 
                    
                    சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உணவுப் பொருட்களை, மாவட்ட கிட்டங்கிகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்கள் கோரியது.இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மாநில குழுக்கள் மூலம் உணவு பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்த டெண்டர் வெளியிட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்த டெண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 
     
     
     
     
    