day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வருமானத்துடன் நிம்மதியும்  கிடைக்கும் வழி

வருமானத்துடன் நிம்மதியும்  கிடைக்கும் வழி

பாண்டிச்சேரியைச் சேர்ந்த காயத்ரிக்குச் சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் . சிறு சிறு ஓவியங்கள் வரைந்தவர், பத்தாம் வகுப்பு முடிந்ததும் கோடை விடுமுறையில் ஓவியக் கலைக்கான சிறப்பு முகாம்களில் பயிற்சி பெற்றார். அதன் பின் கட்டிட வரைபடத்தில் டிப்ளமோ முடித்தார். கட்டிட வரைபடத் துறையில் நம்மால் பெரிதாகச் சாதிக்க முடியாது என்று நினைத்த காயத்ரி, ஓவியத் துறையைத் தேர்ந்தெடுத்தார். 

பாரதியார் பல்கலைக் கூடத்தில் 5 வருடப் படிப்பை முடித்தார். பின் குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டது. குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு மேற்படிப்பு படிக்க சென்னை செல்ல வேண்டுமே என்கிற யோசனையில் நாட்கள் ஓடின. ஒருவழியாகக் கடந்த 2019ஆம் ஆண்டு தான் மேற்படிப்பு முடித்தார். இப்பொழுது Phd செய்துகொண்டு இருக்கிறார் . இவர் பாண்டிச்சேரியில் இருப்பதால் paintings in French India என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்துவருகிறார். கண்ணாடி ஓவியம், ரங்கோலி ஓவியம், ஃபேப்ரிக் ஓவியம் என்று அனைத்து வகையான ஓவிய முறைகளையும் கற்றுக்கொண்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுத்து வருகிறார்.  தன் ஓவியப் பயணம் குறித்து காயத்ரி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:  

 

“நான் வரைவது நீர் ஓவியம் என்பதால் நன்றாக விற்பனை ஆகும். ஒரு வருடத்திற்கு நிச்சயம் இரண்டு அல்லது மூன்று கண்காட்சிகள் நடத்துவோம். இப்பொழுது கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக ஆன்லைன் மூலமாகக் கண்காட்சிகளை நடத்தினோம். இப்பொழுதும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஓவியம் கற்றுக்கொடுக்கிறேன். நான் படித்த காலத்தில் ஓவியத்திற்கென்று தனிப் படிப்பு உள்ளது என்பதே பலருக்குத் தெரியாது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று எல்லா இடங்களிலும் ஓவியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நான் சிறு வயதில்  வரையும்பொழுது அனைவரும் என்னை ஊக்குவித்தனர். அப்போது என் உறவினர்கள்தான் இந்தப் பயிற்சிகளைப் பற்றிக் கூறினார்கள். அதன் பின் எனக்கு ஓவியம் வரையத் தெரிந்ததால்தான் நான் கட்டிவியல் படிக்கப் போனேன். அதுவரை எனக்கு ஓவியம் ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது. அதன்பின் ஓவியம் சார்ந்த படிப்பையே தேர்ந்தெடுப்போம் என்று அதில் மேற்படிப்பு முடித்தேன். இப்போது 11 வருடம் இதற்காகப் படித்து, 20 வருடங்களாக ஓவியக் கலைஞராக இருக்கிறேன். எந்த ஒரு கலையையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் காலத்துக்கு ஏற்றாற்போல் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அதை நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.  ஆரம்பக் காலங்களில் ஓவியக்கலையில் முழுமையாக ஒரு கலைஞன் வர நிறைய தடைகள் இருந்தன. கலை என்பது நடுத்தரக் குடும்பங்களால் அணுக முடியாத ஒன்றாக இருந்தது.

 

பொழுதுபோக்க  மட்டுமல்ல

 

முன்காலங்களில் ஓவியம் என்றாலே அரசக் குடும்பதினருக்கு மட்டும்தான் என்ற நிலை  இருந்தது. அதேபோல் கல்லூரியில் படிப்பது, வண்ணங்கள் வாங்குவது என அனைத்திற்கும் அதிகம் செலவாகும். என் வீட்டிலும் இந்தத் துறையைத் தேர்தெடுக்க விடவில்லை. ஆனால், வருடா வருடம் என் ஓவியங்களைக் கண்காட்சிகளில் வைத்து அது விற்பனை ஆனபோது அவர்களுக்கு என் மீது நம்பிக்கை வந்தது.  தனக்காக, கலைக்காகக் கலைஞன் கலையைப் பயன்படுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாம் சிறிதேனும் வருவாய் ஈட்டினால்தான் அந்தக் கலையையும் காப்பாற்ற முடியும். பெற்றோரிடமும் நம்பிக்கை பிறக்கும். இப்பொழுது கலையைப் பொழுதுபோக்காக மட்டும் பார்க்க முடியாது. பள்ளியில் அறிவியல் படிக்கும்பொழுது எல்லாப் பாடத்திற்கும் ஓவியம் தேவைப்படுகிறது. இப்பொழுது கலையையும் ஒரு பாடமாகச் சேர்க்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. கட்டடக் கலை,  ஃபேஷன் துறை, டெக்ஸ்டைல் டிசைனிங், அனிமேஷன் துறை என இதில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சான்றிதம் இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும் என்பது இதில் இல்லை. திறமை இருந்தால் கண்டிப்பாக ஓவியத் துறையில் வளரலாம். 

 

J.M.W . Turner வரைந்த எண்ணெய் ஓவியமும் நீர் ஓவியமும் எனக்குப் பிடிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை ஜி.டி. பால்ராஜின் நீர் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மொழி தோன்றும் முன்பே ஓவியம் தோன்றியது. அதன் மூலமாகவே கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அதனால், நம் சங்ககால இலக்கியங்களிலும் வரலாற்றிலும் ஓவியம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

 

கருத்து சொல்லும் ஓவியம்

 

கலை என்பது இரண்டு வகையில் உதவும். ஒன்று நம் மன நிம்மதி , மற்றொன்று மக்களுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றால் அதைக் கலையால்தான் செய்ய முடியும். சில கலைகள் பார்த்தவுடன் புரிந்துவிடும் ஆனால், சில கலைகள் பல நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் எளிதில் எல்லோருக்கும் புரிந்துவிடாது.  அதே போல் சில ஓவியங்கள் கலைஞர் ஒரு மனநிலையில் வரைந்திருந்தாலும் பார்க்கும் பார்வையாளரின் மனநிலைக்கு ஏற்ப அது வேறு கருத்தினை அவருக்கு உரைக்கும். 

சில ஓவியங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காவிட்டாலும் பார்ப்போருக்கு மனநிம்மதியைக் கொடுக்கும். என்னுடைய ஓவியங்களில் கிராமங்கள், விவசாயம், அவர்களின் வாழ்க்கைமுறை , கிராமத்தில் அழகியல், விழாக்கள் என அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அதனுடன் பாண்டிச்சேரி அனைவருக்கும் பிடிக்கும் ஊர் என்பதால் சுற்றுலாத் தளங்களை எடுத்துக்காட்டும் ஓவியங்களும் இருக்கும். 

எப்படியும் நாம் அனைவரும் நமது முன்னோர்களும் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்போம். பொருளாதாரம் காரணமாக அனைவரும்  நகர்ப்புறத்தை நோக்கி வந்துவிட்டோம். அதனால், விவசாயம் செய்ய ஆள் இல்லாமல் எல்லோரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். விவசாயம் செய்ய நிலம் இருந்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால், கிராமத்தின் முக்கியத்துவத்தைப் புரியவைக்கும் விதமாகவும், அழகினை வெளிப்படுத்தும் விதமாகவும் என் ஓவியம் இருக்கும். 

இப்பொழுது கலையை ஒரு பாடமாகப் பள்ளிகளில் வைத்தது மிகவும் பாராட்டிற்குரியது. நாம் கொடுக்கும் கல்வி எப்பொழுதும் தரமாக இருக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் கலையில் கைதேர்ந்தவர்களாக வளர வேண்டும் என்பது என் ஆசை”.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!