day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தண்டனையைத் தீவிரப்படுத்துவதே தீர்வு – ஜெமிலா

தண்டனையைத் தீவிரப்படுத்துவதே தீர்வு – ஜெமிலா

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை களும், அடக்குமுறைகளும் தொடர் ச்சியாக நடந்துகொண்டு இருக்கின்றன. பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல் குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற வழக்குகள் நடைபெறும் வேகம் நம்பிக்கை தருவதாக இல்லை.
நம் நாட்டில் சட்டம் நன்றாக உள்ளது. சட்டத்தைச் செயல்படுத்துகிற முறையில்தான் பிழை இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகிற வழக்குகளில் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கோ கைது செய்வதற்கோ நாம் அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்கிறோம். மத்திய, மாநில அரசிடம் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான தனி அமைச்சகம் உள்ளது. சிவசங்கர் நடத்திய பள்ளியிலோ அல்லது பிஎஸ்பிபி பள்ளியிலோ மட்டும்தான் பாலியல் தொந்தரவு அல்லது வன்முறை நடக்கிறது என்றில்லை. எங்கேயோ கடைக்கோடியில் இருக்கிற அரசுப் பள்ளியில்கூட இவையெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆன்லைன் வகுப்பு என்பதால்தான் இந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நேரடியாகப் பள்ளிக்குச் செல்லக்கூடிய பல குழந்தைகள், பெண் பிள்ளைகள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இப்படித் தவறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் இருக்கிறது. ஆனால், உடனடிச் சட்டம் இருக்கிறதா என்றால் இல்லை. எடுத்துக்காட்டுக்கு அரசியல் தலைவர்களை விமர்சித்ததற்காகவும், கடவுளைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கின்ற யூடியூபரை உடனடியாகக் கைது செய்கிறார் கள். இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பதில்லை. சமீபத்தில் ஒரு முன்னாள் மாணவி சிவசங்கர் பாபாவைப் பற்றிச் சொன்ன ஒரு பேட்டியைப் பார்த்தேன். அதில் அந்த மாணவி தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்ளாமல், அதேநேரத்தில் தைரியமாகவும் கொடுத்த பேட்டி மிகவும் பாராட்டக்தக்கது. இதற்குக் காரணம் அந்தப் பெண்ணின் பெற்றோர் கொடுத்த தைரியமாகவும் இருக்கலாம். இதேபோன்று எல்லாப் பெற்றோரும் பெண் குழந்தைகளுக்குத் தைரியத்தைக் கொடுத்தால், இதுபோன்று பள்ளியில் நடக்கும் குற்றங்களைப் பெற்றோரிடம் சொல்வார்கள். ஆனால், அதுபோன்ற ஒரு சூழல் இப்போது யாருக்கும் அமையவில்லையே ஏன்?
அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். கலாச்சாரத்தாலும், மிகவும் பழமைவாதத்தைப் பின்பற்றக்கூடிய நாடு இது. இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தவறே செய்யாதவர்கள்தான் மதத்தலைவர்கள், போதகர்கள் என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். நம் மக்கள் கடவுளுக்கு நிகராகவும், கடவுளாகவும் அவர்களைப் பார்க்கிறார்கள். அதனால்தான், அவர்கள் செய்யும் தவறுகள் உடனடியாக வெளியில் வருவதில்லை. குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இந்தச் சமூகத்தில் மிகவும் பிரபலமானவர்கள் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு ரொம்பவே பயப்படுகிறார்கள். இந்த உலகம் ஆணாதிக்க உலகமாகவே இருப்பதுதான் இதற்குக் காரணம். சிவசங்கர் பாபா சம்பவத்தை மட்டுமே என்னால் பார்க்க முடியவில்லை. ‘மீடூ’ இயக்கம் மூலம் இப்போதுவரைக்கும் பெண்கள் குற்றச்சாட்டு வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?
பெண்களுக்கு இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒரு அச்ச உணர்வும் குற்றங்களை வெளியே சொல்லவிடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணிடம், ஒரு ஆண் தவறாக நடந்து கொண்டான் என்று இந்தச் சமூகத்திற்குத் தெரியவந்தால், அந்தப் பெண்ணிற்குத் திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிவிடும். அதுவே, திருமணமான பெண் என்றால், அந்தப் பெண்ணின் கணவருக்கு அது அவமானமாகிவிடும், அவளின் குழந்தைகளுக்கு அது அவமானமாகிவிடும் என்றுதான் இந்தச் சமூகம் பார்க்கிறது. பொள்ளாச்சி சம்பவத்தையே எடுத்துக்கொள்வோமே, அதில் பல பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டதாகவும், பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது நிரூபணமும் ஆனது. அப்படியிருந்தும், அதை உடனடியாக வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம் நம்முடைய பெயரை வெளியில் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னால் அவர்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் சொல்லக் கூடாது என்று நம் நாட்டில் சட்டம் இருந்தும்கூட, பொள்ளாச்சி சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியே அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வெளியில் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல், வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளிடம், சொல்ல முடியாத அத்துமீறல்களை எல்லாம் செய்வார்கள். நான் என்னுடைய காலத்திலேயே பார்த்திருக்கிறேன். பெண் குழந்தைகள், பள்ளி மாணவிகள், பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு, பாலியல் சீண்டல் என்பது காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சட்டத்தின் மூலமாக இவற்றைக் குறைக்கலாம் என்றால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கலே இருக்கிறது. சமீபத்தில் மீடூ புகார் சொன்ன சின்மயியை எல்லோரும் கேள்வி கேட்டார்கள். ஆனால், வைரமுத்துவைக் கேள்வி கேட்க முடிந்ததா? துணிவு இருந்ததா? பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் அதற்குச் சாட்சி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். நான்கு சுவற்றுக்குள் நடக்கிற ஒவ்வொரு குற்றச் செயலுக்கும் நீங்கள் சாட்சி கேட்டால், எத்தனை பெண் குழந்தைகள், பெண்கள் வெளியில் வந்து சொல்ல முடியும்? தவறு செய்பவர் சாட்சி வைத்துக்கொண்டா தவறு செய்வார்?
சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் பள்ளி மாணவியரிடம் அத்துமீறியது பாலியல் வக்கிரம். இதுபோன்றவர்கள் ஒரு நோயாளியைப்போல் அதற்கு அடிமையாகி இருப்பார்கள். ஒரு சங்கிலித் தொடர் போன்று திரும்பத், திரும்பச் செய்துகொண்டே இருப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு வீட்டை உடைத்து திருடுகிறவன் வீட்டை உடைத்துத்தான் திருடுவான். செயின் திருடுகிறவன், செயினைத்தான் திருடுவான். அதுபோன்றுதான் வயதான ஆண்கள், சிறு வயதுக் குழந்தைகளைப் பாலியல் கொடுமை செய்வது நடக்கும். இதற்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு ஆண்மையை எடுத்துவிட வேண்டும். அவர்களுக்கு அதுதான் பிரச்சினையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள். முதலில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்கள் சரிபாதி இருக்கக்கூடிய சமுதாயத்தில், 2021இல்கூட மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது ரொம்ப வேதனையாக இருக்கிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், நாம் வளர்ந்த நாடாகிவிட்டோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? தவறைச் சுட்டிக்காட்டக்கூட உரிமை இல்லாத சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதையும் மீறி பொதுவெளியில் ஒரு பெண் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அதில் சம்பந்தப்பட்டவர்களும் அந்தக் குடும்பத்தாரையும் அந்தப் பெண்ணையும் எந்தெந்த வார்த்தைகளால் வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அந்தப் பெண்ணுக்கும் அவளது குடும்பத்துக்கும்தான் தெரியும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஒரு நத்தை எப்படிக் கூட்டுக்குள்ளே ஒளிந்துகொள்ளுமோ அதைப்போன்று ஒளிந்துகொள்வாள். மிகப் பெரிய திறமை வாய்ந்த பெண்கள்கூட வெளியில் முகத்தைக் காட்ட முடியாத ஒரு குற்ற உணர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாகக்கூடிய நிலை இருக்கும். பள்ளியில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் எதிர்காலத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை கண்டிப்பாகக் கெட்டுப்போகும். பள்ளிப்பருவத்தில் எது சரி, எது தவறு, எது குட் டச், எது பேட் டச் என்பது சரியாகத் தெரியாமல், இப்படிச் செய்வது எல்லாம் தவறோ என்று நினைப்பது அது எதிர்வினையாகக்கூட மாற வாய்ப்பு உள்ளது. தங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொண்டு வாழும் சூழல்தான் உருவாகும். “தவறு நடந்த உடனே ஏன் சொல்லவில்லை”, “ஏன் அன்றே சொல்லவில்லை” என்ற கேள்வி எழும்போது, ஒரு தவறு நடந்த உடனே அதை வெளிப்படுத்தக்கூடிய சூழல் அமையாதபோது, எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். இன்னாள் மாணவிதான் சொல்ல வேண்டும் என்பதுகூட இல்லை. முன்னாள் மாணவி சொன்னாலும் அதை நாம் வரவேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. இப்படியொரு கேள்வி கேட்ட டைரக்டர் பாக்யராஜ் தான் ஞாபகத்துக்கு வருகிறார். அவர்தான் ஒரு படத்தில், “ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் போகும்” என்று வசனம் பேசுவார். அந்த வசனம் என்னை பயங்கரமாக எரிச்சலூட்டியது. சமுதாயத்தை சீர்திருத்தக்கூடிய, சமூகத்துக்கு நல்லது சொல்லக்கூடிய பொறுப்பில் இருந்தவரே, ஒரு தவறு நடந்தால் அதற்குப் பெண் இடம் கொடுத்திருப்பாள் என்று நினைக்கும்போது வீட்டில் உள்ளவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும். இதுபோன்று நம்மையும் சொல்லிவிடுவார்களோ என்று பயந்துதான் பெண்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.
யாருமே மறக்க முடியாத, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நுங்கம்பாக்கத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவம். ஆனால், அந்தக் கொலையைக்கூடச் சிலர், இந்தப் பொண்ணு அவனைத் தூண்டிவிட்டிருப்பாள், திரும்பத் திரும்ப அவனைப் பின்னால் வர வைத்திருக்கிறாள், இவள் அவனைக் காதலித்துவிட்டு கழட்டி விட்டுவிட்டாள் என்றெல்லாம் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் சாதிப் பிரச்சினையை வேறு கொண்டுவந்து விட்டார்கள். அதனால், கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணைக்கூட இந்தச் சமூகம் தவறாகத்தான் சித்தரித்தது. இதுபோன்ற சூழ்நிலை இருப்பதால்தான் பல பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள்.
இந்தச் சமுதாயத்தில் மனித உயிர்கள் இருக்கிற வரைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால், இதைக் குறைக்க நம்மால் முடியும். “திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுகிற மாதிரி இந்த ஏரியாவில், இந்தத் தெருவில் பீடோஃபில்ஸ் நபர் ஒருவர் இருக்கிறார் என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டும். அந்த நபரைப் பார்த்தாலே உஷாராக இரு என்று மாற்றலாம். பொதுமக்கள் கூடுகிற இடங்களில் எல்லாம் “பிக் பாக்கெட் ஜாக்கிரதை” என்ற அறிவிப்புப் பலகையை நாம் பார்க்கிறோம். அதேபோன்று இதுபோன்ற நபர்களையும் அறிவிப்புப் பலகையில் போட வேண்டும். இப்படிப்பட்டவர்களை நாம் காணும்போது உஷாராக இருந்துகொள்ளலாம். நிர்பயா கொலை வழக்கில் ஒன்பதரை மணிக்கு ஏன் அந்தப் பொண்ணு வெளியில் போனாள் என்று கேட்டவர்களும் இருக்கிறார்கள். எல்லா நேரத்திலும் ஆணுக்கு இணையாகப் பெண்ணும் வெளியில் போவதும் சமமாகத்தான் இருக்க வேண்டும். கல்வி முறையில் மாறினாலும் இதுவும் மாறும். அதேபோன்று பாலியல் கல்வியைக் கொஞ்சம், கொஞ்சமாக அறிமுகப்படுத்தும்போது, படிப்படியாக நிச்சயமாக இதைக் குறைக்க முடியும். தண்டனையை விரைவில் கொடுக்க வேண்டும். தண்டனை என்பது ஒருவருக்குப் பாடமாக அமைய வேண்டும். வல்லுறவு வழக்கில் நிச்சயமாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். உயிர் போய்விடும் என்று ஒரு பயம் இருந்தது என்றால் 30 நாட்களில் தண்டனை கொடுக்க முடியும். ஒரு பெண் உண்மையாகவே குற்றச்சாட்டு வைத்தால், அதற்கு ஆதாரம் எல்லாம் கேட்காமல் அதைச் சரியான முறையில் பார்த்துவிட்டு, அதற்கான ஒரு முகாந்திரம் இருக்கிறது என்றால் உடனடியாகச் சம்பந்தபட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பதோ, ஆயுள் தண்டனை கொடுப்பதோ, இப்படிக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டால் தான் நிச்சயமாக இந்தக் குற்றங்களைக் குறைக்க முடியும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!