இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை எதிர்க்கொள்ள முடியாமல் அந்தநாட்டு மக்கள் திணறிவருகின்றனர். ஒருபுறம் இலங்கை மக்கள் தங்கள் நாட்டில் வாழவழியில்லாமல் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம் ஆளும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் அந்தநாட்டு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இலங்கை மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றனர். நாளுக்குநாள் தமிழகத்தில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்தநிலையில், ஏற்கனவே 21 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதிக்கு 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழக காவல்துறை மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் இலங்கையை சேர்ந்தவைகளை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்களை காவல்துறையினர் தங்கவைத்தனர்.