ஆந்திராவின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் வருகிற 16ஆம் தேதி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இதற்காக உற்சவர் சாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்படுவதுடன், பண்டிதர்கள் திருமலையில் இருந்து வர உள்ளனர். இதனையொட்டி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து மேடை மற்றும் பக்தர்கள் அமரும் பகுதிகள் அமைக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ள குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ்துறை, சுற்றுலா, அறநிலையத்துறை, வருவாய், தீயணைப்பு, போக்குவரத்து, சுகாதாரம், மாநகராட்சி, உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.