கரூர் மாவட்டம், புலியூரை அடுத்து உப்பிடமங்களம் கிராமத்தின் சுடுகாட்டில் சாக்கு மூட்டை 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை, கவனித்த அந்தபகுதி கிராம மக்கள், சாக்கு மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துள்ளனர். அதில், காலாவதியான ஓட்டுநர் உரிம அட்டைகள், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக முத்திரையுடன் இருந்துள்ளது. இதுதொடர்பாக, கிராம மக்கள் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது நூற்றுக்கணக்கான ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்ந்த ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகள் இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவற்றை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காவலர்கள் எடுத்துச்சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகள் சாக்கு மூட்டையில் சாலையோரத்தில் வீசப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.