திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த மனோகரன் இருந்துவந்தார். இவர், தமது குடும்பத்தினருடன் கடந்த 15ஆம் தேதி இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் நிலைக்குலைந்தது. இதனையடுத்து, காரின் மீது லாரியை மோதி விபத்துக்குள்ளாக்கிய கும்பல், காருக்குள் இருந்த மனோகரனை, மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. இந்த வெறிச்செயலில் சம்ப இடத்திலேயே உயிரிழந்த மனோகரனின் உடலை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைத்தொடர்பாக காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கும்பல் கூடுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து கொலை சம்பவம் அரங்கேறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்தநிலையில், கொலையை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான சுந்தர் என்கிற சுந்தரபாண்டியனை கைது செய்து மீஞ்சூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட பகையே கொலைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது. மேற்கொண்டு அளித்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய சுந்தர் (எ) சுந்தரபாண்டியன் மற்றும் நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன், சூர்யா, பத்மநாபன், அரவிந்த்குமார், பாலாஜி ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, ஊராட்சிமன்ற தலைவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 12 பேரையும் காவல்துறையினர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஐயப்பன் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து 12 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகளின் முகங்களை காட்சிப்படுத்திவிட கூடாது என்பதற்காக மீஞ்சூர் காவலர்கள் பாலிதீன் கவர்களை கொண்டு குற்றவாளிகளின் முகம் வெளியே தெரியாத படி அழைத்து சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.