day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தோழி ராஜி அக்கா!!

ஆட்டோ தோழி ராஜி அக்கா!!

ராஜி அக்கா!

எல்லோரும் அவரை ராஜி அக்கா என்று தான் அன்பாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அவருடைய வட்டத்தில் பிரபலமானவர்.

ராஜி அக்கா ஆட்டோ ஓட்டுவதில் மட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இரவென்றும் பாராமல் தனியாக வரும் பெண்களை வீட்டில் சென்று சேர்ப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார், திருப்தி அடைகிறார். தன்னுடைய வாழ்வு எல்லோருக்கும் பயன் உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ராஜி அக்கா.

வசதியான குடும்பத்தில் பிறந்த ராஜி அக்கா, தன் பால்ய சிநேகிதனை காதலித்து தனது 19 வயதில் கோயம்புத்தூரில் உள்ள ‘ஜீவா நண்பர்கள் ஆட்டோ சங்கத்தில்’ உள்ள நண்பர்களின் உதவியால் திருமணம் செய்து கொண்டார்.

‘நான் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்னுடன் பயின்ற சினேகிதனைக் காதலித்தேன். என் வீட்டின் சம்மதம் கிடைக்காததால் என்னுடைய மாநிலமான கேரளாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்துவிட்டோம். என்ன செய்வது என்று அறியாது நானும் அவரும் ஒரு ஆட்டோ ஸ்டான்டின் அருகில் நின்று கொண்டிருந்தோம். அந்த ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்தனர். இருவருக்கும் 18 வயது நிரம்பியதா? என்ற கேள்வியை தவிர வேறு எதுவும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்குள் பேசி பணத்தை பகிர்ந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். மேலும் என் கணவருக்கு அவர்கள் பத்திரிக்கை துறையில் வேலையும் வாங்கி கொடுத்தனர்,’ என்று கூறுகிறார் ராஜி அக்கஅ.

’அந்த நண்பர்களின் நட்பை போல் இன்றளவும் நான் ஒரு  நட்பை பார்த்ததில்லை. இன்றுவரை அந்த நட்பு தொடர்ந்து வலுவாக இருக்கிறது,’ என்று தன் காதல் வாழ்க்கையை பகிர்கிறார் ராஜி அக்கா.

‘அந்த நண்பர்களிடமிருந்து  பிறருக்கு உதவி செய்தல், சமூகத்தின் மேல் அக்கறை போன்ற அனைத்தையும் கற்றுக் கொண்டேன். மேலும் நான் 12 ஆண்டுகளாக ரத்த தானம் செய்கிறேன்.  ஆறுமாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் ரத்த தானம் செய்வேன். இப்பொழுது என் மகன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மறவாது ரத்த தானம் செய்கிறான்,’ என மெய்சிலிர்க்க வைக்கிறார் ராஜி அக்கா.

‘காதல் திருமணத்தில் வரும் பெரிய பிரச்சனை பணம். அது எங்களையும் வெகுவாகவே பாதித்தது. சாப்பாட்டிற்குக் கூட கஷ்டப்பட்ட காலங்கள் உண்டு,’ என கண் கலங்குகிறார் ராஜி அக்கா.

’1998ல் நடந்த கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாங்கள் சென்னைக்கு குடியேறினோம். கோவையில் இருந்த போது குறைந்த சம்பளமாக இருந்தாலும் பந்தாவான வேலையில் இருந்தேன். ஆனால் சென்னை வந்த பிறகு வேலை தேடி அலைந்தேன். அப்போது பெண்களுக்கு எளிதாக வங்கிக் கடன் கிடைத்து விடும். முதலில் என் கணவருக்காக ஆட்டோ வாங்க வங்கிக் கடன் வாங்க முயற்சித்தேன். பிறகு நான் ஆட்டோ ஓட்டினால் என்ன என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஏற்கனவே கணவருக்கு தெரியாமல் எல்எல்ஆர் பதிவு செய்தேன். லைசன்ஸ் தேதி அறிவித்த பிறகுதான் என் கணவரிடம் கூறினேன். மேலும் உடனடியாக ஆட்டோ ஓட்ட சொல்லிக் கொடுக்கும்படி கேட்டேன். என் கணவரின் உதவியோடு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன்,’ என கூறுகிறார் ராஜி அக்கா. ஆர்வத்திற்கு அதிக திறன் உண்டு என்பதற்கிணங்க ராஜி அக்கா ஒரு மணி நேரத்தில் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டாராம்.

சென்னையின் சிங்கப் பெண்ணாக வலம் வரும் ராஜி அக்கா தனது ஆட்டோ பயணத்தை தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன. சென்னையின் டிராபிக்கை கண்டு முதலில் பயந்தாராம் ராஜி அக்கா.  அதுவும் காலை ஒன்பதரை மணி டிராபிக்கை நினைத்தாலே அவருடைய நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ளுமாம். ’ஆனால் கொஞ்ச நாளில் எல்லாம் பழகி விட்டது,’ என புன்சிரிப்போடு கூறுகிறார் ராஜி அக்கா.

சூழ்நிலைக்காக ஆட்டோ ஓட்டுவதற்கு வந்த ராஜி அக்கா, வேறு ஏதாவது வேலைக்கு வாய்ப்பு கிடைத்தாலும் ஆட்டோ ஓட்டுவதை விட்டுச் செல்லாத அளவிற்கு ஆட்டோ ஓட்டுவதில் ஈடுபாடு கொண்டுள்ளார். மேலும் வாழும் வாழ்க்கையை சமூகத்தோடு இணைத்து செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் ராஜி அக்கா.

‘ஒருமுறை இரவுப் பொழுதின் போது ஒரு பெண் அதிக நகை போட்டுக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறுவதை பார்த்தேன். அந்த ஆட்டோ டிரைவர் குடித்து இருப்பதை அறிந்தேன். ஏதும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் என் கஸ்டமரை விட்டுவிட்டு அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தேன். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. அன்று முதல் என் ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் இரவு நேரங்களில் ஆட்டோ டிரைவரை பார்த்து கவனமாக ஆட்டோவில் ஏறுங்கள் என அறிவுறுத்த தொடங்கினேன்,’ என்று பாடம் எடுக்கிறார் ராஜி அக்கா.

மாற்றம் தன்னிடம் இருந்து தொடங்கட்டும் என்ற எண்ணத்தில் விளைவாக இரவு நேரங்களில் தன் சவாரியை இறக்கிவிடும் இடத்தில் இருந்து பெரம்பூர் வரை பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தாராம் ராஜி அக்கா. புரட்சிப் பெண்ணாக தன் பரிணாமத்தை வெளிகாட்டுகிறார் அவர்.

காலையில் பள்ளி நேரத்தில் குழந்தைகளுக்கும், இரவு நேரங்களில் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் இலவசமாக வண்டி ஓட்டும் ராஜி அக்காவை ஹெல்பிங் ஏஞ்சல் (helping angel) என்று என்று கூட சொல்லலாம்!

ஒருமுறை தாய் தந்தை இல்லாத பெண் குழந்தைகளை ராஜி அக்கா சந்தித்தாராம். தாத்தா பாட்டியின் உதவியால் அந்தக் குழந்தைகள் வளர்ந்தனர். தாத்தா, வயது முதிர்ச்சியால் படுத்த படுக்கைக்கு சென்று விட்டார். அந்த பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியானது. அந்தப் பெண் குழந்தைகளின் படிப்பிற்காக ராஜி அக்காவும் பாட்டியும் பல டிரஸ்ட்களை அணுகினார்கள். இறுதியில் அவர்களின் படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. இறுதியில் அந்தப் பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ராஜி அக்காதான் ஏற்றாராம்.

’சாதாரணமாக ஒரு நாளில் எட்டு மணி நேரம் ஆட்டோ ஓட்டுவேன். அன்று முதல் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையும் நான்காவது சனிக்கிழமையும் 18 மணிநேரம் ஆட்டோ ஓட்ட தொடங்கினேன். அந்த இரு தினங்களும் எனக்கு சர்வீஸ் டே(service day),’ என்கிறார் ராஜி அக்கா.

‘சர்வீஸ் டே அன்று வரும் பணத்தை போட ஒரு பெட்டியை ஆட்டோவில் வைத்திருப்பேன். பல நபர்கள் ஏன் இந்தப் பெட்டி எனக் கேட்டு அதிக பணம் போடுவார்கள். அந்தப் பணத்தை வங்கியில் சேகரித்து குழந்தைகளின் படிப்பு செலவினை கவனிக்கத் தொடங்கினேன். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணிற்கு பல சவால்கள் இருந்தாலும் அதற்கு இணையாக நல்லவர்களும் இருக்கிறார்கள்.’ என மனம் நெகிழ்கிறார் நம் ஹெல்பிங் ஏஞ்சல்.

இந்தச் செயல் இந்த குழந்தைகளோடு முடிவடைய போவதில்லை. ராஜி அக்காவும் அவருடையதோழி பரமேஸ்வரியும் இணைந்து ஒரு டிரஸ்ட்டை உருவாக்க உள்ளனர். ஆட்டோ அக்கா பெண்களுக்கான கல்வி தொண்டு நிறுவனம் (Aauto Akka Girls Educational Trust) என்ற பெயரில் இது தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும் என பெருமிதத்துடன் கூறுகிறார் ராஜி அக்கா.

மேலும், ‘பெண்கள் சமூக வலைதளங்களை சரியான முறையில் கையாள வேண்டும். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். உண்மையாக தன் கருத்துக்களை தெளிவாக உரக்க கூற வேண்டும். கண்டிப்பாக படிக்க வேண்டும். பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது,’ என பெண்களுக்கு அறிவுறுத்துகிறார் ராஜி அக்கா.

’நான் என் பெற்றோர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்தினேன். அதனால் பல கசப்பான நிகழ்வுகளை கடந்து வந்துள்ளேன். இன்று நான் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதைப் போல் உணரலாம். ஆனால் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் பல விஷயங்களை இழந்துள்ளேன். என் குழந்தைகளுடன் நான் செலவழித்த காலம் மிகக் குறைவு. மேலும் என் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உணவு ஊட்டிய ஞாபகம் கூட எனக்கு இல்லை,’ என கண் கலங்குகிறார் ராஜி அக்கா.

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையோடு ஐந்து வயது வரையாவது தன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று கண்ணீருடன் கூறுகிறார் ராஜி அக்கா.

தன் வீடு, தன் குடும்பம் எனக் கருதும் இக்காலத்தில் பிறருக்கு உதவி செய்து அதில் இன்பம் காணும் ஹெல்பிங் ஏஞ்சல்  ராஜி அக்காவை நாமும் மனதார வாழ்த்தலாமே!!

-காயத்ரி

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!