கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல்துறையினர் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தங்க கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்தவிசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டி ஒருவரிடம் சுமார் 5 1/2 சவரன் தங்க செயின் பறிப்பில் வாலிபர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(20), காதலி சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி (20) உடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை செய்தது தெரியவந்துள்ளது. பிரபல கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்துவரும் பிரசாந்த், ஆன்லைன் பந்தயங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், பந்தயத்துக்காக பல நண்பர்களிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நண்பர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கமுடியாததால், காதலியுடன் சேர்ந்துக்கொண்டு நகை திருட்டு வேலையில் ஈடுப்பட்டதாக பிரசாந்த் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடியது தங்களது மகன் தான் என்று தெரிந்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில், காதலர்களே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.