day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களின் வாழ்க்கையைப் பெண்கள்தான் சொல்ல வேண்டும். – தமயந்தி.

பெண்களின் வாழ்க்கையைப் பெண்கள்தான் சொல்ல வேண்டும். – தமயந்தி.

 

திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பண்பலை அறிவிப்பாளர் என்று  பன்முகம் கொண்டவர் தமயந்தி. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், பெண்ணிய எழுத்துக்காகப் பெரிதும் கொண்டாடப்படுகிறவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திரைப்படத் துறையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் இவரது முதல் படம் அரங்கேறியது. தற்போது ‘காயல்’ திரைப்பட வேலைகளில் பிஸியாக இருந்தவர், ‘பெண்களின் குரல்’ வாசகிகளுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கினார். அவருடன் உரையாடியதில் இருந்து…

கேள்வி: கவிதை, கதை எழுதுவதற்கு யார் உங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தார்கள்?

பதில்: என்னுடைய குழந்தைப் பருவ தனிமைதான் காரணம். நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு ஆங்கில கவிதை எழுதினேன். அதை எனது அப்பா ஒரு ஃபைலில் போட்டு வைத்திருந்தது அவருடைய இறப்புக்குப் பிறகுதான் தெரியவந்தது. நான் நினைப்பதைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளம் எது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

கேள்வி: கதைகளுக்கான களத்தை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சிலர் தனக்கு நிகழ்ந்தவற்றை  எழுதுவார்கள். ஒருசிலர் பார்ப்பதை எழுதுகிறார்கள் அல்லது கற்பனையில் எழுதுவார்கள். நீங்கள் எப்படி?

பதில்: நான் எல்லாவற்றையும் கலந்துதான் எழுதுகிறேன். பெண்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான துன்பங்கள்தான் நிகழ்கின்றன. முகங்களும் பெயர்களும்தான் வேறு. ஆனால், துன்பங்கள் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிகழ்கின்றன.

கேள்வி: கவிதை எழுதுவது கடினமா, கதை எழுதுவது கடினமா? எது சவாலானது?

பதில்: எழுதுவது என்பது ரொம்ப முக்கியமான விஷயம். எதை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொருத்தரும் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து எழுதுகிறார்கள். வடிவம்தான் முக்கியம். உதாரணத்துக்கு ஒருவருக்கு சுடிதார் பிடிக்கும், மற்றொருவருக்கு சேலை கட்ட பிடிக்கும். அதுபோல்தான் இதுவும்.

 கேள்வி: உங்கள் மனதுக்குப் பட்டதை எழுதுகிறீர்கள். அது மற்றவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக மாற்றி எழுதும்போது அது கடினமானதாக இருக்கிறதா?

பதில்: நான் எனக்காக மட்டும்தான் எழுதுகிறேன். என்னுடைய மவுனங்களின் மொழி பெயர்ப்புதான் என்னுடைய எழுத்துக்கள் என்று நான் பல இடங்களில்சொல்லியிருக்கிறேன். அதை ஒரு வாசகரோடு பகிர்ந்துகொள்ளும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். எழுதி முடிக்கிறபோது ஒரு பாரம் மனதில் இருந்து, உடலில் இருந்து, வாழ்வில் இருந்து, உலகத்தில் இருந்து விடைபெறுவதைப் போன்ற ஒரு எண்ணம் தோன்றும். ஒவ்வொருமுறையும் இதை நான் உணர்கிறேன். அது எதுவாக இருந்தாலும் சரிதான்.

 கேள்வி: நீங்கள் எஃப்.எம். இல் பணிபுரிந்த அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில்: எனக்கு ரொம்பவும் பிடித்த பணி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். எப்பவும் இசையுடன் இருக்கக்கூடிய ஒரு பணியை யார்தான் வெறுப்பார்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் நான் பணி செய்யவில்லை. நெல்லை போன்ற சிறு நகரத்தில்தான் பணியாற்றினேன். சுற்றிலும் கிராமங்களையும், சிறு சிறு ஊர்களையும் கொண்ட நகரம்தான் திருநெல்வேலி. அந்த நகர மக்கள் அவ்வளவு பேரன்பு கொண்டிருப் பார்கள். ஓர் ஒற்றைக்குரல் மூல மாகச் சிறகு முளைத்து, அவர்கள் வீட்டுக்குள்போய், அவர்களின் மனதுக்குள் போய் உட்கார்ந்தது என்பது எப்படிச் சாத்தியமானது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அந்தப் பணியை விட்டு  கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாகின்றது. இன்றைக்கும் நான் நெல்லைக்குச் சென்றால், நீங்கள் தமயந்திதானே என்று சரியாக அடையாளம் கண்டுவிடுகிறார்கள். வானொலியில் பணியாற்றவில்லையா என்று கேட்கிறார்கள். அந்த அன்பு என்பது அப்பட்டமானது, கஷ்டமானது. என்மேல் அன்பு வைக்க வேண்டிய காரணமே இல்லை. இது சினிமாத்தனமான அன்பும் கிடையாது. கழுத்துக்குக் கீழே உடல் உறுப்புகள் செயல்படாத ஒருவர் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டில் தீபாவளி செலவுக்குக் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு கார் பிடித்து வந்து என்னைப் பார்த்தார்.  அப்போது அவர் சொன்ன வார்த்தை, “ என் வாழ்க்கையில் நான் சிரிக்க ஆரம்பித்ததே உங்களுடைய நிகழ்ச்சியைக் கேட்ட பின்புதான்” என்றார். அப்பொழுதுதான் எனக்குப் பொறுப்புணர்வு வந்தது. எங்கேயோ இருக்கிற ஒருவரை நாம் சிரிக்க வைக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஒரு வருக்கு மகிழ்ச்சியைப் பரிசளிப்பதைவிடச் சிறந்த பரிசு எதுவும் இல்லை. அதனால், எனக்கு எவ்வளவு சோகமான சம்பவங்கள் நிகழ் ந்தாலும், நான் சிரித்துக்கொண்டேதான் நிகழ்ச்சியை வழங்கியிருக் கிறேன்.

கேள்வி: திரைத்துறை அனுபவத்தை பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் எல்லாம் இருந்தது. இந்தச் சமூகம் பெண்களைச் சுற்றி ஒரு வளையத்தை அமைத்துக்கொடுத்து இந்த வளையத்துக்குள்தான் உனது வாழ்க்கை, வளையத்தைத் தாண்டிச் செல்லும் பெண்கள் குடும்பம் சார்ந்த பெண்ணாக இருக்க முடியாது என்று ஏராளமான பிற்போக்குச் சிந்தனையை ஒரு பெண்ணின்மேல் சமூகம் சுமத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தக் கோட்டைத் தாண்டுதல் என்பது ரொம்பவே அவசியமாகப்பட்டது. இந்த வாழ்க்கையை, இந்த உலகத்தை, இந்தப் பிரபஞ்சத்தை இந்தக் கண்களால் ஒருமுறைதான் பார்க்கப்போகிறேன். இந்தக் கண்களால் எனக்கு மறுதலிக்கப்பட்ட விஷயங்கள், எனக்கு மறுவாழ்வால் கிடைக்கப்போவது இல்லை. மறுவாழ்வென்றால் தமயந்தியாய் பிறப்பேனா? மறுவாழ்வில் நான் எழுதுகிறவளாகப் பிறப்பேனா? மறுவாழ்வில் நான் சினிமாவை நேசிப்பவளாக பிறப்பேனா என்று தெரியாது. அதனால், எனக்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை. இதைப் பார்க்கிறதனால் ஒட்டு மொத்த சமூகத்திற்காக நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்த நேரத்தில்தான் நான் அந்த வட்டத்தைத் தாண்டினேன்.

கேள்வி: திரைத்துறையைப் பொறுத்தவரையில் பெண்கள் நடிகை என்பதையும் தாண்டி ஒரு இயக்குனராகவோ கதையாசிரியராகவோ வரவேற்கப்படுகிறார்களா?  நடிகை என்கிற இடம் மட்டும்தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா?

பதில்: நான் 16, 17 வயதில் இருந்து விகடனில் எழுத அரம்பித்தது. இத்தனை வருடங்கள் எழுதுகிறேன். இலக்கிய உலகத்தில்தான் உச்சபட்ச துன்பங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது. திரைத்துறையில் என்னைப் பொறுத்தவரையில் நான் அதுபோன்ற ஒரு சம்பவத்தைச் சந்தித்தது இல்லை. இன்றைக்குத் திரைத்துறையில் திரைக்குப்பின்னால் பல பெண்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். நிறைய மரியாதை கிடைக்கிறது.  மற்ற பணிகளுக்கு நீங்கள் சென்றால் ஒரு மதிப்பற்ற  பார்வை இருக்கும். உழைக்கும்போது அணுக்கு நிகராக எல்லா வேலையையும் பெண்கள் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பீல்டில் துணை இயக்குனராக எல்லா வேலைகளையும் பெண் பார்க்க வேண்டியுள்ளது. என்னுடைய வயதில் எனக்கு மறுதலிக்கப்பட்ட பல வேலைகளை இன்றைக்குப் பெண்கள் பட்டாம்பூச்சிபோல் பணியாற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக வெறும் நடிகர்கள் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. நடிகை, பெண் போலீஸ் என்றெல்லாம் கிடையாது. நடிகர் என்று சொல்வது போன்றுதான் நடிகையும். அதேபோன்று என்னைப் பெண் எழுத்தாளர் என்று சொல்லுகின்ற எந்த மேடையிலும் நான் இருப்பதில்லை. மனம் சார்ந்ததுதான் எழுத்து. உழைப்பு சார்ந்ததுதான் வேலை, தொழில். எனவே, இது ஆண், பெண் பாகுபாடு இல்லை.

 கேள்வி: வெள்ளித்திரையில் பல பெண்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று சொல்லும் நீங்கள் சின்னத்திரைக்குக் கதை, திரைக்கதை எல்லாம் எழுதியுள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்: அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி வாயிலாக நேயர்களிடத்திலோ அல்லது மக்கள் மத்தியிலோ எளிதாகச் சென்றுவிட முடியும். ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் மாற்றுச் சிந்தனைக்கு வழி இருக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். தொலைக்காட்சித் தொடரில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்கிறது. ஒரு புராடக்ட் இருக்கிறது என்றால் அதைப் பற்றி எழுத விடாமல் பார்ப்பதற் குத்தான் நிறையபேர் முயற்சி செய்வார்கள். இது ஒருவகையில் சலிப்பைக் கொடுத்துவிடும். ஏனென்றால் உணர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற ஒரு தொடரை ஏதோ ஒரு சின்ன அரசியலை முன்வைத்துத் தடுக்கும்போது நிறைய வலி, வேதனையை எல்லாம் அனுபவித்துவிட்டேன். தொலைக்காட்சித் தொடர்களில் எழுதக்கூடிய எல்லாப் பெண் களுக்கும் இதுபோன்று நிகழ்வு நடக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், உறுதியாகவும் சத்தமாகவும் சொல்வேன். தொலைக்காட்சித் தொடர்களில் நிறைய அவமானப்படுத்தப்பட் டிருக்கிறேன்.

சினிமாவில் அந்த அளவுக்கு இல்லை. சினிமாவில் நிராகரிப்புகள் நிகழ்ந்திருக்கும். ஆனால், அவமானங்கள் என்பது இல்லை. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதையெல்லாம் மீறி நாம் நிற்கும்போதுதான் அந்த இடத்திற்கு இன்னொரு பெண் வருவார்கள். இதை ஒரு புலம்பல் மேடையாக நான் நினைக்கவில்லை. இதுதான் யதார்த்தம்.

கேள்வி: கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள், பாடலாசிரியராக இருந்திருக்கிறீர்கள், இயக்குனராக இருந்திருக்கிறீர்கள், ஆர்.ஜெ.வாக இருந்திருக்கிறீர்கள். இத்தனையிலும் எதில் நிறைவாக உணர்கிறீர்கள்?

 பதில்: நான் செய்கிற எல்லா வேலையிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தான் செய்வேன். எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நான் செய்ய மாட்டேன். என்னுடைய ப்ளஸ், மைனஸ் இரண்டுமே அதுதான். ஒரு வேலையில் நெருடல் இருந்தது என்றால் அதை நான் செய்ய மாட்டேன். இதுதான் என்னுடைய குணமாக இருக்கிறது. நான் செய்கிற எல்லா வேலையிலும் நெகிழ்ந்துதான் செய்வேன். ஒருசில நேரங்களில் அதில் தவறுகள் இருந்திருக்கலாம். எல்லா வேலையிலும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன்தான் செய்திருக்கிறேன். அதைவிட இது பெட்டர், இதை விட அது பெட்டர் என்கிற கேள்வி என்னிடத்தில் இல்லை.

 கேள்வி: தற்போது நீங்கள் இயக்கிக்கொண்டு இருக்கிற காயல் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

 பதில்: காயல் திரைப்படம் என்பது இன்றைய தேதியில் நம்முடைய சமூகத்தில் ஒரு பெண்ணுடைய தேர்வுக்கு எவ்வளவு முக்கியம் கொடுக்கப்படுகிறது, அது படிப்பாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெண்களுடைய  தேர்வு என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது. நான் இப்படி இருக்க விரும்புகிறேன் என்று ஒரு பெண் சொல்வதற்கு இந்தச் சமூகம் எப்படி மதிப்பளிக்கிறது, அது இல்லாதபோது, அந்தப் பெண் அனுபவிக்கிற விஷயங்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு நொடிக்கும் காற்று அடிக்கிற அடுத்த நொடிக்கும் இடையில் நடக்கிற இந்த வாழ்க்கையில் என்ன சாதிக்கப்போகிறோம். சுகுமாறன் ஒரு கவிதையில் சொல்லியிருப்பது போன்று, வளர்ப்பு மிருகம் போல், வளர்ப்பு நாய் போல், ஈகோ வைத்துக்கொண்டு நாம் இவ்வளவு வெறுப்பையும், இவ்வளவு பாகுபாடுகளையும் வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப்போகிறோம் என்கிற கேள்விக்கு நம்மை உட்படுத்தப்படுகிற படம்தான் காயல். கடல் சார்ந்த ஒரு பயணம். ரொம்ப முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தோட கதாநாயகன் லிங்கேசின் நடிப்பு. தமிழ் பையன் என்பதற்கான முக அமைப்பு என்பது லிங்கேசுக்கு அச்சு அசலாக அப்படியே அமைந்திருக்கிறது.  ஸ்வாகதா என்கிற பாடலாசிரியர் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். ரொம்ப நுட்பமான உணர்வுகளை ரொம்பத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். அனுமோள் என்பவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கேள்வி: திரைத்துறையில் முக்கியமாக இலக்கியத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்? எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும், எதையெல்லாம் அவர்கள் தாண்டி வரவேண்டியிருக்கும்?

 பதில்: என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி ரொம்ப நாள் யோசிப்பேன். எனக்குள்ளேயே மறுகுவேன். ஆனால், அவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருப்பார்கள். அப்பதான் நான் கற்றுக்கொண்டேன். புத்தர் சொன்னதுபோன்று, அவர்களுடைய வார்த்தை நம்மைப் பாடாய்ப் படுத்துகிறது என்றால், அவர்களுடைய வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் நாம் சந்தோஷமாக இருக்கலாம். திரைத்துறையில் உங்களை யாராவது அவமானப்படுத்தினால், அதைவிட்டுவிட்டு நீங்கள் அடுத்த நகர்தலுக்குச் சென்றுவிட வேண்டும். இந்த அவமானம் என்பது சக ஆணுக்கும் நடக்கத்தான் செய்யும். எல்லாத் துறையிலும் நடக்கிறது. திரைத்துறையில் மட்டும்தான் பாலியல் ரீதியாக அணுகுகிறார்கள் என்பதல்ல. டீச்சராக பணிபுரிபவர்களுக்கும், வீட்டு வேலைக்குச் செல்பவருக்கும், கட்டிடப் பணிக்குச் செல்பவருக்கும்தான் பாலியல் ரீதியான தொந்தரவு நடைபெறுகிறது. இந்த உலகம் முழுக்க பாலியல் இச்சைகள் என்றைக்கு அட்ரஸ் செய்யப்படாமல், உரையாடல் ரீதியாக இல்லாமல் இருக்கிறதோ அன்றைக்கு இதுபோன்ற மறைமுக இச்சைகளுக்கு ஒவ்வொரு பெண்களும் பிண்டங்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அதையே காரணம் காட்டி திரைத்துரைக்குப் பெண்களை வராதீர்கள் என்பது மிகப்பெரிய முட்டாள் தனம். திரைத் துறைக்குப் பெண்கள் வர வேண்டும். திரைத்துறையில் பெண்கள் நிறைய இயங்க வேண்டும். இதுவரைக் கும் பெண்க ளுடைய வாழ்க்கையை எல்லாம் ஆண்கள்தான் சொன்னார்கள். பெண் களுடைய காதல் உணர்வை ஆண்கள்தான் சொன்னார்கள். பெண்களுடைய காம உணர்வை ஆண்கள்தான் சொன்னார்கள். இதை எப்படி பார்ப்பது என்றால் பெண்கள் வேடத்தில் ஆண்கள் நடித்ததுபோன்றுதான் இருக்கிறது. இன்னும் அந்தக் காலத்தை விட்டு நாம் வெளியில் வரவில்லை. ஒரு பெண் இயல்பாக எப்படி வாழ்கிறாள் என்பதை ஒரு பெண் சொன்னால்தான் உண்டு. அப்படியென்றால் அதைச் சொல்வதற்கு நீங்கள் சினிமாத்துறைக்கு வரவேண்டும். இது காலத்தின் வரலாறாக மாறும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!