தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மேலும், நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வழி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக இப்பகுதிகளில் 6ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.