காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று துணை இயக்குனர் அருணகிரி ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றன. காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற்று வேலை தேடி வரும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுடைய தகுதியின் அடிப்படையிலான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தேர்வு செய்து பயனடைந்தனர். மேலும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுடையவர்களுக்கு பணி நியமன கடிதங்களும், அதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், இனிவரும் காலங்களில் வாரந்தோறும் நடைபெற்று வந்த வேலைவாய்ப்பு முகாம் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை என மாதம் இருமுறை மட்டுமே நடத்தப்படுமென வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.