day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அழகு என்பது தோற்றத்தில் இல்லை ரம்யா

அழகு என்பது தோற்றத்தில் இல்லை ரம்யா

சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக, நீளக் கூந்தலுடன் என்று அழகுக்கு நாம் பல வரையறைகளை வைத்திருக்கிறோம். ஆனால், இயல்பாக இருப்பதுதான் அழகு என்று சொல்வதுடன் அதற்குத் தானே உதாரணமாகவும் விளங்குகிறார் ரம்யா. சென்னையைச் சேர்ந்த இவர், நிறமிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். கண்ணைப் பறிக்கும் நிறத்தில் இருக்கிறவர்கள் மட்டுமே மாடலிங் துறையில் தடம் பதிக்க முடியும் என்கிற கற்பிதத்தைத் தன் வருகையால் உடைத்து நொறுக்கியிருக்கிறார். திரைத்துறையில் ஜொலிப்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான பணியில் ஈடுபட்டுவருகிறார்.
ரம்யா சிறுமியாக இருந்த போதே அவருடைய அப்பா குடும்பத்தைவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு அம்மா, தங்கை என்று சுருங்கிப்போனது குடும் பம். திரைத்துறையில் சாதிக்கும் கனவுடன் காட்சித் தொடர்பியல் முடித்திருக்கும் ரம்யா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் சில காலம் பணிபுரிந்திருக்கிறார்.
பிறக்கும்போதே ரம்யாவுக்கு முகம், தலைமுடி என எல்லாமே வித்தியாசமான நிறத்தில் இருந்திருக்கிறது. அப்போது வீட்டில் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பிறகு வளர, வளர முட்டை, அசைவம் என எதைச்சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளாமல் உடம்பு முழுக்க கட்டி வந்தது. வலி அதிகமானபோது தோல் நோய் நிபுணரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் கொடுத்த மருந்து கட்டியைக் குணப்படுத்தியது. ஆனால், நிறக்குறைபாட்டை அதிகரித்துவிட்டது. இதைக் கண்டுபிடித்தபோது ரம்யாவுக்கு 10 வயது. ரம்யாவின் அப்பாவும் அம்மாவும் நெருங்கிய உறவினர்கள். சொந்த அக்கா மகளைத்தான் ரம்யாவின் அப்பா மணந்துகொண்டார். அதனால் ஏற்பட்ட பிரச்சினைதான் இது என்று பிறகு தெரியவந்தது.
“எனக்கு வந்திருப்பது நோயல்ல. ஒரு குறைபாடு, அவ்வளவுதான். உடம்புக்கு நிறத்தைக் கொடுக்கிற மெலினின் நிறமி என்னிடம் போதுமான அளவில் இல்லை. அதன் பரவலும் சீராக இல்லை. அதனால்தான் உடலில் ஆங்காங்கே வெண் திட்டுக்கள் தோன்றும். ஓரிடத்தில் தோன்றும், வேறு இடத்தில் மறையும். இப்படி அதன் அளவு கூடும் குறையுமே தவிர, முழுவதுமாக மறையாது” என்று சொல்லும் ரம்யா, இந்தப் பிரச்சினையால் பள்ளிப் பருவத்தில் பல்வேறு அவமானங்களைச் சந்தித்ததாகச் சொல் கிறார்.
“என் தோலின் நிறத்தால் சிறு வயதில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளேன். இது கடைசி வரைக்கும் மாறவே மாறாதா என்று வருத்தப்பட்டிருக்கிறேன். என்னுடன் யாரும் பழக மாட்டார்கள். என்னுடன் சேரக் கூடாது என்று அவர்களின் பெற்றோர் சொல்லியிருப்பார்கள். என் நிறக்குறைபாட்டை வெண்குஷ்டம் என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு என்னை ஒதுக்கிவைத்தார்கள். என்னிடம் யாரும் தண்ணி வாங்கிக் குடிக்க மாட்டார்கள். விளையாட்டு விழா, ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி என அனைத்திலும் என்னைப் பங்கேற்கவிட மாட்டார்கள். ஒரு முறை எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், போட்டியில் வெற்றி பெற்ற எனக்குப் பரிசளிக்க விருப்பம் இல்லை எனத் தட்டிக்கழித்தார். பள்ளியின் விதிமுறைகளை நான் பின்பற்றவில்லை என்று அதற்குக் காரணமும் சொன்னார்கள். ஆனால், உண்மையான காரணம் எனது தோற்றம். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியின் மேடையில் நிற்க வைத்து என்னை அவமானப்படுத்தினார்கள். 12 வயதிலேயே எனக்குத் தலையில் முன்பகுதியில் முடி இருக்காது. அதை மறைப்பதற்காகத் தொப்பி போட்டுத்தான் செல்வேன். ஒத்த ஜடை பின்னல்தான் போடுவேன். ஆனால், பள்ளியில் இரட்டை ஜடைதான் போட வேண்டும். என் நிலை தெரிந்தும் நான் விதிகளைப் பின்பற்றவில்லை என்று சொல்லி அந்தப் பரிசைத் தர மறுத்துவிட்டார்கள்” என்று சொல்லும் ரம்யா, ஏராளமான அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்து வந்திருக்கிறார்.
பேருந்தில்கூட இவரது அருகில் உட்காரப் பலரும் தயங்குவார்களாம். பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி செல்வதற்கு முன் தன்னை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் ரம்யா. புறத்தோற்றத்தில் கவனம் செலுத்தினார். நவீன உடைகளை அணிந்தார். இதனால், அவரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விடவில்லை. ஆனால், முன்பு இருந்த ஒதுக்கம் குறைந்தது. வெளியில் நடந்ததைவிட வீட்டுக்குள் நடந்த புறக்கணிப்பு ரம்யாவை வெகுவாகப் பாதித்தது.
“என் பெரியப்பா மகளைப் பெண் பார்க்க வந்தார்கள். என்னை அழைத்து வர வேண்டாம் என்று என் அம்மாவிடம் பெரியப்பா வீட்டில் சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் என் நிலையின் தீவிரம் எனக்குப் புரிந்தது. அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் என யாரும் எனக்கு சப்போர்ட்டிவ்வாக இல்லை” என்று சொல்லும் ரம்யா, மாடலிங் துறையில் நுழைந்தது இனிய அதிர்ச்சி!
ரம்யா இயல்பில் கிரியேட்டிவ்வான நபர். எதைப் பார்த்தாலும் அதை வரைவார். அனிமேஷன் படங்களை டிவியில் பார்க்கும்போது அந்தத் துறையில் சாதிக்க நினைத்தார். பிறகு திரைத்துறையின்மீது ஆர்வம் வந்தது. ஆனால், அவருடைய அம்மாவுக்கு ரம்யாவை மருத்துவராகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு துறையையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விருப்பம். இணையத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் பெண் புகைப்படக் கலைஞரும் ஒருவர். ரம்யாவைப் படமெடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் சொல்ல, முயன்று பார்க்கலாமே என்று ரம்யாவுக்குத் தோன்றியது. அது வெற்றிகரமாகவும் முடிந்தது. பிறகு தான் கடந்து வந்த பாதை குறித்து முகநூலில் எழுதினார். அவடே எதிர்பாராத வகையில் அது வைரலானது.
“ஏராளமானோர் பாராட்டினர். தங்களுக்கும் மாடலிங் செய்துதரச்சொல்லி பலர் கேட்டனர். ‘நானும் உங்களைப் போலத்தான். உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது’ என்று சிலர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சி. என்னை இழிவாகவும் ஏளனமாகவும் பார்த்தவர்களைத்தான் நான் அதுவரை சந்தித்திருந்தேன். அதனாலேயே எனக்குக் கிடைத்த பாராட்டுகளுக்கு எப்படி வினையாற்றுவது என்றுகூட எனக்குப் புரியவில்லை. இதுவரை எத்தனையோ பேருக்கு மாடலிங் செய்திருந்தாலும் என்னை நம்பி முதன் முதலில் படமெடுத்த அந்தப் புகைப்படத் தோழியை மறக்க முடியாது. கிரே கலரில் டி-ஷர்ட் போட்டுத் தலையில் கை வைத்ததுபோன்று முதன் முதலில் போஸ் கொடுத்தேன். அதுதான் எனக்கும் ரொம்பப் பிடித்தது” என்று சொல்லும் ரம்யா, இயல்பே அழகு என்கிறார்.
“இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு தவறான விஷயத்தை எல்லோரும் நம்பி, ஒரு ஐடியாலஜியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும், இதுதான் அழகு என்று அதைத்தான் இபபோது எல்லோரும் பின்பற்றுகிறார்கள். தவிர அதுதான் இங்கே பிசினசாக இருக்கிறது. அதனால், அதுபோன்ற வாய்ப்புகள்தான் நிறைய வந்திருக்கிறது. நான் நானாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். என்னை மாற்றி, எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதைவிட, நான், நானாகவே இருப்பதுதான் எல்லோருக்கும் பிடிக்கும்” என்று புன்னகைக்கிறார்.
ஆவணப்படம், ஏராளமான விருதுகள், அங்கீகாரங்கள் என்று பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் ரம்யா. தன் குறைபாட்டுக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்ததால் அந்த மருந்துகளின் பக்க விளைவுகளில் இருந்து விடுபடத் தற்போது ஓய்வில் இருக்கிறார்.
“நான் சாப்பிடுகிற மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து எனக்குத் தெரியும். அதனால், என்னை நான் நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தனிப்பட்ட கவனம் தேவை. மீடியா துறையில் இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ததாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாததும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஓய்வுக்கு இடையே திரைக்கதை எழுதும் வேலையையும் செய்கிறேன். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ ‘மாயாவி’ என்கிற தொண்டு நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். சிறு வயதில் நான் அனுபவித்த தனிமை எனக்குத் தெரியும். அதனால்தான், இப்படியொரு திட்டம்” என்று சொல்லும் ரம்யா, வெற்றிபெற என்ன வழி என்று விளக்கினார்.
“நம்மை விட யாரும் அழகில் கூடுதல் இல்லை, நம்மைவிடத் திறமையில் கூடுதல் இல்லை என்று நினைக்கிற வரைக்கும் உலகத்தைப் பார்க்கும்போது நமக்குப் பயமாகத்தான் இருக்கும். அந்த பயம் நம்மைவிட்டுப் போக வேண்டும் என்றால், யார் எப்படி இருந்தாலும் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்கிற உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள் உள்ள கனவைத் தட்டி எழுப்பினாலே போதும்; தன்னம்பிக்கை தானகவே வளரும்” என்று முடித்தார் ரம்யா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!