15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 67ஆவது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 10 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், பெங்களூரு அணி விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்திலும் உள்ளது. இந்தநிலையில், இந்தபோட்டியில் முதல் அணியாக குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால், பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்தபோட்டியில் வெற்றிப்பெறுவது கட்டாயமாக உள்ளது. எனினும், இந்ததொடரின் அறிமுக அணியான குஜராத், பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. எனவே இந்த ஆட்டத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கடுமையான சூழலில் பெங்களூரு அணி இருக்கிறது. இந்தநிலையில், பெங்களூரு அணியும், குஜராத் அணியும் வெற்றிபெற கிட்டத்தட்ட சம வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதால் இந்த ஆட்டத்தில் வெல்லப்போவது குஜராத் அணியா அல்லது பெங்களூரு அணியா என்பதை இன்று இரவு பார்ப்போம்.