சிறு வயதிலோ, கல்லூரிக் காலத்திலோ பெண்களின் மனதில் சுடர்விடுகிற ஆசையெல்லாம் திருமணம், குடும்பம் என்று ஆனதும் மறைந்துவிடுகின்றன. குழந்தைகள் பிறந்த பிறகோ பெண்களுக்கென்று தனிப்பட்ட விருப்பமோ லட்சியமோ அவற்றை அடைவதற்கான சூழலோ வாய்ப்பதில்லை. ஆனால், சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கைவிடாமல் இருந்தால் திருமணத்துக்குப் பிறகும் சாதிக்கலாம் என்கிறார் ஹேமா குமரன். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், சொந்தமாக ஆடை விற்பனையகத்தை நடத்திவருகிறார்.
ஆடை விற்பனையகம் என்றால் பல அடுக்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கடையல்ல இவருடையது. 2007இல் வெறும் 30 சதுர அடியில் தன்னுடைய வீட்டிலேயேதான் தொழிலைத் தொடங்கினார். அந்த அளவில் மட்டுமே அவர் நிறைவடைந்துவிடவில்லை. கடையை எப்படியாவது விரிவாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருந்தார். அதைச் செயல்படுத்தவும் செய்தார். தனியாகக் கடை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடையை விரிவாக்கம் செய்து, 2012இல் சுமார் 700 சதுர அடியில் ஓரளவுக்குப் பெரிய கடையைத் திறந்தார்.
சிறுவயதில் இருந்தே ஹேமா குமரனுக்கு டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வம். எட்டு வயதில் தனக்கென்று ஓர் ஆடையை அவரே வடிவமைத்ததாக அவருடைய பெற்றோர் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான், தன்னால் ஆடை வடிவமைப்பில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஹேமலதாவுக்குக் கொடுத்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்ததும், இதுதான் தன் கனவை நனவாக்க சரியான தருணம் என்று அவருக்குத் தோன்றியது. பிறகு முழுமூச்சுடன் வேலையில் இறங்கியவர், 14 வருடங்களாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்.
ஆடை விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறவர் களுக்கே ஆயிரம் சவால்கள் இருக் கும்போது, தானே ஆடைகளை வடிவ மைத்து அவற்றை விற்பனையும் செய்யும் ஹேமலதா வுக்குச் சவால்கள் இருக்காதா? இருந் தது. ஆனால், அவற்றை அவர் வெற்றிகரமாகச் சமாளித்தார்.
“சிறிய அளவில் மூலதனம் போட்டுத் தொழில் தொடங்கினோம். இடமும் ரொம்ப சின்னது. அதனால், மக்களிடம் எங்கள் ‘பொட்டிக் ஷாப்’ பற்றி விளம்பரம் செய்வது ரொம்ப சிரமமாக இருந்தது. இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கிடைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே. அதற்காக நோட்டீஸ் போட்டு, பள்ளிக்குக் குழந்தைகளைக் கூட்டிச்செல்லும்போது அங்கு வரும் பெற்றோரிடமும் கொடுத்தேன். தொிந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், வணிக வளாகங்களின் அருகில் இருப்பவர்களிடமும் கொடுத்தோம். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பொட்டிக் டெவலப் ஆனது. என்னோட தொழில் முதலீடு குறைவு. அதனால், மக்கள் விரும்புகிற மாதிரியான நிறைய மாடல்களைக் கொடுக்க முடியாது. இதுபோன்ற நிறைய பிரச்சினைகள் ஆரம்பத்தில் இருந்தன” என்று சொல்லும் ஹேமா குமரன், அவற்றையெல்லாம் சமாளித்து முன்னேறினார்.
இல்லத்தரசிகள் தங்கள் கனவைச் சொன்னதுமே வீட்டில் இருந்துதான் முதல் எதிர்ப்பு கிளம்பும். அதை மீறித்தான் பலர் சாதிக்க வேண்டியிருக்கிறது. “ஒரு பெண் தொழில் தொடங்கும்போது, அவருக்குக் குடும்பத்தில் உள்ளவர்களின் உதவி கண்டிப்பாகத் தேவை. அதேநேரத்தில் திருமணமான பெண்ணாக இருந்தால் கணவன் மற்றும் புகுந்த வீட்டினர் உதவ வேண்டும். இந்த இரண்டையும்தான் நான் பொிதாகக் கருது கிறேன். அவர் கள் பக்க பலமாக இருப்பதால்தான் என்னால் மற்ற கவலைகளை ஒதுக்கி வைத்து முன்னேற முடிகிறது” என்கிறார் ஹேமா குமரன்.
ஆடை வடிவமைப் புத்துறையில் வாடிக் கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது மிகப் பெரிய சவால். அதற்கேற்பவும் ஹேமா குமரன் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்கிறார். அந்தந்த காலகட்டத்திற்குத் தகுந்தாற் போல் மக்கள் மத்தியில் எது டிரெண்டிங்காக இருக்கிறதோ அந்த டிசைன், நிறம், துணி ஆகியவற்றை உடனே வாங்கிவிடுவார். அவற்றைக் கொண்டு வித்தியாசமான முறையில் தைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். டிசைனிங் துறையில் தினம் ஒரு மாற்றம் நடக்கும். அதற்கேற்ப ஒவ்வொரு வாரமும் புதுப்புது மாடல்களில் துணியைத் தைப்பதில் ஹேமா குமரன் கவனத்துடன் இருக்கிறார்.
“இந்தத் துறையில் வாடிக்கை யாளர்களைக் கையாள்வதும் திருப்தி படுத்துவதும் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆரம்பத்தில் நிறைய சிக்கல்களைச் சந்தித்தேன். சிலர் டிசைன் சரியில்லை, ஸ்டிச்சிங் சரியில்லை என்று என் கண் முன்னாலேயே தூக்கிப்போட்டிருக்கிறார்கள். அது அந்த நேரத்துக்கு வருத்தமாக இருந்தாலும், அடுத்த முறை இப்படி யாரும் சொல்லாத அளவுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வேன். அதுதான் இன்று வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது” என்கிறார் ஹேமா குமரன்.
நமக்கு நன்றாகத் தெரிந்த தொழிலைத் தொடங்குவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் ஹேமா குமரன்.
“பணம் இருந்தால் தொழில்தொடங்கி விடலாம் என்று எண்ணக் கூடாது. நாம் தொடங்க நினைக்கும் தொழில் நமக்குப் பரிச்சயமானதாக இருக்க வேண்டும். அந்தத் தொழில் நமக்குப் பிடித்திருக்க வேண்டும். அதை ரசித்துச் செய்ய வேண்டும். பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துத் தொழில் செய்தால் அது நமக்கு வெற்றியைத் தரும் வாய்ப்பு குறைவு. விருப்பமான தொழில்தான் நம்மைத் தொய்வின்றி வழிநடத்தும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்பட முடியும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் முதலீடு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. குறைந்த அளவு முதலீடு செய்து தொழில் தொடங்கி, பின்னர் படிப்படியாக உயரலாம்” என்று சொல்லும் ஹேமா குமரனை கொரோனா காலம் பெரிதாகப் பாதிக்கவில்லை. பெரிய பெரிய வணிக நிறுவனங்களே விற்பனை இல்லாமல் தள்ளாடியபோது ஹேமலதாவின் தொழிலில் பெரிய பாதிப்பில்லை. காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் இணையவழிச் சேவையைத் தொடங்கிவிட்டனர். அதனால், கொரோனா காலத்திலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் விற்பனையைத் தொடர்ந்தனர்.
விளம்பரம் எதுவும் செய்யாமலேயே கிடைத்திருக்கிற வாடிக்கையாளர்களே தனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறார்கள் என்கிறார் ஹேமா குமரன். “என்னுடைய வாடிக்கையாளர்களின் திருப்திதான் எனக்கு முக்கியம். அதேபோல் அவர்களும் என்னுடைய கடைக்கு நிறைய வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இதுவே போதும். சிறிய அளவில் இருக்கும் என் பொட்டிக் ஷாப்பைப் பொிய கடையாக மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு” என்று சொல்லும் ஹேமா குமரன் அந்தக் கனவை அடையும் முயற்சியில் ஓடிக்கொண்டி ருக்கிறார்.