day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அர்பிதாவுக்கு ஒரு சல்யூட்!

அர்பிதாவுக்கு ஒரு சல்யூட்!

இனிவரும் காலம் இளைஞர்களின் காலம் என்பதற்கு வலு சேர்த்திருக்கிறார் அர்பிதா. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இவர், தேசிய அளவில் சிறந்த என்.சி.சி., மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமர் மோடியின் கைகளால் விருது பெற்றிருக்கிறார்.
அர்பிதாவின் பூர்வீகம் கேரளம். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இவருடைய தந்தை பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா, சுயதொழில் செய்கிறார்.
பள்ளியில் படிக்கும்போதே அர்பிதாவுக்குத் தேசிய மாணவர் படையில் அதிக ஆர்வம் இருந்தது. யோகா, கராத்தே போன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டியிருந்ததால் அவரால் என்.சி.சி.யில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் கல்லூரியில் சேர்ந்தபோது, என்.சி.சி. இருக்கும் கல்லூரியாகப் பார்த்து சேர்ந்தார். கல்லூரி முடித்து ராணுவத்தில் இணைய வேண்டும் என்பதற்காகவும் அதற்கு அடிப்படை பயிற்சியாகவும் அது இருக்கும் என்று என்.சி.சி.யில் சேர்ந்தார்.
“என்.சி.சி.யிலும் ராணுவப் பயிற்சி போன்றுதான் இருக்கும். ஆனால், கடுமையான பயிற்சிகள் இருக்காது. என்.சி.சி. பயிற்சியில் வெறும் டிரில், மார்ச் மட்டும்தான் இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படியல்ல. இங்கே நிறைய தியரி, பிராக்டிக்கல் என்று கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றைப் பற்றி நிறைய படிக்க வேண்டும். நம் திறமைகளை மேம்படுத்துவது பற்றிய பயிற்சியும் இருக்கும். இன்டர்வியூவுக்குப் போனால் எப்படிப் பேச வேண்டும் என்பது போன்ற குரூப் டிஸ்கஷன் இருக்கும். அதனால் இங்கே நிறைய கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் அர்பிதா.
பெரும்பாலும் பெண்கள் அவ்வளவு ஈடுபாட்டுடன் என்.சி.சி.யில் பங்கேற்பதில்லை என்பது வெறும் கட்டுக்கதை என்கிறார் அர்பிதா. “இப்போது விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் என்.சி.சி.யின் முக்கியத்துவம் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால், பல பெண்கள் என்.சி.சி.யைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நிறையப் பேர் என்.சி.சி.யில் சேர ஆர்வமாக இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இடம் இருப்பதால் எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. முதலில் வருபவர்களுக்கே வாய்ப்புக் கிடைக்கிறது. சமீபகாலமாகப் பெண்கள் பல வகையில் துன்புறுத்தப்படுவதால் அவற்றில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக சிலர் என்.சி.சி.யில் சேர்ந்துகொள்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் காவல்துறையிலோ ராணுவத்திலோ சேர விரும்பினால் பெற்றோர் பயந்தார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை ராணுவத்திலும், காவல்துறையிலும் சேர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்” என்கிறார் அர்பிதா.
கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்ததுமே அர்பிதா என்.சி.சி.யில் சேர்ந்தார். இரண்டு வருடங்களாக இதில் இருக்கிறார்.தற்போது தேசிய அளவில் சிறந்த என்.சி.சி. வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்படும் முன் பல தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்றிருக்கிறார். முதலில் கல்லூரி அளவிலும், பிறகு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற்றார். அதற்குப் பின்னர்தான் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்கப் பதக்கம் வென்றார்.
“இப்படியொரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. காரணம், போட்டி அவ்வளவு கடுமையாக இருந்தது. கடந்த வருடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாகக் குறைவானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டோம். ஆனால், போட்டி கடுமையாக இருந்தது. தேர்வாவதே மிகவும் கடுமையாக இருந்தது. டெல்லிக்குச் சென்றிருந்தபோது அங்கு இறுதிப்பட்டியலில் என் பெயரைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிரதமர் கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது. ராணுவ அதிகாரிகளும் மற்றவர்களும் வாழ்த்தியபோது அளவிட முடியாத ஆனந்தமாக இருந்தது. எனது பெற்றோரும் மிகவும் மகிழ்ந்தனர்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் அர்பிதா.
தேசிய அளவிலான போட்டி மிகவும் கடினமாக இருந்ததாக அர்பிதா சொல்கிறார். “முதலில் எழுத்துத் தேர்வு இருந்தது. நான் கடற்படையைத் தேர்வு செய்ததால் எழுத்துத் தேர்வில் அது தொடர்பான கேள்விகள் இடம்பெறும். பொதுத்தேர்வில் ராணுவம், விமானப்படை, பொது அறிவு போன்றவை குறித்து எழுத வேண்டும். இந்திய வரலாறு, என்.சி.சி. சம்பந்தமான கேள்விகள் உட்பட பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பின்னர் டிரில் தேர்வு. பின்னர் குழு உரையாடல் இருக்கும். இதில் நிறைய தலைப்புகள் குறித்துப் பேச வேண்டும். பின்னர்தான் இன்டர்வியூ இருக்கும். முதல் நான்கு பேரில் ஒருவராகத் தேர்வான பிறகு டைரக்டர் ஜெனரல் இன்டர்வியூ இருக்கும். 17 மண்டலங்களில் இருந்து போட்டியில் கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் இறுதிப் போட்டிக்குத் தேர்வானோம். என் பூர்விகம் கேரளமாக இருந்தாலும், நான் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொண்டேன். என்.சி.சி.யைப் பொறுத்தவரையில் எல்லோரும் இந்தியர்கள் என்கிற அடிப்படையில்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். அதனால் கேரளா, தமிழ்நாடு என்ற பாகுபாடில்லாமல்தான் நான் அங்கே கலந்துகொண்டேன்” என்று சொல்லும் அர்பிதா, ராணுவத்தில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியை என்.சி.சி. மூலம் பெறுவதாகச் சொல்கிறார்.
“என்.சி.சி.யை Last line of Design என்று சொல்வார்கள். அதாவது ராணுவம், விமானப்படையைப் போன்றதுதான் என்.சி.சி. இதில் சேர்ந்த பின்னர் Cadet ஆகிறோம். இதன்மூலம் மக்கள் சேவையிலும் ஈடுபடுகிறோம். கொரோனா காலகட்டத்தில் என்.சி.சி. வீரர்கள் பொதுமக்களுக்குப் பல உதவிகள் செய்தனர். அதேபோல் கேரளாவில் வெள்ளம் வந்தபோதும் இவர்கள்தான் உதவினார்கள். பள்ளிப் பருவத்தில் இருந்து கல்லூரி வரைக்கும் அதாவது சிறு வயதிலேயே எந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது பார்க்கப்படுகிறது. டிகிரி முடித்த உடன் ராணுவத்தில் சேர்வதுதான் என்னுடைய லட்சியம். இப்போதைக்கு இறுதித் தேர்வு எழுதியதும் ராணுவப் பயிற்சி பள்ளியில் சேர்வதுதான் என் இலக்கு” என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டிச் சிரிக்கிறார் அர்பிதா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!