இன்று இலங்கையில் இருந்து தமிழகம் வர முயன்றதாக 14 பேரை அந்தநாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னார் பேசாலை என்ற பகுதியில் இலங்கை கடற்படை இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரையும் மன்னார் காவல்துறையினரிடம் இலங்கை கடற்படை காவல்துறையினர் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையின் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் இலங்கையில் இருந்து ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்துள்ள நிலையில் மேலும் 14 பேர் தமிழகம் வர முயற்சி செய்து கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.