day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிவது  அரசியலமைப்பு உரிமை

ஹிஜாப் அணிவது  அரசியலமைப்பு உரிமை

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்திலுள்ள அரசு பி.யு. கல்லூரி ஒன்றில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் வருவதற்குப் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. அவர்களைப் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்தது. அந்த மாணவிகள் வகுப்பறைகளுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் பிரச்சினை, பிப்ரவரி 8 ஆம் தேதி தீவிரமானது. அன்று காலையில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி சால்வையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளில் சிலர் காவி நிற தாவணியுடன் வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி மாணவர் அமைப்புகள் களத்தில் குதித்தன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில், காவித்துண்டு அணிந்த இளைஞர்களுக்கு மத்தியில் ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்ட மாணவி முஸ்கான் வீடியோ வைரலானது. அவரைப் பொறுத்தவரை, கல்லூரியில் மற்றவர்கள் காவித் துண்டோ தலைப்பாகையோ அணிவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அந்த ஆடைகள், அவர் அணியும் ஹிஜாப்பைப் போலத்தான் என அவர் கருதுவதாகக் கூறினார். “எனது  ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வகுப்பறைக்குள் நுழைய முயன்றபோது, 40 இளைஞர்கள் என்னை நோக்கி ஒடி வந்தனர். அவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்..’ என்று கோஷமிட்டனர். நான் என் புர்காவைக் கழற்ற வேண்டும். இல்லையெனில், நான் வெளியே செல்ல வேண்டும் என்றனர். அப்போது  நான், ‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டேன். எனக்குப் பயம் ஏற்பட்டபோது, அல்லாவை அழைத்தேன். எனக்கு அது தன்னம்பிக்கையைத் தந்தது’’ என்று தெரிவித்துள்ளார் முஸ்கான். 

 

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

 

உடுப்பியில் ஹிஜாப் விவகாரம் தலைதூக்கியது இது முதல் முறையல்ல. கடலோர கர்நாடகாவின் இந்தப் பகுதியில், கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்து 2005 ஆம் ஆண்டு முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. அந்த விவகாரம் மீது அப்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்கப்பட்டுவிடும் என்ற நிலையே இருந்துள்ளது. 

இதுபோலவே, கேரளாவில் க்ரைஸ்ட் நகர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி விதித்த தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். 2018 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஏ முகமது முஷ்டாக், ‘மாணவிகள் அவர்கள் விரும்பியபடி ஆடை அணிவதற்கும் அதே அடிப்படை உரிமை உண்டு’ என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.

மஹிளா முன்னடே என்ற பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த மாலிகே, “ஒரு சமூகம் தாங்கள் இலக்கு வைக்கப்படுவதாக உணரும்போது மத அடையாளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. கர்நாடகாவில், பர்தா அணியும் வழக்கம் அதிகமாக இல்லை; தலையில் துப்பட்டாவை மட்டுமே முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் சுற்றிக் கொள்வார்கள். ஆனால் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு அந்த வழக்கம் மாறியது. அதை இப்போதைய தலைமுறை பின்பற்றுகிறது. மேலும், கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் மற்றும் புர்கா போன்ற மத பழக்க வழக்கங்களை கேள்விக்குள்ளாகலாம். அதே நேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை அவர்களின் கோணத்தில் இருந்து பார்ப்பதும் அவசியம்” என்கிறார் மாலிகே.

கர்நாடகாவில் நடைபெற்ற இந்தச் சர்ச்சை பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் வரை சென்றது. ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்த இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடம்பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

 

பள்ளிக்குள் வேண்டாமே அரசியல்

 

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “தனியொரு பெண்ணை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியபடி  துரத்திக்கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் பெண் அச்சமற்று அவர்களை எதிர்கொள்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் மாணவர்களை, மதவெறியர்களாக மாற்றிவருகிறது. பாஜக ஆட்சிசெய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்தக் காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இப்படி மாணவர்கள் மதவெறி பிடித்து அலைவதில்லை.  பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே விரோதமானது’’ என்று பதிவிட்டுள்ளார். 

பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “கல்வி என்பது மதத்தைப் பற்றியது கிடையாது. மாறாக, சமத்துவத்தைச் சார்ந்தது. பள்ளிக்குச் சீருடை அணிந்து செல்ல வேண்டும். ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி மையங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டும் இடம் கிடையாது. கல்விக்கூடம் என்பது ஓர் இந்தியராக நீங்கள் வலிமையாகக் காட்ட வேண்டிய இடம். இதை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் அவமானகரமானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இது குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்தபோது, பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹிஜாப், ஜீன்ஸ், கூங்கட், பிகினி என எதை அணிவது என்பது குறித்து முடிவெடுப்பது பெண்களின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியல் அமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், ஹிஜாப் சர்ச்சை குறித்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தைப் பதிவிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, ஹிஜாப் மற்றும் புர்காவை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!