day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மணமுறிவு வாழ்க்கையை முடித்து விடாது

மணமுறிவு வாழ்க்கையை முடித்து விடாது

ஒவ்வொரு விவாகரத்திற்குப் பின்பும் ரணமாக்கப் படுவது மனம்தான். உறவு கொடுக்கும் இன்பம் அலாதி யானது. அதற்கு இணையாக உறவின் பிரிவு தரும் வேதனை கொடுமையானது. மீண்டும் அர்ச்சனாவை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். திருமணம் முடித்த சில மாதங்களிலேயே அவள் என்னை மறந்திருந் தாள். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச விரும்புவேன். ஆனால், தொலைபேசியை எடுத்த மாத்திரத்திலேயே சொல்வாள். ஏய் நான் கொஞ்சம் பிசியா இருக்கேண்டி. அப்புறம் பேசட்டுமா? எனக்கேட்பாள். நானும் சரி என்பேன். ஆனால் திரும்ப அவளிடமிருந்து ஒருபோதும் அழைப்பு வந்ததில்லை. காலை 5 மணிக்கு கண் விழித்ததிலிருந்து இரவு தூங்கும் வரை உழைத்தாள். காலை உணவு, மதிய உணவைத் தயார் செய்து விட்டு, குழந்தையையும் தான் வேலை செய்யும் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு செல்வது, பின் மாலை சமையல், கணவரைக் கவனிப்பது என ஒட்டுமொத்தமாக உலகத்தை மறந்து ‘குடும்பம்’ என்ற வலைக்குள் மாட்டிக்கொண்டாள். இப்படித்தான் திருமணமானவுடன் பல பெண்கள் தம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கின்றனர்.
தமது ஒட்டுமொத்த வாழ்வும் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார், நாத்தனார் என்ற ஒற்றை சிந்தனையில் தமது வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிக்கின்றனர். இந்த வாழ்க்கை அமைப்பில் அவளது கணவனிடமும் அவர் குடும்பத்திடமும் பொிய மாற்றங்கள் மாறுவதில்லை. கணவன் தமது பணிகளையும், தமது நண்பர்களையும், குடும்பத்தையும் எப்போதும்போல் கவனித்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் பழமொழி பலரது வாழ்வில் மெய்யாகித்தான் போகிறது. ஒரு சில வருடங்களிலேயே கணவனது கவனம் மனைவியிடம் குறைவதும், மனைவியின் கவனம் கணவரிடம் குறைவதும் இயல்பாகிப்போகிறது. குழந்தை பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்தவுடன்தான் பல பெண்கள் தாம் யார் என்பதையும், தமது விருப்பு, வெறுப்புகள் எது என்பதையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.
திருமணம் ஆனவுடன் ஒட்டுமொத்தமாக தமது நண்பர்கள், ஆசை, விருப்பம், தேர்வு என அனைத்தையும் மறந்து விடுவது தான் பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு. பின்னாளில் அதை உணர ஆரம்பிக்கும்போது, ஒரு புதிய பெண்ணை, மனைவியைக் காணும் அக்கணவனால் அவளைப் புரிந்துகொள்ள இயலாமல் அவனையும் மீறி அவள்மீது கோபமும், வெறுப்பும் கொள்கிறான். புதிய குடும்பத்தில் காலடி வைத்தவள் சற்றே பயத்துடனும், பொறுமையுடனும், தமது குடும்ப வாழ்க்கையைத் துவங்கியவள் சில வருட பழக்கத்திற்குப் பின் துணிவு கொள்ள ஆரம்பிக்கிறாள். சிறிதோ, பொிதோ குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயல்கிறேன் என்ற பெயாில் சண்டை போடுவதில் மட்டுமே தனது பலத்தைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறாள். சண்டை போடும் நாட்களில் அவளது மனதும், உடலும் கணவனிடம் இருந்து தூரப்படுத்துகிறது. சிறிய, சிறிய சண்டை தாம்பத்திய உறவில் சிக்கலை ஏற்படுத்தும்போது மிகப்பொிய விரிசலை தம்பதிக்குள் உருவாக்கி விடுகிறது. தாம்பத்திய உறவில் தனிமைப்படுத்தும்போது ஆண் எளிதாகத் தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடனோ அல்லது பயணத்தில் பார்க்கும் பெண்ணுடனோ உடல் தேவையை சரி செய்ய முயலுகிறான். இதை எப்படியோ அறியும் மனைவி முழுமையாகக் கணவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இப்படித்தான் பல குடும்பங்களில் விவாகரத்துக் கான காரணம் பிறக்கிறது.
இது ஒருபுறம் இருக்க எனக்கு நன்கு அறிமுகமான இன்னொரு தம்பதியின் வாழ்க்கை எப்படித் தடம்புரண்டது என்பது பற்றியும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். தம்பதிக்குள் அப்படி ஒரு ஒற்றுமை. ஒருவரையொருவர் வெகுவாக நேசித்தனர். ஆனால் ஒரே ஒரு குறை, அந்த ஆணிடம் இருந்தது. அது மிகப்பொிய அத்தியாவசியக் குறைபாடாக மாறியது. நிறைய ஆண்களுக்கு இருக்கும் குறைதான். சரியாக வேலைக்குச் செல்லாத கணவன் அவன். ஈகோவால் வேலை செய்யும் எந்த இடத்திலும் தொடர்ந்து இருக்க முடியாத நிலை. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என அவள் கெஞ்சுவாள். ஆனால் திடீரென வேலையை ராஜினாமா செய்துவிட்டேன் எனச்சொல்லி வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு நேரத்தைக் கழிப்பான். அவள் கடின உழைப்பாளி. பல கிலோ மீட்டர் பயணப்பட்டு வேலை பார்த்து அலுத்து, களைத்து வீடு வருவாள். அவனது சோம்பேறித்தனம் அவளுக்கு மிகுந்த மன உளைச்சலைத்தந்தது. படிப்படியாக அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பும், அன்பும் குறைய ஆரம்பித்தது. பொருளாதாரம் குடும்பத்தை நகர்த்த தேவை, வாழ்க்கைக்குத் தேவை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்போனது அக்குடும்பம் பிரிவை சந்திக்கக் காரணமாக இருந்தது. பிரிவு ஏற்பட்டதால் வாழத் தகுதியற்றவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதலாமா?
தொடர்ச்சியாக இந்தப் பகுதியைப் படித்து வாருங்கள். புதிய வாழ்க்கை உங்களை வரவேற்கும் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் சந்திக்கிறேன்.

– ஜெமிலா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!