day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ரத்னா…

ரத்னா…

அதிகாலையின் ரம்மியத்தை ரசிப்பது ரத்னாவதிக்கு மிகவும் பிடித்த ஒன்று ! நகர்ப்புறத்தின் தீற்றல்கள் தொலைத்த ஓவியமாய் தனித்து நின்றது நத்தம் கிராமம். சூரியனின் கதிர்கள் மண்மேடு போர்த்திய சாலைகளைத் தொடவில்லையெனினும் ஆங்காங்கே சற்றே நெகிழ்ந்து தன் இருட்டு முந்தானையை வானத்தில் இருந்து அகற்றிக் கொண்டு இருந்தாள் இருளரசி !
சாலையோர விளக்குகள் இத்தனை நேரம் ஒளிர்ந்ததே அதிகம் என்று தன் ஒளியை மின்சாரக் கூட்டிற்குள் மறைத்து கொள்ள, ‘ஆத்தா’ காபித்தண்ணி கொண்டு வரவா ? இப்பத்தான் லட்சுமி பாலைப் பொங்கப்பொங்க கறந்து இருக்கு, நீங்க வாசத் திண்ணையிலே உட்காருங்க. நான் வர்றேன். பொன்னியின் வாஞ்சனையான பேச்சிற்கு ரத்னாவதி தன் உதட்டின் சுருங்கிய வரிகளை சற்று அதிகப்படுத்தி சிரித்தார். முன்பைப்போல சற்று நடமாட்டம் அதிகமில்லை, சில நேரங்களில் அமைதியாய் எங்கோ வெறித்தபடியான பார்வைகள் மட்டும் தன்னுடன் தன் காலக் கடைசியில் இணைந்திருக்கிறதே என்ற நினைப்பில், ‘ஏலே கனகு அந்த மாட்டுக்கு தண்ணி காட்டுடா ?!’ எங்கோ காற்றில் மிதந்து வந்த குரல் கனகு என்ற வார்தை மட்டும் அந்த ஒலி மட்டும் எங்கே தன்னைவிட்டு அகன்று விடப்போகிறதோ என்ற தவிப்பில் ரத்னாவதி! ஆத்தா காத்தாலே வடைக்கு அரைச்சேன் இந்தா ரெண்டு தொட்டுகிட்டு காபியைக் குடிங்க. நான் போய் எம் பொண்ணை பள்ளிக்கூடத்திற்கு கிளப்பி விட்டுட்டு வந்திடறேன். இன்னைக்கு யாரோ ஒரு புது வாத்தியாரு வர்றாராம். லேட்டா போவக் கூடாதுன்னு ஒரே அழுகை…’ பேசிக்கொண்டே இட்ட வடைகளில் நான்கைந்தை சிறு தூக்குவாளியில் எடுத்துப் போனாள் பொன்னி.
‘புது வாத்தியார் வந்திருக்காரு’ இதே போல் ஒருகுரல். அன்றுதானே கனகுவை அவள் நேரில் சந்தித்ததும், அந்த நிகழ்வுகளும் மனதில் மண்டியது, படிப்பு முடிஞ்சதும் எதுக்கு மறுபடியும் அந்தப் பாழாப்போன பள்ளிக்கூடத்தையே கட்டிட்டு அழறே ?
புதுசா வந்திருக்கிற வாத்தியாரு யாரு என்னன்னு பார்க்க வேண்டாம்மா? அவரே மதிய வகுப்புகள் எடுக்கிறதா சொன்னாங்க. அதனால பிள்ளைகள் பாடம் கத்துக்க கொஞ்சம் தாமதமா வர்றாங்க.
ஆமா நீ நாலு பேருக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்து அப்படியே சம்பாரிச்சு கொட்டுறே பாரு. பிரயோஜனமா ஏதாவது சம்பாரிக்கிறே வழியைப் பாரு. என்ன சம்பாரிக்கிறே, அந்த நேரத்திலே சமையலைக் கத்துக்கோ… உங்கப்பாரு மூத்தா மகளுக்கு ஜமீன் மாப்பிள்ளைப் பாக்குறாராம். உனக்கும் அப்படியே பார்க்கலாம்.
அம்மா எல்லாத்தையும் பணத்தோடயே கணக்கு போடாதே. பெரியம்மா என்னைப் பெத்த பிள்ளை மாதிரி பார்த்துக்கிறாங்க. ஆனா நீ ஏன் அவங்களை வைரியா நினைக்கிறே? இப்போ உன்கிட்டே நின்னு பேச எனக்கு நேரம் இல்லை. நான் வர்றேன். இரட்டை ஜடைப் பின்னல் அசைய தெருவில் இறங்கி நடந்தாள் இளவயது ரத்னாவதி. பெயருக்கு ஏற்றாற்போல ரத்தினமேதான் உருவமும் குணமும்.
பளீரென்ற நெற்றியில் விபூதியின் வாசனையோடு திண்ணையில் அமர்ந்திருந்த ரத்னாவதியை உலுக்கியது, பொன்னியின் குரல். இவருக்கு இங்கன என்னவேலை! என்ன பட்டாலும் சிலரெல்லாம் திருந்த மாட்டாங்க. அந்த மாதிரிதான் இவரும். உள்ளே வாங்கம்மா, அந்தாளு கண்ணுலேயே நீங்க படவேண்டாம். அவர்களின் சம்பாஷனைகளைக் காதில் வாங்கிக்கொண்டு ஒரு முறைப்போடு அந்த வீட்டைக் கடந்தார் ராமலிங்கம். தற்போது விதவையாய் இருக்கும் ரத்னாவதியின் முன்னாள் கணவன்.
எதிரே அலைமோதிக் கொண்டிருந்த விளக்கைச் சரியாய்த் தூண்டிவிட்டு, எதிரே புகைப்படமாய் தொங்கிக்கொண்டிருந்த கனகலிங்கத்தின் முகத்தைப் பார்த்தாள். மெல்லிய கோடாய் ஒட்டிக்கொண்ட முகம். முகம் மட்டுமல்ல, குணமும் அப்படியே ?! பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் நிழலாடியது. அது அறுபத்தைந்துகளின் தொடக்கத்தில், இரட்டை ஜடையும் சரசரக்கும் பாவாடையுமாய் ஆற்றுப் பாலங்களிலும், மாங்காய் தோப்புகளிலும் அடிப்பாடித் திரிந்த காலங்கள் கண் முன் ஒடி வந்தன. தாவணிப் பருவமும், அலைபாயும் மனமும், அதை மூடி மறைக்கும் இலாவகமும். சட்டென்று பொங்கிய உணர்வுகளைத் தன் அன்னையைப் போல வெளிக்காட்டாமல் மூடி மறைக்கத் தெரிந்தவள் ரத்னாவதி. பள்ளிக்கூடத்தில் பார்த்ததில் இருந்தே அவள் விழி வாசல் வழியே புகுந்தது கனகலிங்கத்தின் உருவமும்.
மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் விழிகளாலேயே பேசிக் கொண்டார்களே ஒழிய, நேரில் இருவரும் பேசிக்கொண்டதே இல்லை, கண்ணுக்குள் நுழைந்து கண்ணாமூச்சு ஆடும் கனகு மனதிலும் ரத்னாவதி இருக்கத்தான் செய்தாள். இந்த உணர்வு காதலா, அன்பா என்பதைக் கணிக்க முடியாமல் போனாலும் இந்த அவஸ்தை மனதிற்கு வெகு இதமாகத்தான் இருந்தது. ரத்னாவதியின் தாய் மகளின் கல்யாணப் பேச்சை தந்தையிடம் பேசுவதைக் கேட்கும் வரையில் !
என்ன நான் பேசுறேன், பதிலே காணோம்.
இதோ பாரு பேச்சி, ரத்னாவிற்கு என்ன வயசாயிட்டு இப்போ ? இன்னும் குழந்தை தானே!
அதானே பார்த்தேன், என்ன சேதி தெரியாதுன்னு நினைச்சுப்புட்டீரா ? உங்க முதல் சம்சாரத்துப் பிள்ளைக்கு மட்டும் அப்படியென்ன வயசாயிட்டு ? இவளை விட மூணு வயசுதானே அதிகம். அவகபிள்ளைக்கு மட்டும் பள்ளிப் பட்டிக்கு போய் மாப்பிள்ளை பார்த்திட்டு வந்தீங்களே ! நானும் எம் பொண்ணும் என்னைக்குமே உங்களுக்கு மட்டம்தானே !
இரு, ஏன் இப்படிக் கத்துறே ? நான் என்ன உன்னை மட்டமா நினைச்சிட்டேன். உனக்கும் உன் பொண்ணுக்கும் எல்லாம் செய்யத்தானே செய்யறேன்.
சொல்லிக்காட்றீங்களே ?! இல்லை, சரி இப்போ நான் அலுத்துப் போயிட்டேன் இல்லை?!
இப்போ என்ன பண்ணச்சொல்றே ?
என் பொண்ணுக்கும் ஒரு ஜமீனைப் பார்த்துக் கல்யாணம் செய்யணும்.
சரி….சிவநேசன் கோபமாய் வெளியேறினார். இந்த இரண்டு பொண்டாட்டிக்காரங்களோட பிரச்சனையே இதுதான். மூத்தவ சாந்த சொரூபி, இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார் என்று அறிந்த பின்னும்கூட ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனியாகி இளையவளை முகஞ்சுழிக்காமல் வரவேற்றபோதும் மூத்தாளுடன் இணையப் பேச்சிற்கு சற்றும் மனமில்லை, நான் என்ன அவளுக்கு அத்தனை மட்டமா ? எனக்குத் தனி வீடு வேண்டும், அவளுக்குச் சமமாக எல்லாம் எனக்கும் வேணும். இங்கனயே இருந்து என்னை அவளுக்கு வேலைக்காரி ஆக்கப் போறீரோ. அதுதானே உங்க விருப்பம். இதுக்குத்தான் ஆளும் பேரையும் விட்டுட்டு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ என்று அழுது புலம்பிட, அதன்படியே தனி வீடு, தோட்டம், துரவு என்று இருந்தபோதும், பெரியவளுக்கு ஏதாவது வாங்கித் தந்து விட்டால் போதும். உடனே வயசான மனுசனைக் கட்டிக்கிட்டது எதுக்கு ? வாய்க்கு ருசியா ஆக்கித் திங்கறது மட்டும்தான் உன்னைக் கட்டிக் கிட்டதில் கிடைச்சது. அதுக்கும் கூட இன்னும் கொஞ்ச நாளாச்சின்னா வழியில்லாம போகும். வெறுமனே படுத்துக்க மட்டும்தான் நான் பொஞ்சாதி, மத்தபடி அவளை மட்டும் அம்மன் தேர் மாதிரி அலங்கரிச்சுப் போற வர்ற இடமெல்லாம் கூட்டிட்டுப் போறே என்று கதறிப் பஞ்சாயத்து வைப்பாள்.கணவனின் மன நிம்மதிக்காவே பெரியவள் ரமா சற்று ஒதுக்கிப் போவது வழக்கம். அதையே பேச்சி தனக்குத் சாதகமாய் எடுத்துக் கொண்டு எல்லாரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள்.
இருவருக்குமே இரண்டு பெண்கள் வயதுதான் சற்று முன்னேபின்னே. ரமாவின் பெண் தனலட்சுமிக்குத்தான் பள்ளிக்கரணை ஜமீனைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் சிவநேசன். அது பொறுக்காமல் பேச்சி அடித்துக்கொண்டாள். இயல்பிலேயே பொறாமைக் குணம் அதிகம் கொண்டதால் அந்த வரனைத் தன் மகளுக்குத் தட்டிப் பறிக்கும் எண்ணம் அவளுக்கு இருந்தது. நேரடியாய் இதைச் சொன்னால், நிச்சயம் சிவநேசன் ஒப்புக்கொள்ள மாட்டார். இருபத்திெரண்டு வருடங்களானபோதும் இன்று வரையில் மூத்தாளிடம் இருந்து அவரைப் பிரிக்க முடியவில்லை. எனக்கு நீயும் வேணும், அவளும் வேணும் என்று ஒரே போடாய்ப் போட்டு விட்டாரே! இதைக் கவனமாக கையாள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பள்ளிக்கரணை ஜமீனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் பேச்சி.
என்ன ஒரே சோகமாக இருக்கீங்க ? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா ?
வேண்டாம் ரமா, பசியில்லை. தனலட்சுமி எங்கே?
சின்னவ வந்திருக்கா.
யாரு ரத்னாவா ?
ஆமாம், இரண்டும் மதியத்தில் இருந்து ஒரே ஆட்டமும் பாட்டும்தான். அம்மான்னு என் காலையே சுத்திசுத்தி வர்றா. எனக்கு தனாவும், ரத்னாவும் எப்பவுமே ஒண்ணுதான். மாப்பிள்ளை வீட்டுலே ஏதாவது சொன்னாங்களா ?
இனிதான் போய்ப் பார்க்கணும். பேச்சி வீட்டுக்குப் போயிருந்தேன். ரத்னாவிற்கும் பிள்ளை பார்க்கச் சொல்றா ?
அவ இப்பத்தான் படிப்பையே முடிச்சிருக்கா ? சின்னப்பிள்ளைக்கு இப்பவே கல்யாணமா ?
அது அவளுக்குத் தெரியலையே ?! ராவடிதான் போ…. வேலையோட வேலையா இன்னொரு பிள்ளையைப் பார்த்து முடிச்சிடலாம்ன்னு இருக்கேன்.
உங்க இஷ்டம் …! நல்ல வரனாப் பாருங்க,,,, என்ற ரமா எழுந்திருக்க முயல….
ஏன் ரமா, என்மேல் உனக்குக் கோபமே வராதா? நீயிருக்கும்போதே நான் அவளைக் கட்டிக்கிட்டு ஒரு பொண்ணைப் பெத்துக்கிட்டு இன்றைய வரையில் என்னை நீ…..
என்கிட்டே இல்லாத ஏதோவொன்று உங்களுக்குப் பேச்சியிடம் பிடிச்சிருக்கலாம். இது உங்க விருப்பம். உங்க சந்தோஷம் பேச்சிதான்னா அதுக்கு நான் ஏன் தடையா இருக்கணும். புரோக்கர்கிட்டே சொல்லி அவளுக்கும் ஒரு வரன் பார்க்கச் சொல்லுங்க.
அம்மா ! இங்கே சிவநேசன் அய்யா வீடு எங்கே இருக்கு ? பெட்டிக்கடை ஒன்றில் விசாரித்துக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தோ அவங்க சம்சாரம் போறாங்களே?! அந்தப் பெட்டிக் கடைக்காரி பேச்சியை அழைத்து, அம்மா அய்யாவைக் கேட்கிறாங்க ! என்று சொன்னாள்.
பேச்சி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அழகோடு, கம்பீரமாய் பணக்காரக் களையாய் இருந்தான் அவன். யாருங்க நீங்க? எதுக்கு அவரைப் பார்க்கணும்.
நான் பள்ளிக்கரணை ஜமீன்! என்று அவள் சொன்னதும், அடடே மாப்பிள்ளையா ? வாங்க வாங்க, வீட்டுக்குப் போகலாம் ! என்று வரவேற்றாள் அவள்.
அது வந்து…. அவர்…
பண்ணைக்குப் போயிருப்பாரு, வந்திடுவாங்க. வந்தவங்க இப்படி வாசல்ல நிக்கலாமா ? வாங்க நம்ம வீடு பக்கத்திலேதான் இருக்கு, இரண்டு எட்டுதான் ! என்று அழைத்து மோர் தந்து உபசரித்தாள். அதேநேரம் ரத்னாவதி துள்ளிக் குதித்து வீட்டுக்குள் நுழைந்தவள் அந்நியனைப் பார்க்கவும் அப்படியே பின்வாங்கினாள்.
அவனின் பார்வை ரத்னாவின்மீது விழுவதைக் கண்டதும், பேச்சியின் மனதில் வேறொரு எண்ணம் தோன்றியது. தனலட்சுமி லட்சணம்தானே தவிர, நிறம் கொஞ்சம் மட்டம்தான். ஆனால் இந்தப் பெண்ணோ சுண்டியிழுக்கும் நிறம், அந்த வயதிற்குண்டான பருவம் வேறு கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்திருந்தது அவளுக்கு. என்ன மாப்பிள்ளை அப்படிப் பார்க்குறீங்க ? அவர் சொல்லலையா? இதுதான் பொண்ணு. பேரு ரத்னா. அவன் கண்கள் ரத்னாவை விழுங்கி விடுவதைப் போல் பார்த்தன. சிவநேசனுக்கு விவரம் தெரிந்து அவர் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தார். ரத்னா அதைப் பயன்படுத்திக்கொண்டு புது மனிதனிடம் இருந்து தப்பித்து உள்ளே ஓடினாள்.
அடடே ! வாங்க வாங்க. நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாமே ?! என்று சிவநேசன் சொல்லிவிடவும், ஏன் இங்கன வரக்கூடாதா? இதுவும் உங்க பொண்டாட்டி வீடுதானே ? என்ற பேச்சி சண்டைக்கு வர, வந்திருப்பவரின் முன்னால் பேச்சி ஏதாவது ஏடாகூடமாகப் பேசிடப் போகிறாள் என்று வாயடைக்க சிவநேசன் முயலும்போது, அவனே பேசினான். கடை வீதியிலே அத்தையைப் பார்த்தேன். அப்படியே பொண்ணையும் பார்த்தேன்! என்றான்.
அத்தை என்ற வார்த்தையைக் கேட்டதும் உச்சி குளிர்ந்து போனது பேச்சிக்கு….. ஆனால் சிவநேசனோ, இல்லை தம்பி, இது என் இரண்டாவது சம்சாரம். பெரியவ பொண்ணைப் பார்க்கத்தான்… அந்த வீடு மேலத்தெருவிலே இருக்கு… போகலாமா? என்று அவனைக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார். அவனோ ரத்னா சென்ற திசையையே பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு அவனைக் கிளப்பிக் கொண்டு போனார் சிவநேசன். அங்கேயும் ரமாதேவி மருமகளாய் வரப்போகிறவனை ஒரு குறையும் இல்லாமல்தான் உபசரித்துக் கவனித்தார். தனலட்சுமி வெளியே வந்து நமஸ்கரித்த போதும், அவனின் மனம் என்னவோ ரத்னாவைத்தான் நினைத்தது. மெல்ல தன் தாயின் காதைக் கடித்தான்.
டேய்.. அழகாடா வந்து நமக்குச் சோறு போடப் போறது. கெளரவம் முக்கியம் இல்லையா? பாரு….எங்கேயோ பஞ்சாயத்துக்குப் போகும்போது ஒட்டிக்கிட்டவளாம் அந்த இரண்டாவது பொண்டாட்டிக்காரி. அவளைப் போய்ச் சரிக்குச் சமமா நம்ம ஜமீனுக்கு எப்படிடா கூட்டி வர முடியும். அதிலும் அந்த ஊரிலே அவளைப் பற்றி யாருக்குமே நல்ல அபிப்ராயம் இல்லை, நான் சொல்றதைக் கேளு. கட்டிக்கிட்டா தனத்தைக் கட்டிக்க, இல்லேன்னா வேற இடத்திலே பொண்ணு பாக்குறேன்னு சொல்லிப்புட்டேன்னு அம்மா கறாராய்ச் சொல்லிவிட்டுப் போய்விட, ரத்னா மனதிற்குள் ஒருமுறை வந்து ரம்மியமாய்ச் சிரித்துவிட்டுச் சென்றாள். அவன் ஒரு முடிவோடு மறுநாள் பேச்சியைத் தேடிப் போனான்.
அத்தை….
வாங்க. வாங்க உட்காருங்க என்ன பொண்ணெல்லாம் பார்த்தாச்சா ? பிடிச்சிருக்குமே? ம்.. இந்த வீட்டுக்கு வரவேண்டியது எப்படியோ அங்கே போச்சு?
நான் சுத்தி வளைச்சுப் பேசலை அத்தை நேரடியா விஷயத்திற்கே வந்திடறேன் ரத்னாவைப் பார்த்தவுடனேயே எனக்குப் பிடிச்சிப் போச்சி. அதனால அவளையே கட்டிக்கலான்னு இருக்கேன்.
மனதிற்குள் குளுகுளுவென்று இருந்தாலும், தம்பி! நீங்க சொல்றது மட்டும், அவருக்கும் மூத்தாளுக்கும் தெரிஞ்சா என்னைக் கொன்னு புதைச்சிடுவாங்க. வேணாம் தம்பி, உங்களை மருமகனா அடைய எனக்குக் கொடுப்பினை இல்லை, இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க! என்றாள்.
இல்லை அத்தை சொன்னாத்தானே…. நான் யாருக்கும் தெரியாமல் ரத்னாவைக் கல்யாணம் செய்துக்கறேன். அப்பறம் ஊரில் சொல்லிடலாம். எங்கம்மாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. ஏன்னா இரண்டாம் தாரம் கெளரவக் குறைச்சல்ன்னு பேசிக்கிறாங்க. அதனால சொல்லிச் செய்யறதைவிட சொல்லாம செய்திட்டா ? தாலி கழுத்தில் ஏறின பிறவு யாரால என்ன பண்ணிட முடியும்?
சரிதான். இருந்தாலும், இந்த மனுஷனுக்கு இரண்டாம்தாராமா வாழ்க்கைப்பட்டதால எத்தனை கஷ்டம்! அதே பொழப்பு எம் பிள்ளைக்குமான்னுதான் யோசிக்கிறேன்?
அத்தே தனலட்சுமியில்லை, இன்னும் எத்தனை பொண்ணு என் கண்லே பட்டாலும் என் மனசுலே நிறைஞ்சு இருக்கிறது ரத்னாதான். கல்யாண வேலைகள் எல்லாம் நடக்கட்டும், அதே மேடையில நான் ரத்னா கழுத்தில் தாலி கட்றேன்! முடிவாய்ச் சொல்லிவிட்டு, நான் சொல்ற மாதிரி நீங்க நடந்தா போதும்! என்று திட்டத்தைக் கூறினான். தன் மூத்தாளை இதை விடவும் கொடூரமாய் பழி வாங்க முடியாது என்று சந்தோஷமாகத் தலையசைத்தாள் பேச்சி. நடக்கும் அத்தனை சதியும் தெரியாமல் கனகுவிடம் பார்வையோடு காதலைப் பகிர்ந்து கொண்டு வளர்த்து வந்தாள் ரத்னா. திருமண ஏற்பாடுகள் வெகு வேகமாய் நடந்து கொண்டு, இருந்தன. தனலட்சுமிக்கு நகைகள், புடவைகள் என்று எல்லாம் வாங்கிய போதும், ரத்னாவிற்கும் எடுத்துத் தந்திருந்தார் சிவநேசன்.
திருமண வேலைகளில் எல்லாம் பேச்சி காட்டிய ஈடுபாட்டில் சிவநேசனே கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனார். பரவாயில்லையே, தன் உறவாகவே தனலட்சுமியையும் நினைக்கத் தொடங்கிவிட்டாளே என்று சந்தோஷமாகவே கல்யாண வேலைகளைக் கவனித்தார். அக்காவின் கல்யாணம், புதுப்புடவையும் நகையும் என அழகாய் அம்சமாய் வளைய வந்தாள் ரத்னா. கனகுவின் கண்களுக்கு மட்டுமல்ல, ஜமீன் மாப்பிள்ளையின் கண்களுக்கும் ரத்னா விருந்தானாள் அவளறியாமலேயே?!
பேச்சி சமயம் பார்த்து தன் திட்டத்தை மகளிடம் பேச ஆரம்பித்தாள். தாயின் கொடுமையான திட்டத்தைக் கண்டு மிகவும் திகைப்பாகவும் பயமாகவும் இருந்தது. ஆத்தா நீ பேசறது ரொம்பவும் தப்பு. எப்பவும் முறையில்லாத விஷயத்தைப் பற்றித்தான் பேசுவியா? உம் புத்தி ஏன் இப்படி போகுதும்மா. நான் சொல்றதை தயவுசெய்து கேளு. அப்பாவுக்கு எனக்கு என்ன செய்யணுமின்னு தெரியும். நீதான் அவங்களைப் பிரிச்சி பாக்குறே? ஆனா அந்த வீடு என்னைக் கொண்டாடுதும்மா.
அவ சுபாவமே அப்படித்தானேடி, அப்பாவி மாதிரியிருந்தே எல்லாத்தையும் சாதிச்சிடுவா, இதோ பாருடி, இப்படிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் உண்டு. இல்லேன்னா யாரோ ஒரு அன்னாடங்காச்சிக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க.
பரவாயில்லை! அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம் ஆத்தா.
போனாப்போகுதுன்னு சொன்னா சும்மா சும்மா எதிர்த்துப் பேசிக்கிட்டே போறீயே! எதை எப்படிச் செய்யணுமின்னு எனக்குத்தெரியும் என்னைமாதிரி பணமில்லாம இரண்டாந்தாரமா வாழ்க்கைப்படறதால எத்தனை சிக்கல்கள் அவமானங்களையும் நீ சந்திக்க வேண்டும் தெரியுமா? நான் எல்லாத்தையும் முழுமையாய அனுபவிச்சி இருக்கேன்டி, என்னதான் சண்டை சத்தம் போட்டுப் பணம் பகட்டுன்னு வாழ்க்கை நடத்தினாலும், இரண்டாம் தாரம் என்று நான் எத்தனை அவமானப்பட்டு இருக்கேன் தெரியுமா? அந்த மாதிரி நீ இருக்கக்கூடாது. நான் சொல்றதைச் செய் இல்லைன்னா உங்காத்தாளை நீ பொணமாத்தான் பார்க்க வேண்டியிருக்கும். கோபமாய் பேசிவிட்டு தாய் அகன்று விட, இரண்டு நாளில் கல்யாணம், அம்மாவின் இந்த விபரீத ஆசை மனதைப் பிசைந்தது. நைச்சியமாகவே சொல்லிப்பார்த்தாள்.
அக்காவுக்குப் பார்த்திட்டு என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்றாரு அந்த ஜமீன். நாளைக்கு என்னைக்காட்டிலும் வேற பொண்ணைப் பார்த்தா என்னை அம்போன்னு விட்டுடுவாரு இல்லையாம்மா என்று கெஞ்சிப்பார்த்தாள். அதெல்லாம் நான் விவரமாக கேட்டாச்சு என்று அதற்கும் முட்டுக்கட்டை போட… சரிம்மா, அப்படியே அக்காவோட இடத்தில் நான் தாலி வாங்கிட்டாலும் அதற்குப்பிறகு அப்பா உன்னை ஏத்துக்குவாரா? உன் நிலைமையை யோசிச்சிப் பார்த்தியா?
ஆமா, அந்த வயசான ஆளைக் கட்டிக்கிட்டு என்ன சுகமெனக்கு, அதெல்லாம் எல்லாத்துக்கும் மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணிட்டாரு. நீ தொணதொணக்காம வாயை மூடிட்டு நான் உட்காரச் சொல்ற எடத்திலே உட்காரு. சொல்லிட்டேன் என்று தீர்மானமாகப் பேசிய தாயிடம் மெளனியாவதைத் தவிர வேறு வழியில்லை ரத்னாவிற்கு!
எத்தனை இன்பமாய் இருக்கிறது பெரியம்மாவின் குடும்பம்! அந்தக் கல்யாணம் நின்று போய் அதே மாப்பிள்ளையை நான் மணந்து கொண்டால், அப்பாவுக்கு எத்தனை அசிங்கம். அதைக் காட்டிலும் அம்மாவைப் போல என் பொண்ணுக்கே சக்களத்தியாய் வந்திட்டாளேன்னு பெரியம்மா நினைக்கமாட்டாங்களா ? இவை அனைத்தையும் விட ரத்னாவின் மனம் தாயின் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாத காரணம் கனகலிங்கம் அல்லவா? அவனை மறந்து இன்னொருவருடன் வாழ்வதா?! ஒரு முடிவுக்கு வந்தவளாய்க் கனகுவைத் தேடிச் சென்றாள் ரத்னா.
ஆற்றுப் பாலத்தின் மீது அமர்ந்திருந்த கனகுவிடம் கனகு, நான் உங்ககிட்டே பேசணும். நிலைமை கைமீறிப் போச்சு. இனிமேலும் நாம அமைதியாய் இருந்தா அது நல்லாயிருக்காது. நான் உங்ககிட்டே அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை?
ஆமா புள்ளே…. உன்கிட்டே என் மனசை எப்பவோ சொல்லணுமின்னு நினைச்சேன். ஆனா மனசு பயத்திலேயே விலகி நின்னுடுச்சி. நான் உன்னக் கடைசி வரை கண்கலங்காமப் பார்த்துப்பேன் புள்ளே. நீயென்ன சொல்றே?
இப்போ நம்ம அன்பைச் சொல்லியாக வேண்டிய அவசரத்திலே இருக்கேன். நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னாள். இப்போ சொல்லுங்க, நான் என்ன செய்யட்டும், அக்காவுக்கும் பெரியம்மாவிற்கும் துரோகம் பண்ணிட எனக்கு மனசு இல்லை. ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்திலே உங்களைத் தேடி வந்திட்டேன். இப்போ நீங்களும் கைவிட்டுட்டா உசிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை.
அழாதே ரத்னா, நான் உன்மேல வைச்சிருக்கிற அன்பை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. அதே அளவு காதல் உனக்கு இருந்தா நான் சொல்றதைக் கேட்பியா?
ம்…..ம்…..
கல்யாணம் பண்ற அதே நாள்ல பக்கத்தூர் கோவில்ல நாம இரண்டு பேரும் கலியாணம் செய்துப்போம். உன்னைக் கண்கலங்காம வச்சி நான் பார்த்துப்பேன். என்மேல உனக்கு நம்பிக்கையிருந்தா…..
எனக்கு அந்த நம்பிக்கை இருக்குங்க. நான் வர்றேன்.
சரி என்று தலையசைத்தான்.
சொன்னாற்போலவே அன்று காலையில் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு வந்தபோது இங்கே பள்ளிக்கரணை ஜமீனுக்கும் தனலட்சுமிக்கும் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது, ஜமீன் ராமலிங்கத்தின் கண்களில் சொல்லவொண்ணா வெறி தாண்டவமாடியது. பேச்சியின் நிலைமையோ அதைவிடவும் மோசம். திருமணம் முடிந்து சில நிமிடங்களிலேயே ரத்னாவும் கனகுவும் மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதைக் கண்டதும், மண்டபமே அதிர்ந்தது. ஜனங்கள் சகட்டு மேனிக்குப் பேசினார்கள். தாயைப் போலவே பிள்ளை என்றார்கள்
ஊர்லே எத்தனை பேரை லந்து பேசினா, அதான் இப்போ அனுபவிக்கிறா? அந்த ரமாவுக்கு எத்தனை நல்ல மனசு. அவளை உண்டு இல்லைன்னு ஆக்குனாளே, இவளுக்கு இந்த மூக்கறுப்பு தேவைதான். இப்படி ஆயிரத்தெட்டு வசவுகள். பேச்சி அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தாள்.
தந்தையோ எதையும் பேசும் மனநிலையிலேயே இல்லை. மகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நம்பிக்கையைக் கெடுத்துவிட்டவள் என்ற கோபம். மூர்ச்சையடைந்து விட்ட பேச்சியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். வேறு வழியின்றி நின்றிருந்தவர்களை ஆதரிப்பது போல தனலட்சுமி, நீ போய் உன் தங்கச்சியையும் அவ வீட்டுக்காரரையும் நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு.
தனலட்சுமி கணவனைக் கடவுளாகவே பார்த்தாள். ரத்னாவை அந்தளவிற்கு அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் எல்லா நிலைமையும் அடுத்து வந்த நாட்களில் மாறிப்போனது. ராமலிங்கம் தன் சுயரூபத்தைக் காட்டிட ஆரம்பித்தான். கனகுவைத் தனியே அடைத்து வைத்து ரத்னாவைத் தன் ஆசைக்கு இணங்கிடச் சொன்னான். தனலட்சுமி, பெத்தவனே விட்டதற்கப்பறம் நான் ஏன் உன் தங்கையைக் கூட்டி வந்தேன் தெரியுமா? எனக்கு உன்னை விடவும் அவளைத்தான் பிடித்திருந்தது. இப்போ உண்மையைச் சொல்றேன். ரத்னா அன்னைக்கு இங்கே இருந்திருந்தா என் பக்கத்திலே தாலி வாங்கிக்க வேண்டியது அவதான். இதெல்லாம் நானும் உங்க சின்னம்மாவும் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டம் ஆனா, அந்த கனகுப்பையன் எல்லாத்தையும் கெடுத்திட்டான். ஆனா நான் விடப்போவதில்லை. நான் நினைச்சதை அடையாம விட்டதில்லை.
நீங்க….
என்ன யோசிக்கிறே, ஊரறிய உனக்குத் தாலி கட்டிட்டேன். நீதான் என் பொண்டாட்டி. அந்த அந்தஸ்து உனக்குதான். ஆனா ரத்னாவை விட முடியாது. அவளை விடவும் மாட்டேன். கனகுவை நான் பார்த்துக்கறேன், எனக்கு ஒத்து வந்தா நீ இங்கேயிருக்காலாம். இல்லைன்னா எனக்கு யாரு மேலயும் பயம் கிடையாது புரிஞ்சிக்கோ. நீ ஒத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. உனக்கும் கனகுவுக்கும் தப்பான உறவு இருந்தது, அதனால நான் அவனை …..
என்னங்க….இது தப்புங்க?!
எது தப்பு சரின்னு சொல்ற அளவுக்கு உனக்கு நான் உரிமை தரலை. வெறும் பொண்டாட்டிங்கிற பட்டம் மட்டும்தான். என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நீ இருந்தா இங்கே இருக்கலாம். எல்லாரையும் விட ரத்னாவின் நிலைதான் ரொம்பவும் மோசம்.
பெற்ற தாய் செய்ய நினைத்த தவறை தந்தையிடம் சொல்லவும் முடியவில்லை, தாலி கட்டிய கணவனும் கண்ணில் படவில்லை. ராமலிங்கத்தின் முகமும் அதன் வக்கிரமும் அவளை நிமிடத்திற்கு ஒரு முறை பயமுறுத்திக் கொண்டே இருந்தது. இப்படித் தனித்தீவாய் மாற்றிக்கொண்டேமோ என்று அரற்றினாலும் தப்பிக்கத்தான் வழி தெரியவில்லை. அதுவும் தங்கையிடம் தன் கணவனைப் பற்றி சொல்லியதும் உறைந்து போய் நின்றிருந்தாள் ரத்னா.
அக்கா…..எனக்குப் பயமாயிருக்கு
என்னாலே எதுவும் முடியலை ரத்னா. சீக்கிரம் நான் செத்துப் போயிடலாம் போல இருக்கு. நீ கிடைக்கணுமின்னு அவரு என்னை சித்ரவதை பண்றார். உடம்பு முழுக்க சூடு வைச்சிருக்கார். உன் கணவர் கனகு வேலை விஷயமா ஊருக்கெல்லாம் போகலை. இவர்தான் எங்கேயோ அடைச்சு வைச்சிருக்கார்.
என்னக்கா சொல்றே?
ம்… அவருக்கு உம்மேல ரொம்பவும் ஆசை அதுக்கு அதைத் தீர்த்துக்கொள்ள நானும்….உன் கணவரும் அதுக்குப் பலி… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. தனலட்சுமி பதறி அழுதாள்.
தன் தாய் இவளின் குடும்பத்திற்கு இரண்டாம்தாரமென வந்து எத்தனையோ இன்னல்களைத் தந்ததற்கு இப்போது தண்டனையை நான் அனுபவித்து இருக்கிறேனோ? தன் ஆசையில் வெறியில் ஆடிய ஆட்டம் இன்று அவள் மகள் அனுபவிக்கிறேன் என்று உணராமலேயே ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கிறாளே ?! தன்னை நேசித்த ஒரே பாவத்திற்காகக் கணவன் படும் அவஸ்தைதான் அவள் மனதைக் கத்தி கொண்டு கிழித்தன. வெளிஉலகமே தெரியாத அக்கா அரக்கனான ராமலிங்கத்திடம் படும் வேதனை மனதைப் பிசைந்தது. ஒரு வழியாய் அவனின் பேரத்திற்கு ஒப்புக்கொண்டாள்.
பாம்பு இத்தனை நாள் ஏணியில் ஏறி சேர வேண்டிய இடத்திற்கே வந்து விட்டது. நேராய் ரத்னாவிடமே வந்து நின்றான் ராமலிங்கம். நீ என் மனைவியாக வேண்டும். உன்னைப் பார்த்த உடனேயே நான் மயங்கிப் போய்விட்டேன் ரத்னா, எனக்கு உங்கக்கா வேண்டாம். இப்போ சொல்லு, எல்லாரையும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திடறேன். ஆனா உன்னை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் புரிஞ்சிக்கோ. கனகு இப்பவே பாதி உயிர் போயி கிடக்கான். தனலட்சுமியோட வாழ்க்கை அந்தரத்திலே நிக்குது. இதுகெல்லாம் காரணம் நீ. நான் உன்மேல வைச்சிருக்கிறே ஆசை. கனகு உயிரோட இருக்கிறதும் சாகறதும் உன் கையிலேதான் இருக்கு. இரண்டு நாள்ல வர்றேன். உன் முடிவில் கனகு உயிரோட இருப்பான். உன் அக்கா வாழுவா. மிரட்டி விட்டு வெளியேறினான் கவனமாகப் பூட்டிவிட்டு.
பெற்ற தாய் போல அன்பு காட்டி தன் நலனில் உண்மையான அக்கறை கொண்டு இருந்த பெரியம்மா, அம்மா செய்த துரோகத்தையும் மறந்து தன்னையும் சகோதரியாய் ஏற்றுக்கொண்ட அக்கா, வாழ்வில் தான் அடைந்த ஒரே ஆசை, கைக்கு எட்டி இப்போது இதே வீட்டில் ஒரு மூலையில் வதைபடும் அவளின் கணவன். என் ஒருத்தியின் வீம்பிற்கு எல்லாரையும் இழக்க வேண்டுமா? இரவு நீண்டு கொண்டே இருந்தது. விடியலில் ஒரு முடிவுக்கு வந்தவளாய், குளித்து புதுப்புடவை உடுத்திக்கொண்டு கீழிறங்கினாள் ரத்னா. அதற்குள் பெரியம்மா, சித்தி , அப்பா, அம்மா எல்லாரும் ஒன்றாய்….அக்கா அழுதுகொண்டு நின்றிருந்தாள். ராமலிங்கம் விறைப்பாய்.
நான் செய்த தப்பு வினை எப்பிள்ளை மேல வந்து விடிஞ்சிடுச்சே?! எப்படியிருந்தவ பாவி இப்படி சிதைச்சிப் போயிட்டியே! எவனையோ கட்டிக்கிட்டியே. அவன் எங்கே இப்படி கூடப்பிறந்தவ வாழ்க்கைக்கு வினையா உன் அழகு போயிடுச்சே. எல்லாம் என்னாலதான். சக்களத்தியா இருந்தாலும் பெத்த பிள்ளையா உடம்பு போன நாட்களில் கவனிச்சிட்டாளே என் மூத்தாள். அவளுக்குத் துரோகம் நினைச்சேனே…. அதுக்குத்தான் உனக்கு இந்த தண்டனையா? இந்தாளு ஏதேதோ சொல்றானே? நீ தாலி கட்டிக்கிட்டவனை விட்டுட்டு இவனோட வாழப் போறதா சொல்றானே. அம்மாவிடம் இருந்து வந்த கனிவான பேச்சு. அன்பைக் கூட அதட்டலாகச் சொல்லும் அவள் இன்று குறுகிப் போகிறாள்.
எம்மக வாழலைன்னாலும் பரவாயில்லை, நீ இப்படி ஒரு வக்கிரத்திற்கு உடன்படாதே தாயி. பெரியம்மா நான் எத்தனையோ போராடிப் பார்த்திட்டேன். எனக்காக எல்லாரும் அவஸ்தைப் படறதை விடவும் நானே என் மேல சிலுவையை ஏத்திக்கிறேன். செத்துடலான்னு கூட யோசிச்சேன். ஆனா அப்பவும் அந்த முரடன் அக்காவைத் துன்புறத்துவான். காலம் கடந்து போச்சு. இனி பயன் இல்லை. எஞ்சிய என் உறவுகளைக் காக்க நான் பலியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இப்போ நீ சந்தோஷமா இரும்மா. உன் மக உன்னை மாதிரி தாலிகட்டி இரண்டாந்தாரமாகலை. சோரம் போற புருஷனை அவன் கட்டின தாலியை சுமந்துகிட்டு அவன் கூட வாழப்போறேன். ஆசை பேராசை. அதன் விளைவுதான் என் நிலைமை. அவள் ராமலிங்கத்திடம் சென்றாள் அத்துடன் முடிந்துவிட்டது என்பதைப் போல! நான் உன்கிட்டே கேக்குறது, தயவுசெய்து கனகுவை விட்டுடு.
அவன் எனக்கு வேண்டாம். நீ போதும் ரத்னா. இது என் வாழ்க்கை. யாரும் தலையிடக் கூடாது. உங்க பொண்ணுக்கு இங்கே எந்தக் குறையும் இருக்காது. எனக்கும் ரத்னாவின் வாழ்க்கைக்கும் நடுவில் யாரும் வராதவரையில்……. இனி பேச ஏதும் இல்லையென்று தங்கு தடையின்று கடந்து போனான்.
நிமிடங்கள் நாட்கள் வருடங்கள். கடந்தன. ரத்னாவிற்குப் பிள்ளைகள் இல்லை. சகோதரியின் பிள்ளைகளையே தன் பிள்ளைகளாய் வளர்த்தாள். இரண்டு பெண்களுக்கும் திருமணம் நடத்தினாள். உணர்வு மரத்து மரக்கட்டையாய் வாழும் அவள் நிமிடங்களை யாரும் கேட்காமலேயே சூறையாடிக் கொண்டிருந்தான் ராமலிங்கம். ஊரே தீபாவளி கொண்டாடிக் கொண்டு இருக்க கனகு இறந்திட்ட செய்தி வந்தது.
ராமலிங்கம் புதுத்துணியைக் கொண்டு வந்து வாசலில் பரப்பினான். ரத்னா இங்கே வா. பொண்ணு மாப்பிள்ளையெல்லாம் வர்றாங்க உனக்கும் …. அவர் பேச்சு காற்றில் கரைந்து போக. அதைக் கேட்ட ரத்னாவோ விதவைக் கோலத்தில். மயானத்தில் அநாதையான கனகுவுக்குத் தன் கரங்களால் கொள்ளி போட்டு விட்டு கனகுவின் மனைவியாய் தாலியை அறுத்து என்ன இது கோலம்.
இதுதான் உண்மையான கோலம் ராமலிங்கம். உன் உடலுக்கு கொடுத்த விலைக்குக் காரணம் என் கணவன் உயிரோட வாழனுன்னுதான். அவரே போனபிறகு எனக்கென்னயிருக்கு? இனிமே என்னைக் கொல்லணுமின்னாலும் கொன்னுடு. அவர் கூடவே போயிடறேன்.
ஏய் மானங்கெட்ட சிறுக்கி! என்ன திமிரு இருந்தா அவன் செத்ததுக்கு தாலியறுத்திருப்பே?
செத்தது எனக்குத் தாலி கட்டிய புருஷன் உன்னை மாதிரி மிருகம் இல்லை. அடுத்தவன் பெண்டாட்டியை அடைய நீ என்னவெல்லாம் கொடுமைகள் செய்தே! ஆனால் ஒரு நாள் கூட வாழாத மனுஷன் எனக்காவே வாழ்ந்த அவருக்கு நான் செய்த பரிகாரம். என் அக்கா பிள்ளைகளை நல்ல இடத்தில் கட்டிகொடுத்திட்டேன். இனிமேயென்ன இருக்கு அவளும் போயிட்டா. இளமையில் தனிமையை விடவும் முதுமையில தனிமை கொடுமை. அதை நீ அனுபவிக்க வேண்டாம். உன் கூட பொண்டாட்டியா படுத்தவ அடுத்தவனுக்கு தாலியறுத்தான்னு ஊரே சொல்லும். அப்போ உன் உடம்பு கூசும் பாரு அது..அதுதான் எனக்கு வேண்டும். இப்போ மட்டுமில்லைடா, எப்பவுமே நான் கனகுவின் மனைவிதான். இதை சொல்லிட்டுப் போகத்தான் காத்திருந்தாள்.
அன்று வெளியேறியவள் இன்று கனகுவீட்டில் தன் மனகவர்ந்தவனின் சுவாசத்தில் எஞ்சிய தன் நாட்களைக் கடத்திக் கொள்ள, ராமலிங்கம் தலைகுனிந்தபடியே மீண்டும் அந்த வீட்டைக் கடந்து சென்றார். இவனும் நரகாசுரனே. பரமாத்மாவைப் போல அவனையும், அவனின் ஆட்டத்தையும் ரத்னா உயிரோடு எரித்திருக்கிறாளே. அவளைப் பொறுத்த வரையில் ராமலிங்கத்திடம் இருந்த பிரிந்த நாள் முதல் தினமும் தீபாவளிதான், எஙகோ வெடிக்கும் வேட்டுச் சத்தம் ரத்னாவிற்கு இரைச்சலைத் தருவதற்குப் பதில் நிம்மதியைத் தந்தது?

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!